புன்னையைப் பற்றிய விரிவான தகவல்கள் சங்க இலக்கி யத்திலும், சங்கம் மருவிய கால இலக்கியத்திலும், ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் அதற்கு ஒரு ஆன்மிக முக்கியத்துவம் பக்தி இலக்கியக் காலத்தில்தான் (7-ம் நூற்றாண்டு முதல்) முதன்முதலில் கொடுக்கப்பட்டது.
தலமர வழிபாடும், பெருந்தெய்வ வழிபாடும் கோயில்களும் பிரபலமடையத் தொடங்கியவுடன் புன்னை மரமும் அதிக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. பண்டைய தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில்தான் இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்குக் காரணம், புன்னை ஒரு கடற்கரையோரத் தாவரம் என்பதுதான். இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட பெருந்தெய்வக் கோயில்கள் பலவற்றோடு தல மரங்களாகப் புன்னை மரம் தொடர்புபடுத்தப்பட்டது.

புன்னை வனங்களைக் காணோம்
திவ்யப் பிரபந்தப் பாடல் பெற்ற தலங்களில், பல கோயில்கள் புன்னை வனங்கள் நிறைந்த பகுதிகளில் அமைக்கப்பட்டன. இவை புன்னை கானல், புன்னைத் துறை, புன்னை பொதும்பர், புன்னையம் நறும்பொழில், புன்னாகவனம், புன்னைவனம் போன்ற தேவார, திவ்யப் பிரபந்தச் சொற்றொடர்களால் குறிக்கப்பட்டன. வேறு சில மரங்களோடு புன்னையும் சேர்த்து இக்கோயில்களுக்கு அருகில் சோலைகள் அமைக்கப்பட்டன.
(“குரவங் குருக்கத்திகள் புன்னை கண் ஞாழல் மருவும் பொழில் சூழ் மறைக்காட்டுறை மைந்த” தேவாரம் 453; செண்பகந் திகழும் புன்னை செழுந்திரட்குரவம் வேங்கை நண்பு செய்சோலை சூழ்ந்த நனிபள்ளி தேவாரம் 794).
இத்தகைய புன்னை வனங்களும் சோலைகளும் மேற்கூறப்பட்ட எந்தக் கோயில்களுக்கு அருகிலும் இன்று காணப்படாமல் அழிந்துவிட்டது வேதனை அளிக்கிறது. பல இடங்களில் புன்னை வனங்களுக்கு அருகில் ஏரி, குளம் போன்ற பெரிய நீர்நிலைகள் முன்பு இருந்தன; இவையும் தற்போது காணப்படவில்லை. இதற்குக் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு, திருநாரையூர்.
இங்குள்ள நீர்நிலைக்கு வெளிநாட்டிலிருந்து நாரை போன்ற பறவையினங்கள் வந்து, அருகில் இருந்த புன்னை மரங்களில் தஞ்சம் அடைந்தன என்பதற்குப் பண்டைய இலக்கியச் சான்றுகள் உள்ளன. இன்று இங்குப் புன்னை மரங்களும் பெருமளவு மறைந்துவிட்டன. நாரைகளின் வரத்தும் அதிகமில்லை. சங்கரன்கோவில் அருகில் முன்பிருந்த புன்னை வனம் அழிந்துவிட்டாலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் புன்னை மரத்தின் அடியில் காணப்படும் புற்று மண் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.
சோலை வளரும்
ஆன்மிக முக்கியத்துவமும் மருத்துவப் பண்புகளும் கொண்ட புன்னை மரம் சூழலியல் முக்கியத் துவமும் பெற்றதாகும். நெய்தல் திணையின் சூழல் ஒருங்கு சங்கிலியில் (Eco system chain) ஒரு முக்கிய இணைப்பாகப் புன்னை செயல்பட்டது.
(குலவு மணல் அடைகரை நின்ற புன்னை குறுந்தொகை 237:34; ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னை குறுந்தொகை 311:5). புன்னை மரங்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டதால், நெய்தல் நிலமும் முறைமையில் திரிந்து ‘நெய்தல் பாலை’யாக தற்போது மாறிவிட்டது. இந்தத் திரிபுக்கு நெய்தல் நிலப்பகுதிகளில் இறால் பண்ணைகளும் உப்பளங்களும் கட்டிடங்களும் இதர பல மனித இடையூறுகளும் கடுமையாக அதிகரித்ததுதான் காரணம்.
சூழலியல் உணர்வு கொண்ட அனைவரும் நெய்தல் நிலத்தைக் காப்பாற்றுவதற்கு, ஒருகாலத்தில் திதியன் என்ற நெய்தல் குறுநில மன்னனுக்குக் காவல் மரமாகத் திகழ்ந்த (அகநானூறு 126:15, 17; அகநானூறு 145:12-14) புன்னை மரத்தை அதிக அளவில் வளர்க்க வேண்டும்; அதன் குளிர்ச்சியான, ஆரோக்கியமான நிழலைக் கோடையிலும் பெறவேண்டும். பண்டைய சமஸ்கிருத நூலான பிரஹத் சம்ஹிதையும் இந்த மரத்தை வீடுகளுக்கு அருகில் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
புன்னை மரத்தின் முக்கியத்துவத்தால் பெயரிடப்பட்ட புன்னாகவராளி ராகத்தில் இன்னிசை பாடினால் இதர பயிர்களும் தாவரங்களும் மிகவும் நன்றாக வளரும் என்பதற்கேற்ப, புன்னை மரத்தை வளர்த்தால் மற்ற நெய்தல் நிலத் தாவரங்களும் செழித்து வளரும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
– கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்; தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்