களர் – உவர் நிலங்களில் பயிரிடும் தொழிற்நுட்பம்

நன்செய் நிலத்தில் மட்டுமல்ல; களர்-உவர் நிலங்களில் பயிர் செய்து சாதிக்கலாம் என்கிறார் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

மக்கள்தொகை அதிகரித்துச் செல்லும் இந்தக் காலக்கட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்துவருகிறது. இதனால், களர்-உவர் நிலங்களைச் சீர்திருத்தி சாகுபடி செய்து உணவு உற்பத்தியை மேம்படைய செய்வது இன்றைய காலக்கட்டத்தின் அவசியமாகிறது.

தமிழகத்தில் 4.7 லட்சம் ஹெக்டேர் களர்-உவர் நிலங்கள் இருக்கின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம், திருச்சி, சேலம், தருமபுரி, வேலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் களர் -உவர் நிலங்கள் அதிகளவு உள்ளன.

களர் நிலம்:

களர் நிலம் என்றால் மண்ணில் களித்துகள்களில் சோடிய அயனிகள் அதிகமாகப் படிந்திருக்கும். இவ்வகை மண்ணின் கார அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். களர் மணி வயலில் மழை அல்லது நீர்பாசனத்தின் மூலம் மண்ணின் கட்டமைப்பு சிதைந்தும், மண்ணின் நீர் கடத்தும் திறன் குறைந்தும் நீர்த் தேக்கம் உண்டாகிறது. மேலும், பயிர்களின் வேர் சுவாசம் குறைந்தும், கோடியில் மண் இறுகியும் காணப்படும்.

உவர் நிலம்:

உவர் நிலங்களில் அதிகமாக நீரில் கரையக் கூடிய உப்பின் அளவு அதிகமாக இருந்தால், அது உவர் நலம் என்று பெயர். பெரும்பாலும் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், கால்சியம் குளோரைடு, மக்னீசியம் சல்பேட் போன்ற உப்புகள் பெருமளவில் கரைந்திருக்கும். இதனால் வேர்களின் நீர் உறிஞ்சும் சக்தி குறைந்துவிடும். அவ்வாறு சிரமப்பட்டு உறிஞ்சும்போது உப்புகளும் அதிகளவு உறிஞ்சப்பட்டு பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

தொழில்நுட்பம்:

  • மண் பரிசோதனை மூலம் உவர் தன்மை, களர் தன்மையைக் கண்டறிய வேண்டும். நிலத்தைப் புழுதிபட உழுது தயார் செய்ய வேண்டும். நன்குத் தூளாக்கப்பட்ட ஜிப்சத்தை சிபாரிசு செய்யப்பட்ட அளவு இட வேண்டும். உவர் தன்மை மட்டுமே இருந்தால் ஜிப்சம் இட வேண்டிய அவசியம் இல்லை. ஜிப்சத்தை மண்ணுடன் ஆழமாகக் கலக்கக் கூடாது.
  • வயலை 30 சென்ட் அளவு கொண்ட சிறு பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். முதில் பாத்தியின் 4 பக்கங்களிலும் ஆழமான (30 செ.மீ.) வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  • பின் மத்திய வடிகால், பக்க வடிகால் வாய்க்கால் அமைத்து, மத்திய வடிகால் வாய்க்காலை முக்கிய வடிகால் வாய்க்காலுடன் இணைக்க வேண்டும்.
  • வாய்க்கால் பாசன நீரை வயலில் கட்டி 48 மணி நேரம் வைத்திருந்து இயற்கையாகக் கசிந்து வடியும்படி செய்ய வேண்டும்.
  • 48 மணி நேரம் கழித்து, அதிகமாக உள்ள தண்ணீரை வடித்துவிட வேண்டும்.
  • வயலில் தண்ணீர் கட்டி நிறுத்தியப் பிறகு வடிப்பதை 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும்.
  • ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பூண்டு வதையை விதைத்து, 40 நாள்கள் கழித்து வளர்ந்துள்ள பசுந்தாள் உரத்தை நிலத்திலேயே மடக்கி உழ வேண்டும்.
  • தக்கைப்பூண்டு விதைக்க முடியாத நிலையில், பிசுந்தழை உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இட்டு உழவு செய்ய வேண்டும்.
  • சிபாரிசு செய்யப்பட்ட அளவு சர்க்கரை ஆலைக் கழிவை ஏக்கருக்கு 2 டன் என்ற அளவில் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.

