மூங்கிலைப் பயிரிடுவோம்

ஆதிகாலத்தில் நம் கட்டிடக் கலையில் இயற்கையிலான கட்டுமானப் பொருள்களின் பங்கு அதிகமாக இருந்தது. ஆனால் அறிவியல் வளர்ச்சி வளர வளர நாம் முழுவதும் தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம்.

இயற்கை வழியிலான கட்டிடக் கலையிலிருந்து விலகி கான்கிரீட் கட்டிடங்களையே பெரிதும் நம்புகிறோம். ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் உண்டாக்கிய கட்டிடங்கள் மழையையும் வெயிலையும் தாங்கி உறுதியோடு இருந்தன. அதனால் முழுக்கவும் நுட்பத்தை நம்பியிராமல் நமது மரபான கட்டிடக் கலைக்கு நாம் சிறிதாவது திரும்ப வேண்டும்.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

நம் பாரம்பரியக் கட்டிடக் கலையில் முக்கியமான பொருள்களுள் ஒன்று மூங்கில். மூங்கிலைக் கட்டுமானப் பொருள்களாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். மூங்கிலைக் கட்டிடச் சுவர்கள் எழுப்பவும் தரைத் தளம் அமைக்கவும் அறைக்கலன்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மூங்கில் உற்பத்தியில் முன்னணி இடம் வகிக்கும் நமது நாடு. அதைப் பயன்படுத்துவதில் மிகவும் பின்தங்கியுள்ளது வருத்தத்திற்குரியது. உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மூங்கில் பொருட்களைக் கட்டுமானத்திற்குத் திறம்படப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியக் கட்டுமானத் துறையில் மட்டும் மூங்கில்களின் பயன்பாடு இன்னும் அதிகம் உணரப்படவேயில்லை.

வீட்டுக் கட்டுமானத் துறையினர் கான்கிரீட்டுக்கு நல்ல மாற்றாக இருக்கும் மூங்கிலைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் பரிசீலிக்க இல்லை. பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் அதிகமாக வாழும் நம் நாட்டில் இம்மாதிரியான மாற்றுக் கட்டுமானப் பொருள்களை ஊக்குவிப்பதுதான் நல்லது. அப்படியிருக்கும்போது இன்றைக்குள்ள கட்டிடப் பணிகளுக்கான அதிகச் செலவுகளையும் தாண்டி ஏழைகளாலும் வீடு கட்டிக்கொள்ள முடியும். குறைந்த விலையில் அவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுவதற்கான சூழலை மூங்கில் போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்தான் தரும்.

அதுமட்டுமல்ல மூங்கிலைப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் ஆரோக்கியச் சூழலும் மூங்கில் பொருட்களால் மேம்படும். ஒரு மூங்கில் கம்பு உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் ஒருவரின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையானது என இயற்கைக் கட்டிடக் கலை நிபுணர்கள் தெரிவிக்கிறனர்.

மூங்கில்கள் இரும்புக்கு நிகரான பலம் கொண்டவை. நில அதிர்வு வாய்ப்புள்ள பகுதிகளில் வீடுகளைப் பாதுகாப்பாகக் கட்டுவதற்கு மூங்கில் சிறந்த கட்டுமானப் பொருளாக இருக்கிறது. ஏனெனில் நில அதிர்வு விபத்துகளில், மூங்கில் லேசாக இருப்பதால் மனிதர்களுக்குப்

பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதே வேளையில் மூங்கிலின் தசைநார்கள் இரும்பைவிட வலிமையாவை.இரும்புக் கம்பிகளால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட்டுக்கு மாற்றாகத் தற்போது மூங்கில்களால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட் பல நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுவர்கள், தூண்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தரைப்பூச்சுகளுக்கும் மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் விசிறி பிளேடுகளைக்கூட மூங்கிலில் செய்கின்றனர். இதுமட்டுமல்லாது மூங்கில்கள் பலவிதங்களில் பயன்படுகின்றன.

இப்போது கட்டுமானத்திற்கு அதிகமாக மரப் பொருள்களைத்தான் பயன்படுத்துகிறோம். அதிக மிக அதிக விலையுள்ளதாக இருக்கிறது. மேலும் பற்றாக்குறையும் இருக்கிறது. மரங்களை வெட்டுவதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிப்படையும் அபாயமும் இருக்கிறது. இன்றும் நமது நாட்டின் அஸாம் மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடங்கள் மூங்கிலின் உறுதியைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. மூங்கில் இயற்கையாக மக்கி அழியக் கூடியது. ஆனாலும், வெகு காலம் தாக்குப்பிடிப்பதற்கு நவீன வேதிச் செயல் முறைகளைக் குறைவான செலவில் செய்ய முடியும். அரசுக் கொள்கைகளும் மூங்கில் பயன்பாட்டுக் கொள்கைகளைப் பொறுத்த அளவில் மாற வேண்டும். காட்டிலிருந்து மூங்கிலை எடுப்பதற்கு அரசு ஒப்புதல் கொடுப்பதை எளிமையாக ஆக்க வேண்டும்.

மூங்கில் பயன்பாடு அதிகமாக ஆக நாம் மூங்கில்களைப் பயிரிடும் சூழல் பெருகும். அது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். மேலும் சில பிரிவினருக்குப் பொருளாதார நன்மை கிடைக்கும். இவ்வளவு சிறப்பு உள்ள மூங்கில்களைக் குறைந்த அளவாவது பயன்படுத்த நாம் முன்வர வேண்டும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *