தேவை – மண் புரட்சி!

எங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ”இங்கே இயற்கை அங்காடிகளுக்கு பஞ்சமில்லை. வாடிக்கையாளர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இயற்கைக் காய்கறிகள் தான் போதிய அளவில்  கிடைக்கவில்லை.” என்கிறார் இயற்கை அங்காடி கடை வைத்திருக்கும் ஒருவர்.

இயற்கை உரமிட்டு வளர்ந்த காய் கனிகளைத் தேடிச்சென்று தன்னையும், தன் குழந்தைகளையும் காக்க முற்படுகிறான் மனிதன். தவறில்லை. ஆனால், அவன் எண்ணத்திற்கும், தேவைக்கும் ஏற்ப இங்கே இயற்கை விளைபொருள்கள் கிடைக்கின்றனவா? என்றால், அழுத்தமாகவே சொல்லலாம் “இல்லை” என்று. காரணம் மண்.!

அடுத்தத் தலைமுறைக்கு சொத்து சுகங்களையும் சேர்த்துவைக்க அல்லாடும் நாம், அவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கப்போகும் இந்த மண்ணின் மீது துளியும் அக்கறை காட்டுவதில்லை. கோடிகளில் பணம் இருந்தாலும் அதை சமைத்து உண்டு உயிர் வளர்க்க முடியாது. ”ஒத்த நெல்லு போட்டா… கொத்து நெல்லு காய்க்கும்… பூமித்தாய் அள்ளிக் கொடுப்பதில் கர்ணனுக்கு அன்னை” –  கிராமங்களில் புழக்கத்தில் இருக்கும் சொலவடை இது. ஆனால் இன்று, வானம் பார்த்த பூமிகள் எல்லாம் வானுயர கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. காரணம் கேட்டால், மண்ணின் மீது பழியைப் போட்டுவிட்டு கடந்து செல்கிறார்கள் விவசாயிகள். கோடை மழையை நம்பி, பார்த்து பார்த்து விதைத்த விதைகள், முளைவிட்டு தளிர்த்த நேரத்தில், தன்னிடம் ஈரம் இல்லாததால், அத்தனையையும் வாடவைத்து, வதங்க வைத்துவிடும் இதே மண் தான், சிறு மழை பெய்தாலும், நாம் விதைக்காத செடியைக் கூட தன்னில் தளிர்க்க வைத்து வியக்க வைக்கிறது.  இப்படிப்பட்ட மண்ணைத்தான் “பலனை கொடுக்கவில்லை ” என்று பழிக்கின்றனர் விவசாயிகள். அப்படியானால், மண்ணின் கருணை நீர்த்துப் போய்விட்டதா? அதன் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதா?  என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் ஒரு முறை கேள்வி எழுப்பப்பட்டது.

”மண் எப்போதுமே அதன் தன்மையை இழக்காது. நாம்தான் அதன் தனித் தன்மையை இழக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழனின் விவசாய வரலாறு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னர் இங்கே விவசாயம் நடக்கவில்லை. அதற்கு பதில், வர்த்தகம்தான் நடந்துள்ளது. பசுமைப்புரட்சி என்ற பெயரில், மண்ணுக்கு ஒவ்வாத கோடிக் கணக்கான டன் ரசாயன உரங்களை மண்ணில் கொட்டி, விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாக கூறி, அதை பாழ்படுத்தியுள்ளோம்.

ஒரு மாடு இயற்கையாக பால் சுரப்பதற்கும், அதே மாட்டுக்கு ஊசிபோட்டு பால் கறப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான், மண்ணில் இயற்கையாக பயிர்கள் வளர்வதற்கும், உரங்கள் போட்டு பயிர்கள் வளப்பதற்கும் உள்ள வித்தியாசம். இந்த மண் உண்மையிலேயே அதிக உயிர்சத்து கொண்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நைட்ரஜன் மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் பொன்மொழிகள்

மரம், செடி, கொடிகள், புல், பூண்டுகள் மண்ணில் மட்கியும், ஆடு, மாடு, கோழிகளின் எச்சங்கள் மண்ணில் கலந்தும் உள்ள நிலையில், தன்னிடம் உள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களை கொண்டு இவை இரண்டையும் இணைத்து, தனக்குத் தேவையான சத்துக்களை மண், தானே தயார் செய்துகொள்ளும். எப்போது செயற்கை உரங்களின் கை உயரத் தொடங்கியதோ, அப்போதிருந்து சத்துகளை தயார் செய்துகொள்ளும் மண்ணின் முனைப்பு மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.