பயிர் செய்யும் முறை:

  • களர்-உவர் நிலங்களைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களான திருச்சி – 1, 2, 3, கோ – 43 போன்ற ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • கேழ்வரகு, பருத்தி, கரும்பு, மிளகாய், வெண்டை, கொத்தவரை, சோளம், வரகு, சூரியகாந்தி போன்ற பயிர்கள் களர் – உவர் தன்மையை தாங்கி வளரக் கூடியவையாகும்.
  • பரிந்துரைக்கப்பட்ட தழை சந்து அளவைவிட 25 சதவீதம் கூடுதலாக (நிலத்தை 4-ஆக பிரித்து) இட வேண்டும்.
  • கடைசி உழவுக்குப் பின் ஹெக்டேருக்கு 40 கிலோ என்ற அளவில் துத்தநாக சல்பேட் இட வேண்டும்.
  • இவ்வகை மண்ணில் கோடையில் விவசாயம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • நெல், பருத்தி அல்லது நெல் பாசிபயறு அல்லது நெல், தட்டை பயிறு, உளுந்து போன்ற பயிர் சுழற்சி முறையைக் கையாள வேண்டும்.
  • இவ்வகை மண்ணில் ஊட்டச் சத்துகள் சரிவர கிடைப்பதில்லை. எனவே, அதிக அளவில் தொழுஉரம், தழைஉரம் இட வேண்டும்.
  • இந்த மண்ணுக்கு தழைச்சத்தை அம்மோனியம் சல்பேட் வடிவிலும், மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் வடிவிலும் சாம்பல் சத்தை பொட்டாசியம் சல்பேட் வடிவிலும் இட வேண்டும். மேலும் துத்தநாகச் சல்பேட் இந்த நிலங்களுக்கு மிக முக்கியம்.
  • ஜிப்சம் எளிதாகக் கிடைக்காத சூழ்நிலையில் களர் நிலத்தை எரிசாராய ஆலைக்கழிவின் மூலம் சீர்த்திருத்தலாம். எரிசாராய ஆலைக்கழிவில் கணிசமான சுண்ணாம்புச்சத்து உள்ளது. மேலும், இது அமிலத் தன்மையுடன் இருப்பதால் மண்ணில் உள்ள சுண்ணாம்புச்சத்தை கரையச் செய்து களர் நிலச் சீர்த்திருத்தத்துக்கு உதவுகிறது.
  • ஒரு ஏக்கர் நிலத்தை சீர்த்திருத்துவதற்கு 2 லட்சம் லிட்டர் எரிசாராய ஆலைக்கழிவை வயலில் விட வேண்டும். 7 நாள்களுக்குப் பிறகு 10 முதல் 15 செ.மீ. உயரத்துக்கு நன்னீரைத் தேக்க வேண்டும். பிறகு 24 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்க வேண்டும். நெல்பயிரில் ஒரு குத்துக்கு 3 முதல் 5 நாற்றுகளை நட வேண்டும்.
  • களர்-உவர் மண்ணுக்கு அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும். மாற்றுக்கால் பாசனம் மிகவும் நல்லது. சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் நல்ல பயன் தரும்.
  • மானாவாரி களர் – உவர் நிலங்களில் பருத்தி, சோளம், வரகு, சூரியகாந்தி போன்ற பயிர்கள் பயிர் செய்து அதிக லாபம் அடையலாம்.
  • களர் – உவர் மண் சீர்த்திருத்தம் செய்வதோடு மட்டுமில்லாமல், பயிர் மண் உர நீர் நிர்வாக முறைகளையும் செவ்வனேக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • இவ்வகை நிலங்களைக் விவசாயிகள்  விஞ்ஞான ரீதியில் விவசாயம் செய்து நல்ல விளை நிலங்களாக மாற்ற முடியும். மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 04427452371 என்ற தரைவழித் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *