5 ஏக்கர்… 4 ஆண்டுகள்… 9 லட்ச ரூபாய் லாபம் சவுக்கில்!

  • ஏக்கருக்கு 4,800 கன்றுகள்
  • ஏக்கருக்கு 50 டன் சராசரி மகசூல்
  • ஒரு டன் 4,500 ரூபாய்
  • தண்ணீர் கண்டிப்பாக தேவை
  • களர்மண்ணில் வளராது

காய்கறி, நெல், கரும்பு, வாழை… எனக் காலங்காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகள் கூட விலையின்மை, வறட்சி  போன்ற காரணங்களால் விவசாயத்தை விட்டு வெளியேறி மாற்றுத்தொழில் தேடி வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால், ‘விவசாயத்தை விடாமல் செய்ய வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு மாற்றுப் பயிராக இருப்பது, மரப்பயிர் சாகுபடி. இதில் வேலையாட்கள் தேவை, பராமரிப்பு போன்றவை குறைவாக இருப்பதால், மரப்பயிர் சாகுபடி பல விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது. அப்படி மரப்பயிருக்கு மாறி, சவுக்கு மர சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி நந்தகுமார்.

மதுராந்தகத்தை அடுத்த, நல்லாமூர் கிராமத்தில் உள்ளது, நந்தகுமாரின் பண்ணை. பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த நந்தகுமாரைச் சந்தித்தோம். “தாத்தா காலத்துல இருந்தே விவசாயத்துல ஈடுபட்டுட்டு இருக்கோம். நானும் சின்ன வயசுலயே அப்பாவுக்கு உதவியா தோட்டத்துக்குப் போயிடுவேன். நான் காலேஜ் முடிச்ச சமயத்துல அப்பா இறந்து போகவும்,  2003-ம் வருஷம் நான் விவசாயத்தை கையில் எடுத்தேன். இப்போ, அதுவே எனக்கு முழுநேர தொழிலாகிடுச்சு. மொத்தம் 30 ஏக்கர் நிலம். அதுல 16 ஏக்கர் நிலத்துல சவுக்கு மரங்கள் இருக்கு. மீதி 14 ஏக்கர்  நிலத்துல போன தடவை, நெல், தக்காளி, உளுந்துனு பயிர் செஞ்சேன். இப்போ அதையெல்லாம் அழிச்சுட்டு மொத்த நிலத்துலயும் ஆடிப்பட்டத்துல சவுக்கு விதைக்க போறேன்.

இது, செம்மண் நிலம். கிணற்றுப்பாசன வசதி இருக்கு. ஆரம்பத்துல ரசாயன உரம்தான் பயன்படுத்திகிட்டு இருந்தேன்.  2010-ம் வருஷத்துல இருந்துதான் ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்துச்சு. முன்னோடி இயற்கை விவசாயி ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன்தான், எனக்கு இயற்கை விவசாயத்தை படிப்படியா தெளிவாகச் சொல்லித்தந்தார். அதுபடிதான் 5 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டிருக்கேன்” என்று விவசாயத்துக்கு தான் வந்த கதை சொன்ன  நந்தகுமார் தொடர்ந்தார்.

“ரசாயன உரத்துக்கு பழக்கப்பட்ட நிலத்துல புதுசா இயற்கை இடுபொருட்களைப் போட்டப்போ எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கலை. தொடர்ந்து பயன்படுத்துனப்போ நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. அப்பறம்தான் ‘இனிமே இயற்கை விவசாயம் மட்டும்தான்’னு முடிவெடுத்துட்டேன்.

ஜெகதீசன்ங்கிற நண்பர் மூலமாத்தான் சவுக்கும், எனக்கு அறிமுகமாச்சு. அவர்தான், ‘வேலையாள் பிரச்னையைத் தீர்க்கவும், லாபத்துக்கு சரியான வழியாகவும் இருக்கிறது சவுக்குதான்’னு ஆலோசனை கொடுத்தார். சவுக்கு சாகுபடி முறை குறித்தும் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். சவுக்குக்கு பெரிசா உரம் தேவைப்படாது. தண்ணீர் மட்டும் தவறாம கொடுத்தா போதும். சவுக்குல  நாட்டு ரகம், வீரிய ரகம்னு ரெண்டுமே இருக்கு. ஆனா, நாட்டுரக சவுக்குலதான் மிளார் அதிகமா வரும். வியாபாரிங்களும் நாட்டு ரகத்தைத்தான் வாங்குறாங்க. நாட்டு ரகம் அதிகமா வளையாது. உறுதியா இருக்கும். அதனால கட்டுமான வேலைகளுக்கு நாட்டு ரகத்தைத்தான் வாங்குவாங்க. ஆனா,  நாட்டு ரக சவுக்கு வறட்சியைத் தாங்காது. தண்ணீர் கண்டிப்பா கொடுத்தாகணும். வீரிய ரக சவுக்கு வறட்சியைத் தாங்கி வளரும். ஆனா, விலை கிடைக்காது. வீரிய ரகங்களை பெரும்பாலும் காகித ஆலைக்குத்தான் வாங்குறாங்க. சவுக்கு மரங்களை ஒண்ணரை வருஷத்துல இருந்தே வெட்ட ஆரம்பிக்கலாம். அஞ்சு வருஷத்துக்கப்புறம் வெட்டுனா லாபம் அதிகமா கிடைக்கும். நான் எட்டு ஏக்கர்ல வீரிய ரகமும், எட்டு ஏக்கர்ல நாட்டுரகமும் நட்டிருக்கேன். நாட்டு ரகத்தை இன்னும் ரெண்டு மூணு மாசத்துல அறுவடை பண்ணிடுவேன். வீரிய ரகத்தை நட்டு ரெண்டு மாசம்தான் ஆகுது” என்ற நந்தகுமார் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“முதல் முதலாக, 2005-ம் வருஷம் 3 ஏக்கர் நிலத்துல நாட்டு சவுக்கு நட்டேன். அதை 2009-ம் வருஷம் அறுவடை செய்தப்போ 3 ஏக்கர் நிலத்துக்கும் சேர்த்து 120 டன் மகசூல் கிடைச்சது. ஒரு டன்  3 ஆயிரம் ரூபாய்ங்கிற கணக்குல விற்பனை செய்ததுல… 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல அத்தனை செலவும் சேர்த்து 40 ஆயிரம் ரூபாய் போக, 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைச்சது.

