மரபணு மாற்ற விதைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு, இந்தியாவில் இன்றுவரை ஒருமுடிவு கிடைக்காத நிலையே இருந்து வருகிறது.
பி.டி விதைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை பார்த்துவிடலாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பி.டி பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. பி.டி பருத்தி காய்ப்புழுவின் தாக்குதலில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் என்று சொல்லித்தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் அதிகமான விவசாயிகள் பி.டி பருத்தியை வாங்கி விதைக்க ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் பி.டி விதைகளை அறிமுகப்படுத்திய மான்சான்டோ நிறுவனம் சொன்னபடியே குறுகிய காலத்தில் செழிப்பாக வளர்ந்தது. ஆனால், விளைந்த பருத்தி தகுந்த நேரத்தில் வெடிக்காமல் போனது, காய்புழுத் தாக்குதலுக்கு அதிக விலை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் எனப் பி.டி பருத்தி விவசாயிகளைத் திக்குமுக்காடச் செய்தது. பொருள்செலவை ஈடுகட்டும் விவசாயிகள் ஓரளவு இழப்பிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டனர். பிடி பருத்தியை மட்டுமே நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் மாட்டிக்கொண்டனர். முடிவு, வயலுக்கு வாங்கிய பூச்சிக்கொல்லிகளைத் தானே அருந்தி இறந்து போனார்கள்.
பி.டியின் கொடூர முகம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைப் பலி வங்கியது. இதனைத் தாமதமாக உணர்ந்த விவசாயிகள் பி.டி பருத்தியை ஒதுக்க ஆரம்பித்தனர். மத்திய அரசு அத்துடன் நின்று விடாமல் அடுத்ததாகப் பி.டி கத்தரியை அறிமுகம் செய்ய முழுமூச்சுடன் களமிறங்கியது.
அதற்கு அப்போதைய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மறுத்து விட்டார். அப்போது நின்றுபோன பி.டி கத்தரிக்குப் பதிலாக, பி.டி கடுகை மத்திய அரசு கொண்டுவர நினைத்தது. இதற்கிடையே மான்சான்டோ நிறுவனம் கடந்த ஆண்டு, பி.டி பருத்தி விதைகளை இந்தியாவில் உருவாக்குவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது. கடந்த முறை கார்ப்பரேட்டுகளால் காவு வாங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டதால், இம்முறை டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டுப் பி.டி கடுகை அறிமுகம் செய்ய முயற்சி செய்தது. பல விவசாய அமைப்புக்கள், விவசாய மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரின் எதிர்ப்புகளால், இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.
மரபணு மாற்று விதைகளின்மேல் பல சர்ச்சைகள் நீடித்து வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்தியதற்காக முன்னாள் கேபினெட் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் பல விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இதில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் உயிரையும் இழந்தனர். 1990-ம் ஆண்டு நான்தான் மரபணு மாற்றப் பருத்தியை அறிமுகம் செய்தேன். தற்போது இதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
பி.டி பருத்தியால் இறந்த விவசாயிகளின் தற்கொலைக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் போன்ற நாடுகளில் கூடப் பி.டி விதைகளை அனுமதிப்பதில்லை” என்றார்.
தற்போது, இந்திய மரபணு பொறியியல் மதிப்பீட்டு ஆய்வுக் கழகம் மரபணு மாற்றுக் கடுகை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் சுப்ரமணியனின் இந்தப் பேச்சு, பி.டி கடுகை எதிர்ப்பாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மரபணு மாற்றக் கடுகிற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வரும் சூழலில் மத்திய அரசுக்கு இவரது பேச்சு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நன்றி: பசுமை விகடன்
மரபணு மாற்ற விதைகள் பற்றிய சர்ச்சைகளை அறிய இங்கே படிக்கவும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்