எத்தனையோ மரங்கள் எப்படி இருக்கும் என்பதே இந்த தலைமுறைக்கு தெரியாமல் இருக்கிறது. கொல்கொத்தா பெங்களூரு லால் பாக் போன்று சென்னையிலும் பொட்டானிக்கல் கார்டன் அமைக்கும் பணி ஆரம்பித்து உள்ளது. இது சென்னை மற்றும் சுற்று ஊர்களில் உள்ள சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்!
ஆராய்ச்சி மற்றும் வருங்கால சந்ததி தெரிந்து கொள்ளும் வகையில், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள, 300 வகையான அரிய தாவரங்களை கொண்டு, வண்டலுாரை அடுத்த கொளப்பாக்கத்தில், ஊட்டி போன்ற சூழலுடன் கூடிய, மரப்பூங்கா அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.
கோடை காலம் வந்தால், சென்னை உள்ளிட்ட தமிழக மக்கள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.இதற்கு, அங்குள்ள சீதோஷ்ண நிலையுடன், அரிய வகையான தாவரங்களும் ஒரு காரணம். அந்தளவிற்கு பல வகையான தாவரங்களை அங்கு காணமுடியும்.சென்னையில், இந்த தாவரங்களை பார்ப்பது, அரிதான விஷயம். வன ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர், இந்த தாவரங்களை ஆராய்ச்சி செய்ய, மலை பிரதேசங்களுக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் வருங்கால சந்ததி தெரிந்து கொள்ளும் வகையில், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளரும், 300 வகையான தாவரங்களை கொண்டு, ஊட்டி போன்ற சூழலுடன் கூடிய மரப்பூங்கா, சென்னை அருகே அமையவுள்ளது.
வண்டலுாரை அடுத்த கொளப்பாக்கத்தில், மாநில வன ஆராய்ச்சி மையம் எதிரே, அத்துறை சார்பில், 20 ஏக்கர் பரப்பளவில், இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2017 ஏப்ரலில், பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.
இப்பூங்காவில், கோடை வெயிலை தாங்கக்கூடிய, 200 வகையான தாவரங்கள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தில், இதுபோன்ற வசதிகளுடன் மரப்பூங்கா அமைக்கப்படுவது என்பது, இதுவே முதல்முறை.
4 தடுப்பணைகள்
வண்டலுார் மலையில் இருந்து வெளியேறும் மழைநீர், மரப்பூங்கா அமையவுள்ள இடத்தை கடந்து, நெடுங்குன்றம் ஏரிக்கு செல்லும். இயற்கையாக செல்லும் இந்த நீரோட்ட பாதையை மறைக்காமல், பூங்காவின் நடுவில், ஆங்கில எழுத்தான, ‘யூ’ வடிவில், கால்வாய் அமையவுள்ளது.மழைக்காலத்தில், இந்த கால்வாய் வழியாக, ஏரிக்கு நீர் செல்லும். அதேநேரத்தில், கால்வாயில், நான்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு, தண்ணீரை தேக்கி, பார்வையாளர்களை குஷிப்படுத்தவும், மரங்களுக்கு பாய்ச்சவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குட்டி தீவு
மரப்பூங்காவின் நடுவில், குட்டி தீவு ஒன்று அமையவுள்ளது. அங்கு, ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள தாவரங்கள் நட்டு வளர்க்கப்படும். அந்த மரங்கள் வளர்ந்தவுடன், அதன் உள்ளே சென்று வரும் போது, ஊட்டி பூங்காவிற்குள் சென்று வந்தது போன்ற, ஒரு சூழலை பார்வையாளர்கள் உணர முடியும்.அதேபோல், தாவரங்களின் செயல் விளக்க கூடம் ஒன்றும் அமையவுள்ளது. அதில், ஒவ்வொரு தாவரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மரப்பூங்கா விரைவில் அமைக்கப்பட்டு, மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனுமதி எப்போது?
மரப்பூங்கா குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பல வகையான மரங்கள், அழியும் நிலையில் உள்ளன. நமது சந்ததிக்கு, சில மரங்களின் பெயர்கள் மட்டுமே தெரியும். இந்த மரப்பூங்காவில், 300 வகையைச் சேர்ந்த, 1,500 தாவரங்களை கண்டு ரசிக்கலாம். இதில், கோடையை கருத்தில் கொண்டு, 100 தாவரங்களை தனியாக வைத்து பராமரித்து வருகிறோம்.ஒன்றரை மாதத்தில் பணிகள் முடிந்து விடும். தாவரங்கள் வளர்ந்தவுடன், கல்விக்காகவும், பொதுமக்களின் பார்வைக்கும் திறந்து விடப்படும்.
வரும் காலத்தில், மாணவர்களின் ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி, அரிய வகை தாவரங்களின் விதைகளை எடுத்து, இன்னும் பல இடங்களில் நட்டு விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
எந்தெந்த தாவரங்கள்!
தமிழகத்தில் ஜவ்வாது மலை, நீலகிரி, பொள்ளாச்சி, கோவை ஆகிய இடங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், தாவரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பன்னீர், இரும்பு, ஈட்டி, புன்னை, செண்பகம், எட்டி, வெண்தேக்கு, மயிலடி, மயிர் மாணிக்கம், மலையாத்தி, வேம்பு, பாதிரி, மாவிலங்கம், ருத்திராட்சம், சந்தனம், செம்மரம், வெடிப்பாலா, வில்லம், கடுக்காய், நெல்லி, பலா உள்ளிட்ட மரங்கள், இந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளன.
வேங்கு, இலுப்பை, கருங்காலி, கொடுக்காய்ப்புளி, செங்கடம்பு, தவிட்டுக்கொய்யா, தும்புலிமரம், நாவல், நீர்க்கடம்பு, நெட்டிலிங்கம், புலிநகம், பூவரசு, பெருமூங்கில், மகிழ், மஞ்சக்கடம்பு உள்ளிட்ட தாவரங்களையும், இங்கு காணலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்