அடுத்து 2010-ம் வருஷம் 5 ஏக்கர் நிலத்துல நாட்டு ரக சவுக்கை நட்டேன். அதை 2014-ம் வருஷம் அறுவடை செய்தப்போ, 5 ஏக்கருக்கும் சேர்த்து, 225 டன் மகசூல் கிடைச்சது. ஒரு டன் 4 ஆயிரத்து 500 ரூபாய்ங்கிற கணக்குல விற்பனை செய்ததுல… 10 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல அத்தனைச் செலவும் சேர்த்து 70 ஆயிரம் ரூபாய் போக, 9 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் லாபமா கிடைச்சது” என்ற நந்தகுமார் நிறைவாக,

“இப்போ எட்டு ஏக்கர்ல இருக்குற நாட்டுச் சவுக்கு 2013-ம் வருஷம் நட்டது. இன்னும் ரெண்டு மாசத்துல அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு சராசரியா 40 டன் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இப்போதைக்கு ஒரு டன் 4 ஆயிரத்து 500 ரூபாய்னு விலை போய்க்கிட்டு இருக்கு. விற்பனை செய்றப்போ எப்படியும் 13 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்.

சொட்டு நீர்ப்பாசனமே சிறந்தது!’

சவுக்குக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து விட்டால், பாசனத்துக்காக வேலையாட்கள் தேவைப்படமாட்டார்கள். தண்ணீர்ச் செலவையும் குறைக்கமுடியும். களைகளும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மானிய விலையில் கன்றுகள்!

சவுக்கு குறித்து கரூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் மேலாளர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “காகிதம் தயாரிக்க… தைல மரம், சவுக்கு ஆகிய மரங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். ஒரு ஏக்கர் நிலத்துக்கும் அதிகமான பரப்பில் சவுக்கு சாகுபடி செய்ய நினைக்கும், போதுமான தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் கன்றுகளை வழங்கி வருகிறோம். அதோடு, பராமரிப்பு ஆலோசனைகளையும் சொல்லி வருகிறோம். ஒரு ஏக்கர் நிலத்தில் 60 டன் வரைகூட மகசூல் கிடைக்கும்.  சவுக்கு மரத்தின் மையப்பகுதியின் விட்டம் ஒரு அங்குலம் இருந்தால், ஒரு டன் 4 ஆயிரத்து 500 ரூபாய் விலையில் நாங்கள் கொள்முதல் செய்வோம். ஆனால், எங்கள் நிறுவனத்துக்கு விவசாயிகள் மரங்களைக் கொண்டு வந்து தர வேண்டும். நாங்களே நிலத்துக்கு நேரடியாகச் சென்று கொள்முதல் செய்யும்போது விலை நிலவரம் மாறும்.

தொடர்புக்கு: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூர்: 09442591430 , 09442591407

மூன்றடி இடைவெளி!

சவுக்கு சாகுபடி செய்யும் முறையைக் குறித்து சொன்ன விஷயங்கள் இங்கே…

சவுக்கு சாகுபடிக்காக தேர்வு செய்யும் நிலத்தை ஐந்து மாதங்கள்  காயப்போட வேண்டும். பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, எட்டு சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, 3 அடி இடைவெளியில் இரண்டு அங்குல அளவுக்கு குழி எடுத்து சவுக்குக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 4 ஆயிரத்து 800 கன்றுகள் வரை நட முடியும். நடவு செய்து ஓர் ஆண்டு வரை பத்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். அதன்பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. நிலத்தில், களைகளை மண்ட விடக்கூடாது. ஆண்டுக்கு, இரண்டு முறை கவாத்து செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டிலிருந்து விற்பனை வாய்ப்பைப் பொறுத்து மரங்களை வெட்டி விற்பனை செய்யலாம். ஐந்து வயது வரை வளர்ந்த மரங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மொத்த அறுவடையும் முடிந்த பிறகு நிலத்தை சுத்தப்படுத்தி, மீண்டும் 5 மாதங்கள் காய விட்டு புது நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

‘ஒவ்வொரு முறையும் புதிதாக நடவு!’

களர்மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் சவுக்கு நன்றாக வளரும். ஆனால், மணற்பாங்கான நிலங்களில் மூன்றரை ஆண்டுகளில் அறுவடை செய்துவிட வேண்டும். அப்படிச் செய்யாவிடில், மரங்கள் சாய்ந்துவிடும். மறுதாம்பு விடாமல் ஒவ்வொரு முறையும் புதிதாக நடவு செய்யும்போது வளர்ச்சி நன்றாக இருப்பதோடு, நல்ல விலையும் கிடைக்கும்.
குறைஞ்சபட்சம் அஞ்சு ஏக்கர் அளவுல சவுக்கு சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் பார்க்கலாம்” என்ற நந்தகுமார், தண்ணீர் பாய்ச்சுவதில் முனைப்பானார்.

தொடர்புக்கு,
நந்தகுமார்,
செல்போன்: 09943480209

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *