உவர்நிலத்தை சீர்திருத்தம் செய்வது எப்படி?

உவர்நிலத்தை சீர்திருத்தம் செய்வது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது

  • சாகுபடி நிலத்தில் தண்ணீரில் கரையும் உப்புக்கல் அளவுக்குமேல் அதிகமாக இருந்தால் அது உவர் நிலமாகும். போதிய மழையின்மையாலும், நிலத்தில் உள்ள உப்புக்கல் கரைந்து வெளியேற முடியாமல் போவதும், கோடைகாலத்தில் மழையின்மையால் ஏற்படும் வெடிப்புகளில் இருந்தும் மண்ணின் மெல்லிய துவாரங்களில் இருந்தும் உப்புக்கல் நிலத்தின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படுவதாலும் பாசனம் செய்யப்படும் இடங்களில் உள்ள கடைமடை பகுதியில் வந்து சேரும் உப்புகளாலும், உப்பு நிறைந்த நீரால் பாசனம் செய்வதாலும் மற்றும் வடிகால் வசதியற்ற பாசனத்தாலும் உவர் நிலம் உண்டாகிறது.
  • இதனால் உவர்நிலங்களில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், பயிருக்கு கிட்டாத நிலையிலும் இருக்கும். உப்புக்கள் அதிகமாக இருந்தால் பயிரின் வேர்கள் சத்துக்களையும், நீரையும் உறிஞ்சமுடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகிறது.
  • இந்த நிலத்தை சீர்திருத்த, உப்பினை நீக்க நல்லநீரை தேக்கி வடிப்பதால் உவர்நிலத்தை சீர்படுத்த முடியும். நீரை தேக்குவதற்கு முன்பு நிலத்தை நன்கு சமன்படுத்த வேண்டும். அல்லது சரிவுக்கு ஏற்றவாறு சிறு, சிறு பாத்திகளாக பிரித்து வரப்புகள் அமைத்து நல்ல நீர் அல்லது மழை நீரிட்டு உழவு செய்து வடிகால் வசதியை முறையாக அமைக்க வேண்டும்.
  • நிலத்தை சுற்றிலும் 1-3 அடி ஆழமுள்ள வடிகால் வெட்டி உப்புநீரை அவ்வடிகால்கள் மூலம் வெளியேற்ற வேண்டும். அடிக்கடி குறைந்த அளவில் நீர் பாய்ச்சி வெளியேற்ற வேண்டும். சொட்டு நீர் பாசனம் சாலச் சிறந்தது.
  • அதிக அளவு பசுந்தழை, தொழு உரம் மற்றும் கம்போஸ்ட் உரங்களை இட வேண்டும்.
  • உவரை தாங்கி வளரக்கூடிய கேழ்வரகு, பருத்தி, மிளகாய், தக்காளி, சூரியகாந்தி, உவர்புல் ஆகியவற்றை பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *