மகிழம் பூவின் எண்ணெயைத் தனியாகவோ, சந்தன எண்ணெயுடன் சேர்த்தோ ஊதுபத்தி, முகப்பூச்சு, கிரீம்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றில் நறுமணமூட்டியாக மகிழம் செயல்படுகிறது. பூச்சாறு பசியைத் தூண்டும், வீக்கத்தைக் குறைக்கும். மரத்தின் பட்டைத்தூளும் வயாகரா போன்று செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பட்டையையோ, பட்டை கொண்ட குச்சியையோ கொண்டு பல் துலக்கினால் ஆடும் பற்கள் நிலைத்து நிற்கும், ஈறு நோய்கள் குணமாகும், பல் சுத்தமாகும், பயோரியா நோய் குணமாகும், வாய்ப்புண்கள் மறையும். பல் பாதுகாப்புக்கான தலைசிறந்த தாவரங்களில் இது ஒரு முக்கியமான தாவரம்.
சிறுநீரகத்திலும், சிறுநீர்க்குழாய்களில் அதிக அளவு சளி போன்ற பொருட்கள் சுரப்பதைப் பட்டைத்தூள் உட்கொள்வது தடுக்கிறது. மேலும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தோல் வியாதிகள், கருப்பைக் கோளாறுகள் மற்றும் பலமின்மை, ரத்தச் சோகை, புண்கள் போன்றவற்றை மகிழம்பட்டை குணப்படுத்துகிறது.
பழங்குடிப் பயன்கள்
மகிழம் பழம் உண்ணத் தகுந்தது. விதை எண்ணெய், கண் சொட்டு மருந்தாகச் செயல்படுகிறது; உணவுக்குழாய் கோளாறுகளையும், மூட்டு வீக்கங்களையும் நீக்குகிறது. விதையின் பொடி கபம், பித்தத்தைப் போக்குகிறது; விஷ முறிவுக்கும் பயன்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி மகிழ மரத்தின் பூக்கள், இலைகள், பட்டை மற்றும் விதைகள் நுண்ணுயிர்க் கொல்லிகளாகவும், குடல் புழு நீக்கிகளாகவும், ஹெச்.ஐ.வி. நோய்த் தடுப்புப் பொருட்களாகவும், கல்லீரல் பாதுகாவலர்களாகவும், அறியும்திறன் மேம்படுத்திகளாகவும் செயல்படுகின்றன. பட்டை நார்கள் துணி நெய்வதற்கும், பட்டையிலிருந்து கிடைக்கும் சாயம் துணிகளுக்கு நிறமேற்றவும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.
நிழல் தரும் அற்புதங்கள்
பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூல் குறிப்பிடுவது போன்று ஆன்மிகக் காரணங்களுக்காக மட்டுமின்றி, இதர பயன்களுக்காகவும் மகிழ மரம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். கோயில் தவிர்த்து வீடுகள், பொது இடங்களில் இந்த மரம் வளர்க்கப்பட வேண்டும். இந்த மரத்தின் கார்பன் டை ஆக்ஸைடை நிலைப்படுத்தும் (Carbon dioxide sequestration) திறனும், ஒளிச்சேர்க்கைத் திறனும் மிகவும் சிறப்பானதாக இருப்பதால் பகலில் இதன் நிழல் அதிக ஆரோக்கியமான சூழலை (அதிக அளவு ஆக்ஸிஜனை) பெறலாம். கார்பன் மாசுபாட்டைக் குறைக்கும் முக்கியமான மரங்களில் இதுவும் ஒன்று. இதன் காரணமாகவே தோன்றிய ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, அருணாசலேஸ்வரரை வேண்டிக்கொண்ட பின்பு, இந்த மரத்தின் நிழலில் உட்காரும் ஒருவருக்கு நோய்களும் கோளாறுகளும் நீங்கும்.
ஏறத்தாழ 300 வயதுக்கும் மேற்பட்ட மகிழ மரம் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து வடகாடு செல்லும் வழியிலுள்ள வேலாத்தூர் நாடியம்மன் கோயிலில் காணப்படுகிறது. இதன் நிழலில் சிறிது நேரம் தங்கிப் போகாதவர்களே இல்லை. நாமும் இந்த மரத்தை வளர்ப்பதன் மூலம், பேணி பாதுகாப்போம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்