இதனால், இயற்கையாக செயல்பட முடியாத நிலைக்கு மண்வளம் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து ரசாயன உரங்கள் பயன்படுத்தியதால், தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்றே மண்ணுக்குப் புரியவில்லை. நம் மண்ணை மீட்க வேண்டும் என்றால் செயற்கை உரங்களின் பயன்பாட்டை நிறுத்தி இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். தன்னையும் காப்பாற்றி, மண்ணையும் காப்பாற்றும் விவசாயிதான், உண்மையிலேயே ஒரு சமுதாய சிந்தனையுள்ள மனிதனாக இருக்க முடியும்.” என்றார் நம்மாழ்வார்.

மண்ணுக்கு மகுடம் சூட்டி அழகு பார்க்க வேண்டாம். அதனை மலட்டுத்தன்மையில் இருந்து மீட்டாலே போது. சரி. இயற்கை விவசாயத்திற்கு மாற முடியுமா? நிச்சயம் மாறலாம். ஆனால் அது அத்துணை சுலபம் இல்லை.

“பல ஆண்டுகளாக செயற்கை உரங்களை உள்வாங்கி வெடித்துக்கிடக்கும் மண்ணுக்குப் புத்துயிர் கொடுப்பது எளிதான காரியம் இல்லை. முதலில் நிலத்தில் கொட்டப்படும் செயற்கை உரங்களை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக மாட்டுச்சாணம், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் இயற்கை உரங்களை போட்டு பயிரிட்டால் சல்லிக்காசு கூட கிடைக்காது. விளைச்சலே இருக்காது. ஏனென்றால் செயற்கை உரங்களுக்கு மண்ணை நாம் அடிமையாக்கிவிட்டோமே. அதன் அடிமைத் தனத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சில காலம் ஆகும்.” என்கிறார்கள் இயற்கை விவசாயம் செய்பவர்கள்.

தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் விளை நிலங்களை தேர்ந்தெடுத்து அம்மண்ணின் இயல்பை சோதித்து, அதனை இயற்கை விவசாயத்திற்கு ஏற்றபடி மாற்றும் சோதனை முயற்சியில் முதலில் ஈடுபட வேண்டும். இம்முயற்சியில் அப்பகுதி விவசாயிகளையும் இணைத்துக்கொள்ளலாம்.

சோதனை நிச்சயம் வெற்றி பெறும். ஏனென்றால் மண்ணில் இயல்பை அடைய அது எப்போதும் காத்துக்கொண்டு தான் இருக்கிறது. செயற்கை முறையில் இருந்து இயற்கை முறைக்கு மண்ணை மாற்ற ஆகும் காலம் வரை அப்பகுதி விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கொடுக்கலாம். கடன் கொடுத்துக் கொடுத்து மீண்டும் மீண்டும்  விவசாயிகளை கடனாளி ஆக்கும் தொகையை விட இதற்கு குறைவாகத்தான் செலவு பிடிக்கும். அது நிரந்தர தீர்வை நோக்கி கொண்டு செல்லும்.

சோதனை முடிந்தவுடன், இந்த முறையை தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்கும் கொண்டு சென்று அனைத்து நிலங்களையும் இயற்கை முறைக்கு மாற்றியமைக்கலாம்.

இதனை மாபெரும் மண் புரட்சியாக நாம் கையில் எடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் முன்னணி விவசாய பூமியாக தமிழகம் திகழும் என்பதில் ஐயமில்லை.!

நம் சந்ததிகளுக்கு இயற்கையான உணவுகளை கொடுக்கலாம். இயற்கை விளைப் பொருள்களின் ஏற்றுமதியால் தமிழகத்தின் பொருளாதாரமும் கணிசமாக உயரும். இப்படி மண் புரட்சியால் ஏற்படப் போகும் நம்மைகள் ஏராளம்.! அரசு கவனம் கொள்ளுமா?

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தேவை – மண் புரட்சி!

  1. Parthiban says:

    நான் இயற்கை முறையில் ( முழுவதும் ) 1 ஏக்கர் அளவிற்கு கத்தரி சாகுபடி செய்கிறேன் . தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும் – 9994982498 ( 8am-6pm )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *