நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது. பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது.

“அஞ்சனா (பெரிய ஏலக்காய்), முஸ்டா (கோரைக்கிழங்கு), உசிரா (வெட்டி வேர்), நாகா (நன்னாரி), கோசடக்கா (நுரைபீர்க்கை), அமலக்கா (நெல்லி) போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பீப்பாய் நீர் தெளிய

ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்றும்கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை (கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது.

வறண்ட நிலத் தாவரம்

கடகம், ஜலதம், அக்கோலம், சில்லகி, சில்லம் என்ற இதர பெயர்களைக் கொண்ட இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயர் Strychnos potatorum (தாவரக் குடும்பம்: Loganiaceal) ; இது எட்டி மரத்துடன் தொடர்புடைய ஒரு தாவரம். ஏறத்தாழ 30 முதல் 50 அடி உயரம்வரை வளரக்கூடிய இந்த மரம், நல்ல நிழல் தரும் மரமும்கூட. இந்தியாவின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் இது சாதாரணமாக வளர்கிறது. குறிப்பாக, முல்லை திரிந்த பாலை நிலப்பகுதிகளில் வளர்கிறது.

சங்க இலக்கியக் காலத்தில் முல்லை நிலத்தில் செழிப்பாக வளர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்தத் தாவரம், தற்போது குறைந்த எண்ணிக்கைகளில் காணப்படுகிறது. “முல்லை இல்லமொடு மலர …. கார் தொடங்கின்றே”, “இல்லம் முல்லையொடு மலரும்” என்ற அகநானூற்று வரிகள் (அகநானூறு 364:7, 9; 1: 1, 2,7) மட்டுமின்றி “நரு முல்லை உகு தேறு வீ “ என்ற பொருநராற்றுப்படை வரியும் மேற்கூறியதற்குச் சான்றாகும். கார்காலத்தில் மலரும் இந்த மரத்தின் பூக்களைச் சங்ககால மக்கள் சூடினர் (குல்லை குளவி கூதளங் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தனை கண்ணியன்” நற்றிணை : 5:6). தற்காலத்தில் யாரும் சூடுவதில்லை.

நீரிழிவுக்கு மருந்து

தேற்றா மரம் பாரம்பரிய மருத்துவ முக்கியத்துவம் கொண்டது. இதன் அனைத்து உறுப்புகளும் மருத்துவத் தன்மை கொண்டவை. உடல் இளைக்கவும் தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம் சாப்பிட வேண்டும். பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும், கபத்தைப் போக்கும், சீதபேதி – வயிற்றுப்போக்கைக் குணமாக்கும், புண்கள் – காயங்களை ஆற்றும், கண் நோய் போக்கும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும், பெண் இனப்பெருக்க உறுப்புக் கோளாறுகளை அகற்றும்; இதன் கொட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

தேற்றா மரம் ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டது. தியாகேசருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள தாவரம். திருவாரூர் திருக்குவளையின் கோலிவிழிநாதர் கோயிலின் தலமரமாகத் திகழ்கிறது. தேற்றா வனத்தின் நடுவில் (கடக்கா வனம்) பிரம்மா ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று புராணக் கதை ஒன்று கூறுகிறது.

தமிழகத்தில் அழிந்துவரும் தாவரங்களில் தேற்றா மரமும் ஒன்று. இதைப் பாதுகாப்பதற்கு மக்களும் அரசும் அதிக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன் மருத்துவப் பண்புகளைப் பிரபலப்படுத்த, அறிவியல் சார்ந்த ஆய்வுகளும் அதிகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

– கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

நன்றி: ஹிந்து

மேலும்  விவரம் அறிய :


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *