தமிழ்நாட்டில் 3 லட்சம் எக்டேர் நிலப்பரப்பு உப்புத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தன்மையைக் குறைத்தால் மட்டுமே பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறும். எப்படி இந்நிலங்களை மேம்படுத்துவது? . தமிழ்நாட்டில் 2 லட்சம் எக்டேர் நிலம் களர் நிலமாகவும், 1 லட்சம் எக்டேர் நிலம் உவர் நிலமாகவும் உள்ளது. இதில் 99% நிலங்கள் தரிசாக, வீணாக உள்ளன. இந்நிலங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் உப்புக்களை தகுந்த சீர்திருத்த முறைகள் மூலம் மாற்ற வேண்டும். மாற்றினால் சிறந்த பயிர் விளையும் பூமியாக மாற்ற முடியும்.
களர் நிலம்:
- களர் நிலங்களில் களி மண்ணின் மீது சோடிய அயனிகள் அதிகமாகப் படிந்து விடுகின்றன. அதனால் மண் இறுகி, காற்றோட்ட வசதி இல்லாமல் இருப்பதால் வேரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
- மண்ணில் கார அமிலநிலை அதிகம் இருப்பதால் பயிரால் ஊட்டச் சத்துக்களைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ள முடிவதில்லை. நுண்ணுயிர்களின் பெருக்கமும், செயல்பாடும் பாதிக்கப்படுகிறது.
- மேலும் சோடியம் உப்புக்கள் செடியினுள் அதிகம் சென்று நச்சுப் பொருளாக அமைகின்றன. எனவே செடிகள் வளர்ச்சி குன்றி விடும்.
களர் நிலம் சீர்திருத்தம் செய்வது எப்படி
- ஜிப்சம் என்ற கால்சியம் சல்பேட் சீர்திருத்தியை களர் மண்ணுடன் நன்கு கலக்கி, சேற்றுழவு செய்து, நல்ல நீருடன் தேங்கச் செய்து, பின் வடிகால் மூலம் வடியச் செய்தால் சோடியம் அயனிகளை அகற்றி விடலாம்.
உவர் நிலம் :
- கார அமில நிலை 8.5க்கு மேற்படாமல் இருக்கும் நிலத்தில் நீரில் கரையும் உப்புக்கள் வெண்மை நிறமாகப் படிந்து இருக்கும் இந்த உப்புக்களால் பயிரின் வேர்களுக்கு நீரை எளிதில் உறிஞ்சும் சக்தி குறையும். சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற உப்புக்கள் செடியுள் சென்று நச்சுப் பொருளாக மாறி பயிர் பாதிக்கப்படும்.
உவர் நிலம் சீர்திருத்தம் செய்வது எப்படி
- உவர்நிலத்தை சிறு பாத்திகளாகப் பிரித்து உவர் அற்ற நீர், மழைநீர் அல்லது வாய்க்கால் நீர் பாய்ச்சி, தேக்கி, வடிகால் மூலம் உப்புக்களை வெளியேற்றிப் பின் ராகி, பருத்தி, குதிரை மசால், தக்காளி, சாகுபடி செய்ய வேண்டும்.
- இயற்கை உரம், காம்போஸ்ட் உரம் இட வேண்டும்.
- திருச்சி, மணப்பாறை சாலையில், நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் “”களர் உவர் ஆராய்ச்சி மையத்தை” அணுகி ஆலோசனை பெறலாம்.
– எம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர்
09750333829
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்