அஸ்ஸாமில் பாரம்பர்ய மரங்களை காப்பாற்றிய தமிழர்..!

எண்பதுகளில், தமிழகத்தின் கூடலூர் – நிலம்பூர் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் வளர்க்கப்பட்டிருந்த யூக்கலிப்டஸ் மரங்களை மொத்தமாக அழித்த தமிழக வனத்துறை, அங்கே, தமிழக பாரம்பர்ய மரங்களை மீட்டெடுக்கும் முயற்சி ஒன்றில் இறங்கியது. அதற்கு ’ஜீன் புல் புராஜெக்ட்’ என பெயரிட்டது. அதாவது நம் பாரம்பரிய மரங்களின் ஜீன்களை பெருக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். திட்டப்படி நிலம் சீர் செய்யப்பட்டு நம் பாரம்பர்ய மரங்கள் அங்கே நடவு செய்யப்பட்டது. அதிகாரிகள் மாற்றம், உள்ளூர் காரர்களின் ஆக்கிரமிப்பு என காலப்போக்கில் அந்த புராஜெக்ட் காணாமல் போனது மட்டுமல்லாமல், இது ஒரு தோல்விக்குறிய திட்டம் என தமிழக வனத்துறையால் முத்திரை குத்தப்பட்டது. அன்று ’தோல்வித்திட்டம்’ என சொல்லப்பட்ட இதே திட்டத்தை அஸ்ஸாமில் செயல்படுத்தி சாதித்துக்காட்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்ஸாம் வன உயர் அதிகாரி சிவக்குமார். அவரிடம் போனில் பேசினோம்…

“தமிழகத்தில் கூடலூர் பகுதியில் ஜீன் புல் புராஜெக்ட் செயல்படுத்தப்படும் போது நான் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அந்த புராஜெக்ட்டை நேரில் கண்டவன் நான். அதன் மீது எனக்கு எப்போது ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அஸ்ஸாம் வனத்துறையில் வேலை. அஸ்ஸாம் மாநிலத்தைப் பொருத்தவரை காடுகளின் பரப்பளவு அதிகம். ஒரு காலத்தில் காட்டில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்காகவே அஸ்ஸாம் வனத்துறையின் கீழ் தனியாக ஒரு துறை செயல்பட்டது. அதன் விளைவாக அஸ்ஸாம் மாநிலத்தின் அடையாளங்களாக இருந்த பல பாரம்பர்ய மரங்கள் அழிவை நோக்கி சென்றுவிட்டன. இப்போது மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டாலும், அந்த காலத்து மரங்களை மீட்க முடியவில்லை. அப்போது தான் தமிழ்நாட்டில் முயன்ற ஜீன் புல் புராஜெக்ட் பற்றி நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி என் உயர் அதிகாரிகளிடம் பேசினேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். ஆக்கிரமிப்பில் இருந்த வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு இந்த திட்டத்திற்காக நிலம் ஒதுக்கினோம். அடுத்ததாக என்னென்ன மரங்களை நடலாம் என்று ஓர் அட்டவணை உருவாக்கினோம். மொத்தமாக 166 வகை மரங்களை அடையாளம் கண்டு அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினோம்.

