வெட்டப்படவிருந்த 40 மரங்கள்… வேரோடு பெயர்த்து இடம் மாற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு!

இயற்கை மனித குலத்துக்கு வழங்கியுள்ள அழகான வரங்களான தாவரங்களை, நாம் முறையாக பாதுகாப்பதில்லை. கொளுத்தும் வெயிலுக்கு பசுமைக் குடையாக இருப்பவை மரங்கள். தாய்க்கோழி தனது குஞ்சுகளை இறக்கைக்கு அடியில் அணைத்துக்கொள்வதுப் போல் வெயில் மற்றும் மழையில் நனையும் உயிர்களை தனக்கு கீழே அணைத்துக்கொள்ளும் பேரன்பு கொண்டவை மரங்கள்.

ஆனால், வளர்ச்சி, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்களை அழித்தொழித்து விட்டோம்.

நெடுஞ்சாலைகள் முழுவதும் மரங்களே இல்லாமல் பாலையாக கிடக்கின்றன. நிழலுக்கு ஒதுங்க இடமேயில்லை. சோலைகளாக இருந்த சாலைகளை, பாலைகளாக்கி விட்டு, வெயிலில் வாடிக்கொண்டிருக்கிறோம்.

‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பார்கள். தற்போதுதான் தாவரங்களின் அருமையை கொஞ்சம் மனிதகுலம் உணரத்துவங்கியுள்ளது. மரக்கன்றுகள் நடவுச் செய்வது, விதைப்பந்து எறிவது போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான் அதற்கு சான்று.

இந்நிலையில், திண்டுக்கல் நகரை பசுமைப் போர்த்திய நகராக மாற்றும் முயற்சியில் இறங்கியது ’திண்டி மா வனம்’ அமைப்பு. கடந்த ஓராண்டில் முப்பதாயிரம் மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறது இந்த அமைப்பு. நடவுச் செய்தது மட்டுமல்லாமல் இன்று வரை, டிராக்டர் வைத்து அனைத்து மரக்கன்றுகளையும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக, திண்டுக்கல்லில் ஒரு தனியார் நிறுவனம் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த 50 வயதான அரசமரத்தை அப்புறப்படுத்த நினைத்தது. உடனடியாக களமிறங்கிய ‘திண்டி மா வனம்’, அந்த அரசமரத்தை வேரோடு பெயர்த்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவு செய்தது. தற்போது அந்த அரசமரம் புதுத்தளிர்களோடு புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.

tree

 

திண்டுக்கல்லில் இருக்கும் குளங்களை தூர்வாரி, வாய்க்கால்களை சீர்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக, ‘திண்டி மா வனம்’ செயல்படுத்தியது. இவர்களது செயல்பாட்டை பார்த்து ஆர்வமான ஆட்சியர் வினய், தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி மேம்படுத்தி வருகிறார். நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக தனிப்படையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்-பழநி சாலை விரிவாக்க பணி தொடங்கியது. சாலையை அகலப்படுத்தும் போது கிட்டத்தட்ட நாற்பது மரங்களை அகற்ற வேண்டிய கட்டாயம்

. நாற்பது முதல் அறுபது ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த மரங்கள், அடுத்த ஓரிரு நாள்களில் வெட்டி எறியப்படவுள்ளதை அறிந்த ‘திண்டி மா வனம்’, மரங்களின் துயர் துடைத்து, மறுவாழ்வளிக்க களம் இறங்கியுள்ளது.

சாவின் விளிம்பில் இருந்த அந்த மரங்களை வேரோடு பெயர்த்து வேறொரு இடத்தில் நடவு செய்யும் பணியை, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ‘திண்டி மா வனம்’ தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் நாற்பது மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி பரபரப்பாக நடந்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய திண்டி மா வனத்தைச் சேர்ந்த ராஜவேல்முருகன்

“பழனி சாலையில் முருகபவனம் வரை உள்ள சாலையின் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதற்கு இடையூறாக இருந்த இந்த மரங்களை அகற்றப் போகிறார்கள் என அறிந்ததும் வேதனையடைந்தோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த அனைவரும் இது தொடர்பாக ஆலோசனை செய்ததன் அடிப்படையில், இந்த நாற்பது மரங்களையும் மறுநடவு செய்ய முடிவு செய்தோம். புங்கன், வேம்பு, அரசு, கொன்றை ஆகிய மரங்கள் அதிகளவில் இருக்கின்றன. இந்த மரங்கள் நாற்பது முதல் அறுபது வயதுள்ளவை. மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு இந்தப் பணியை செய்து வருகிறோம். ஏற்கெனவே அரசமரத்தை மறுநடவு செய்த அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கிறது. புதிதாக மரங்களை உருவாக்குவது மட்டுமில்லை. ஏற்கெனவே இருக்கும் மரங்களையும் காப்பதும் எங்கள் கடமை என்றே நினைக்கிறோம். இந்த பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எங்கள் அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *