மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைந்து, அதிக மகசூல்

மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைவதுடன் அதிக மகசூலும் பெற முடியும் என்று வேளாண் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.பெரம்பலூர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவரி பயிராக ஆடிப் பருவத்தில் பருத்தி பயிரிட மழையை எதிர் நோக்கி விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த தருணத்தில் அடியுரம் இடுவது என்பது மிகவும் அவசியம். பொதுவாக பயிர்களுக்கு அடியுரம் இடுவது இரண்டு வகைகளை சார்ந்திருக்கிறது.
அவற்றில் ஒன்று மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிடுவது, மற்றொன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொது பரிந்துரைப்படி உரமிடுவது.

மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிடுவது என்பது பயிர் செய்ய அடியுரம் இடுவதற்கு முன்னர் மண்ணை மண் பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்து அதன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு எஞ்சியது போக மீதம் தேவைப்படும் உரங்களை அடியுரம், முதல் மேலுரம், இரண்டாவது மேலுரம் என பிரித்து இடுவதாகும்.

மற்றொரு முறையான பொது பரிந்துரைப்படி உரமிடுவது என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமானது ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மண் வகைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பயிர்களின் சீரான வளர்சிக்கு தேவைப்படும் உர அளவுகளை துல்லியமாக கண்டறிந்து வழங்கியுள்ளது.

கரிசல் மண் பகுதிகளில் பருத்தி பயிரிடுவதற்கு மொத்தமாக எக்டருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் , 260 கிலோ யூரியா 100 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இடவேண்டும். இவைகளில் எக்டருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 130 கிலோ யூரியா, 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடியுரமாகவும் மீதமுள்ள 130 கிலோ யூரியா மற்றும் 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இரண்டாக பிரித்து முதல் மற்றும் இரண்டாது மேலுரங்களாக இட வேண்டும்.

செம்மண் பகுதிகளில் பருத்தி பயிரிடுவதற்கு மொத்தமாக எக்டருக்கு 187 கிலோ சூப்பர் பாஸ்பேட், 130 கிலோ யூரியா, 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இட வேண்டும். இவைகளில் எக்டருக்கு 187 கிலோ சூப்பர் பாஸ்பேட், 65 கிலோ யூரியா, 25 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடியுரமாகவும் மீதமுள்ள 65 கிலோ யூரியா மற்றும் 25 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இரண்டாக பிரித்து முதல் மற்றும் இரண்டாவது மேலுரங்களாக இடவேண்டும்.

இவ்வாறு மண் பரிசோதனை பரிந்துரைப்படியோ பொது பரிந்துரைப்படியோ உரமிடுவதால் தேவையற்ற உரங்கள் இடுவதை தவிர்த்து குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். மேலும் செடிகளின் சரியான வளர்ச்சியை பாதுகாப்பதால் அதிக பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை தவிர்க்க முடிகிறது. அதிக அளவிலான ரசாயன உரங்களால் ஏற்படும் மண் வளம் குன்றுதலை தடுத்து மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். அத்தோடு மட்டுமல்லாமல் மண்ணில் ரசாயன உரங்களின் தேக்கம் இல்லாததால் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு பயிருக்கும் தொடர்ந்து மண் பரிசோதனை அடிப்படையிலோ பொது பரிந்துரைப்படியோ உரமிட்டு பயிர் செய்தால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு நிலையான மகசூலும் பெறப்படுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை அடிப்படையிலோ அல்லது பொது பரிந்துரைப்படியோ உரமிட்டு செலவை குறைத்து அதிக மகசூலுடன் மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டும்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைந்து, அதிக மகசூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *