கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார் விவசாயி ஒருவர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள ஆதிவராக நல்லூரைச் சேர்ந்த பரமானந்தம் என்ற அந்த முதியவரின் வீடு அடர்ந்த வனம்போல் காட்சியளிக்கும் அவரது பூர்வீக தோட்டத்துக்கு நடுவே அமைந்துள்ளது.
தேக்குமரம், செம்மரம், வேங்கை, லவங்க மரம், மோகினி ,ஈட்டி, ருத்ராட்சம் , தேன்அத்தி, பிஸ்தா மரம், பாதாம் மரம், கருங்காலி, திருவோடு, தான்றிக்காய், கடுக்காய் ,நெல்லி மரம், மகிழமரம், நாகலிங்கம், வன்னிமரம், அத்தி, பலா, முந்திரி என சுமார் 500 வகையான மரங்களையும் சின்னி, செருகுறுங்சி, பெரியாநங்கை, சொரியாசிஸ், நத்தப்பாலை, ஆடுதிண்ணப்பாலை, முள்சித்தரத்தை, கருநொச்சி, உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட அழிந்து வரும் அரிய மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறார் பரமானந்தம். கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தேடித் தேடி விதைகளைச் சேகரித்து கொண்டு வந்து தனது தோட்டத்தில் பயிர் செய்து, கண்ணும் கருத்துமாய் அவற்றைப் பராமரித்து வருகிறார்.
தனது நிலத்தைச் சுற்றி இருக்கும் நிலங்களில் எல்லாம் மணிலா, முருங்கை என பணப் பயிர் சாகுபடி செய்து வரும் நிலையில், தனக்கு அவற்றில் விருப்பம் இல்லை என்கிறார். எந்த மரம் எந்த தட்ப வெப்ப நிலையில், எந்த மாதிரியான மண்ணில் விளையும், எந்த மூலிகை எந்த மாதிரியான பிரச்சனைகளைத் தீர்க்கும் என சரளமாகக் கூறுகிறார்.
செயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் முழுக்க, முழுக்க இயற்கை இடுபொருட்களைக் கொண்டு மட்டுமே மரங்களையும் மூலிகைகளையும் வளர்த்து வரும் பரமானந்தம், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மாணவ, மாணவிகளுக்கு மரங்களைப் பற்றி விளக்குகிறார்.
ஆயிரக்கணக்கான மரங்களைக் கொண்ட ஒரு ஆக்சிஜன் ஆலையையே நிர்வகித்து வரும் பரமானந்தம், வாய்ப்பு இருப்பவர்கள் அனைவரையும் மரம் வளர்ப்பில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கிறார்
நன்றி: polimerநியூஸ்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்