கண்மூடித்தனமாக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதாலும், தொடர்ந்து ஒரே பயிர்களை பயிர் செய்வதாலும், நமது விவசாயத்தின் அடிப்படையான சாணம், இயற்கை இலை, தழைகளை தவிர்த்து வருவதாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மண்ணில் இயற்கையான சத்துக்கள் (Soil health) அழிந்து வருவதை, மாநில இயற்கை வேளாண்மை கொள்கை சாசனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வரும் காய்கறிகளில் அதிக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் கேரளாவும் குற்றம் சாட்டியது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் குறித்து விழித்துக் கொண்ட கேரளம் நம்மை எச்சரிக்கை செய்கிறது. ஆனால், தொடர்ந்து ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு நின்றபாடில்லை. இதனால், தமிழகம் முழுவதும் மண்வளம் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், விஷத்தைதான் நாம் சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழக மண்வளம் குறித்து பேசும் வேளாண் வல்லுனர்கள், “1971ஆம் ஆண்டில் 1.2 சதவிகிதமாக இருந்த மண்ணின் இயற்கை (உயிர்ம) சத்துக்கள் 2002-ல் 0.68 சதவிகிதமாக குறைந்துள்ளது. பெரும்பான்மையான மாவட்டங்களில் இயற்கை சத்துக்கள் 0.5 சதவிகிதத்துக்கு குறைந்துள்ளது. கடந்தாண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் மண்ணுக்கு தேவையான இயற்கை (உயிர்ம) சத்துக்கள் விகிதம் 0.8லிருந்து 1.3 சதவிகிதம். ஆனால், கிடைத்த புள்ளிவிவரங்கள் இதற்கு எதிராக உள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
“மண்ணில் இயற்கை (உயிர்ம) சத்துக்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் மிக மோசமான அளவில் மதுரை (0.23%) மாவட்டம் உள்ளது. அடுத்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் (0.36%) இருக்கிறது. ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டங்கள் எல்லை மீறிய அளவில் மண்ணில் கார்பன் சத்துக்கள் இருந்து வருகின்றன. அதாவது 4.04 மற்றும் 4.2 சதவிகிதமாக உள்ளது. மண்ணில் உள்ள கார்பன் சத்துக்களின் அளவை, மண்ணை புதுப்பிப்பதால் மட்டுமே உருவாகும்” என்கின்றனர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
“காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் அறுவடைக்கு பிறகு நிலத்துக்கு ஓய்வு கொடுப்பதில்லை. நிலத்துக்கு ஓய்வு கொடுக்கும்போதுதான் மண்ணில் உள்ள கார்பன் சத்துக்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆனால், இந்த பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது” என்கிறார் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. ராமசாமி.
“மண்ணுக்கு இயற்கை சத்துக்கள் மட்கிய பொருள்களால் கிடைக்கிறது. அதாவது தாவர, விலங்குகளின் கழிவுகள் மூலம், பூச்சிகள், மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவை உருவாகிறது. வளமான மண்ணுக்கு 25 சதவிகிதம் காற்று மற்றும் 5லிருந்து 10 சதவிகித வாழும் உயிரினங்கள், இதோடு மட்கிய தாவர கழிவுகள், விலங்குகளின் கழிவுகளும் மண்ணில் இருக்க வேண்டும்.
இந்த நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதால் மண்ணில் இயற்கையாகவே இருக்கும் சத்துக்களின் அளவு குறையும்.” என்கிறார் சூழல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுல்தான் அகமது இஸ்மாயில்.
“எங்களுடைய ஆய்வில் எந்த மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ, அந்த மண் வளமாக இருக்கிறது என்று அர்த்தம். கிண்டி, தேசிய பூங்கா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்கிறார்.
“கண்மூடித்தனமாக பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் பெரும்பான்மையான மாவட்டங்களில் மண்வளம் குறைந்துவிட்டது. அதிக ரசாயன உரங்களை பயிர்களுக்கு கொடுத்தால், அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையும் விவசாயிகள் மத்தியில் இருந்து வருகிறது.
“இயற்கை விவசாய பயிற்சி முறைகளை கையாண்டால் மண்ணின் வளத்தில் மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியும். எங்களுடைய கணக்கெடுப்பில் இயற்கை விவசாயம் மூலமாக மண்ணில் கார்பன் சத்துக்கள் அதிகரிப்பதை கண்டிருக்கிறோம்.
தொடர்ந்து இயற்கை விவசாய முறை வளர்ந்தால், மண்ணின் வளம் நீடித்து இருக்கும்” என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நீடித்த இயற்கை வேளாண்மை துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் சோமசுந்தரம்.
“விவசாயிகள் தொடர்ந்து ஒரே பயிர்களை பயிர் செய்வதை தவிர்த்து, சுழற்சி முறை பயிர்களை கையாள வேண்டும். நெல்லை தொடர்ந்து காய்கறிகள், அதை தொடர்ந்து நிலக்கடலை என்று பயிர் செய்தால் மண்ணில் நைட்ரஜன் சத்துக்கள் அதிகரிக்கும். நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகித்தது. இன்று கால்நடைகள் காணாமலே போய்விட்டது. டிராக்டர்களை கொண்டு உழவு செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம். இயற்கை உரங்களுக்கான காரணிகளாக இருந்த சாணம், மாட்டு சிறுநீரை இழந்துவிட்டோம். இதனால் மண்ணின் வளம் சீரழிந்து கிடக்கிறது” என்கிறார் சூழலியலாளர் வி.அருண்.
மண்ணில் உள்ள இயற்கை (உயிர்ம) சத்துக்கள் விவரம்:
மாவட்டம் வாரியாக…
வேலூர் – 4.2%
ஈரோடு – 4%
சேலம் – 3.1%
ராமநாதபுரம் – 2.5%
கிருஷ்ணகிரி – 0.3%
புதுகோட்டை – 0.3%
மதுரை – 0.2%
source: TNAU
நன்றி:விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்