தெரிந்தோ, தெரியாமலோ இரண்டு தலைமுறை விவசாயிகள் பசுமைப் புரட்சி பரிந்துரைத்த ரசாயனங்கள், வீரிய விதைகள் போன்றவற்றைத் தங்களின் நிலத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றின் பாதகமான விளைவுகளை மனப்பூர்வமாக உணர்ந்தவுடன், இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்குத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது.
“இப்படி விவசாயிகள் மாற நினைத்தாலும், உடனடியாக மாற முடியாது. ஏனென்றால், மண்ணில் பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருட்களின் தன்மையை அவ்வளவு சீக்கிரமாக மண்ணிலிருந்து வெளியேற்றிவிடமுடியாது” என்கிறார் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில். நம் விவசாய நிலங்களுக்கு வீரிய விதைகள் வந்த முன்கதையையும் விவரிக்கிறார்.

வீரிய விதைகளின் தொடக்கம்
“1960-களில் இந்தியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பட்டினிச் சாவுகளைத் தடுக்க அன்றைக்கு விவசாயத் துறை அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இடம்பெற்ற ஒருவர்தான் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன். இந்தக் குழுவின் அறிவுறுத்தலின்படி அமெரிக்காவிலிருந்து கோதுமை ரகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அத்துடன் பன்னாட்டு வீரிய விதைகளும் வந்தன. இத்துடன் வெளிநாட்டு களையான பார்த்தீனியமும் நம்முடைய நிலத்தில் ஆங்காங்கே விழுந்தது. பசுமைப் புரட்சி முழு வீச்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறையைச் சமாளித்த பின்பும் அதிக மகசூல் பெறும் ஆசையில் விவசாயிகள் வேதிப்பொருட்களை கூடுதலாகச் சார்ந்திருக்க ஆரம்பித்தார்கள். விளைவு? வீரிய விதைகளும், ரசாயனங்களும் விவசாய நிலங்களில் பரவலாக்கப்பட்டன. வீரிய விதைகளின் பயன்பாட்டால் நம் மண்ணுக்கே இயல்பான பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்பட்டது. இப்படித்தான் நம் மண்ணில் வீரிய விதைகளும், ரசாயனங்களும் வேரூன்றின.
நீண்டகாலத்துக்கு ரசாயனத்தைப் பயன்படுத்திய விவசாய நிலத்தின் மண், உடனடியாக இயற்கை விவசாயத்துக்கு மாறாது. பூச்சிக்கொல்லி எச்சங்கள் பல ஆண்டுகளுக்கு அந்த நிலத்தில் தங்கியிருக்கும். பூச்சிக்கொல்லி பயன்படுத்திய நிலத்தில் விளையும் பொருட்களைக் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள்வரை, இயற்கை முறை விவசாயத்தில் விளைந்த பொருட்கள் என உறுதி தர முடியாது என்கிறது இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் பன்னாட்டு அமைப்பு (IFOAM)” என்கிறார் முனைவர் சுல்தான் இஸ்மாயில்.
மூன்றாண்டு முட்டுக்கட்டையைத் தகர்க்க
ரசாயனம், பூச்சிக்கொல்லி போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, இயற்கை முறை விவசாயத்துக்குத் திரும்ப நினைக்கும் ஒரு விவசாயி, மேற்கண்ட முட்டுக்கட்டையை மூன்று ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிப்பது எப்படி?
இதற்குப் பதிலாய் Eco-remediation of Pesticide Influenced Soil என்னும் தலைப்பில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறார், சென்னை புதுக் கல்லூரி மாணவி ராமலக்ஷ்மி. எளிய குடும்பப் பின்னணியைக் கொண்ட இவருடைய தந்தை மந்திரமூர்த்தி, உணவுவிடுதி நடத்திவருகிறார்.
புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக வேண்டும் என்பதுதான் ராமலக்ஷ்மியின் விருப்பமாக இருந்திருக்கிறது. ஆனால் அதற்கு இடம் கிடைக்காமல் கலங்கி நின்றார். அப்போது புற்றுநோய்க்கு எதிராக இப்படியும் பங்களிக்கலாம் என இந்த ஆராய்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக இருந்தவர், புதுக் கல்லூரியிலிருந்து தற்போது ஓய்வுபெற்றுவிட்ட பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில். அத்துடன் நின்றுவிடாமல் விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் அப்துஸ் சபூரின் வழிகாட்டுதலுடன், ராமலக்ஷ்மியின் ஆய்வைத் தொடர்வதற்கும் உதவியிருக்கிறார்.
ஒரு பிடி மண்
“நீண்டகாலம் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம், இயற்கை விவசாயத்தை ஏற்று மகசூல் தரும் வகையில் உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மீட்டெடுக்க முடியும். அந்த நிலத்தின் தன்மை தொடர்பாக அறிய அறிவியல்ரீதியான பல பரிசோதனைகளையும் தொழில்நுட்ப முறைகளையும் ஆய்வகத்தின் உதவியோடுதான் சாதாரணமாகச் செய்ய முடியும். இந்த நடைமுறைகளை ஒரு சாமானிய விவசாயியால் செய்ய முடியாது. இந்த இடத்தில்தான் ராமலக்ஷ்மியின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆய்வின்படி விவசாய நிலத்துக்கு ஆய்வகம் வரவேண்டியதில்லை, நிலத்தின் மண் அடுக்கும் (Soil Bed) ஆய்வகத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. அன்றாடம் நம் வீட்டுச் சமையலறையில் பயன்படுத்தப்படும் சில கார்பன் மற்றும் நைட்ரஜன் சார்ந்த பொருட்களோடு, ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலத்தின் ஒருபிடி மண்ணைச் சேர்த்துப் பார்த்தோம். ரூ. 100 முதல் ரூ. 500 வரை மதிப்புள்ள சமையலறை பொருட்களிலிருந்து பெருகும் நுண்ணுயிரிகள் பாதிக்கப்பட்ட அந்த நிலத்தை வெகு சீக்கிரமாக இயற்கை விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக மாற்றிவிடும் என்கிறார் முனைவர் அப்துஸ் சபூர்.
நுண்ணுயிரிகளின் பலம்
“விவசாய நிலத்தில் பலவகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சிக்கொல்லி மீத்தைல் பாரத்தியான். இந்த ரசாயனத்தால் சரும நோய், சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ரசாயனம் பயன்படுத்தப்பட்ட மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளைக் கல்லூரி ஆய்வகத்தில் பரிசோதித்துப் பார்த்ததில், குறிப்பிட்ட அந்த ரசாயனத்தை எதிர்க்கும் திறன் நுண்ணுயிரிகளுக்கு உண்டாகியிருந்ததைப் பார்த்தோம். ஆகவே, சில சமையலறைப் பொருட்களோடு ரசாயனம் பயன்படுத்தப்பட்ட நிலத்தின் மண்ணையும் சேர்த்துவைப்பதன் மூலம் அதில் உருவாகும் நுண்ணுயிர்களுக்கு ரசாயனத்தின் வீரியத்தை அழிக்கும் திறன் அதிகரிப்பதை உணர்ந்தோம்.
இந்தக் கலவையையும் நம் நாட்டு மண்புழுக்களையும் சேர்த்தால் பலன்கள் விரைவாகக் கிடைக்கும். ரசாயனத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை இயற்கை வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக, குறுகிய காலத்தில் மாற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்து ஆய்வு நடத்திவருகிறோம். இதுதான் என்னுடைய ஆராய்ச்சிக்கு அடிப்படை. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்ததும், இந்த ஆய்வின் முடிவை நம் நாட்டு விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்போகிறேன்” என்றார் ராமலக்ஷ்மி நெகிழ்ச்சியோடு.
ஆய்வு மாணவி ராமலக்ஷ்மி தொடர்புக்கு: mramalakshmi25@gmail.com
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்