அஸ்ஸாமில்

எங்களுக்கே அதிர்ச்சி தரும் விதமாக அஸ்ஸாமிற்குச் சொந்தமான பாரம்பர்ய மரங்கள் பல காணாமல் போயிருந்தன. பல அழிவின் விழிம்பில் இருந்தன. நான் வனக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து விதைகள் மீதான ஆர்வம் அதிகம். கூடுதல் சப்ஜெக்ட்டாக ‘விதைத் தொழில்நுட்பம்’ தான் படித்தேன். செல்லும் இடங்களில் எல்லாம் விதைகளை சேகரிப்பேன்.  அதனால் என்னிடம் சில விதைகள் இருந்தன. இந்தியா முழுவதும் வனத்துறையில் வேலை பார்க்கும் என் நண்பர்கள் சிலர் விதைகளை கொடுத்து உதவினார்கள். மொத்தமாக 166 மரக்கன்றுகளை உருவாக்கி உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 2010ல் நடவு செய்தோம். ஒவ்வொரு வகை மரத்திற்கும் 256 கன்றுகள் வீதம் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் பிரமாண்டமாக நடவு செய்தோம். முறையான பராமரிப்பு, பாதுகாப்பு என 7 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று முழுமையாக எல்லா மரங்களையும் மீட்டிருக்கிறேன். இனி அஸ்ஸாமின் பாரம்பர்ய மரங்களை அஸ்ஸாம் முழுவதும் நடவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் உயர்வது மட்டுமல்லாமல், பல்லுயிர் பெருக்கமும் அதிகரிக்கும்” என்றவரிடம், என்னென்ன வகையான மரங்களை மீட்டிருக்கிறீர்கள் என்று கேட்டோம்.

அஸ்ஸாமில்

”குறிப்பிட்டு சில மரங்களை சொல்லலாம். ஒரு காலத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ’அகர் வுட்’ என்ற மரம் தான் அதிகமாக இருக்கும். நம்ம ஊர் சந்தமரத்தை விட அதற்கு விலை அதிகம். ஆனால் இன்று அஸ்ஸாமில் எங்குத் தேடினாலும் அகர் வுட்டை கண்டுபிடிக்க முடியாது. அவற்றை மீட்டிருக்கிறோம். அதே போல், ‘போன்சம்’ என்ற ஒரு பாரம்பர்ய மரத்தை மீட்டிருக்கிறோம். இந்த மரத்தை பற்றி சொல்லவேண்டுமென்றால் அஸ்ஸாமின் 7 மாவட்டத்தில் மொத்தம் 13 மரங்கள் மட்டும் தான் இருந்தன. அதுவும் வன அலுவகங்கள் அருகில் இருந்ததால் தப்பித்தன. அடுத்ததாக ’போலா’ என்றொரு வகை மரம். தேக்கை விட உறுதியாகவும், தங்க நிறத்தில் பளபளப்பைக் கொடுக்கக்கூடிய மரம். அஸ்ஸாமில் மொத்தமாக 500 மரங்கள் கூட இருக்காது. இப்படி அழிவின் விளிம்பில் இருந்த பல மரங்களை மீட்டு அவற்றை பெருக்கிக்கொண்டிருக்கிறோம். சுயநலத்திற்கான அழிப்பட்ட மரங்கள் அஸ்ஸாம் மண்ணில் மரங்கள். அவர்களின் கலாசாரத்தோடு தொடர்புடைய மரங்கள். மருத்துவத்திற்கு பயன்பட்ட மரங்கள். விலை அதிகமாக கிடைக்கும் என்பதற்காக அழிக்கப்பட்ட மரங்களால் பல உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை தொலைத்திருக்கின்றன. இன்று அவற்றை மீட்டெடுக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும்  தலைமுறைக்கு காட்டுவதற்கு இன்று மரங்கள் தயாராக இருக்கிறது. அடுத்த கட்டமாக அவற்றை அஸ்ஸாம் முழுவதும் நடவு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.” என்றார் நிறைவாக.

அஸ்ஸாமில்

அஸ்ஸாம் முழுவதும் வளர்ந்து கிடந்த பாரம்பர்ய மரங்கள் சுயலாபத்திற்காக அழிக்கப்பட்டதை உணர்ந்த வனத்துறை உயர் அதிகாரி சிவக்குமார், அவற்றின் தேவையை கருத்தில் கொண்டு இன்று வெற்றிகரமாக மீட்டெடுத்திருக்கிறார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும். தமிழகத்தின் பாரம்பர்ய மரங்களின் பெயர்களையே நாம் மறந்துவிட்ட இன்றையச் சூழலில் அவற்றை எப்போது மீட்க போகிறோம்? ஒரு மரம் வெறும் மரம் மட்டும் அல்ல என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *