பி.டி. பருத்தியை அரசு ஊக்குவிக்காது: முதல்வர் ஜெயலலிதா

மரபணு மாற்றம் செய்யப்பட்ட (பி.டி.) பருத்தியை தமிழக அரசு எந்த வகையிலும் ஊக்குவிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தாமாக முன்வந்து 110-வது விதியின் கீழ் அவர் சமர்ப்பித்த அறிக்கை:

சட்டப்பேரவையில் 4.8.2011-ல் தாக்கல் செய்த 2011-12-ம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையில், “முன்னோடி தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடி திட்டம், நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியை பரவலாக்குதல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைபிடித்தல், பசுமைக் குடில், துல்லிய பண்ணையம் முறைகளில் காய்கறிகளைப் பயிரிடுதல், தோட்டக்கலைப் பயிர்களுக்கான அடர் நடவுமுறை போன்றவை தீவிரமாக பரவலாக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மாமன்றத்தில் பேசிய உறுப்பினர்கள் சிலர், பி.டி. ரகப் பருத்தி பயிரிடுவதில் பல பிரச்னைகள் இருப்பதால் இதனை அரசு ஊக்குவிக்கக் கூடாது என்ற கருத்தை தெரிவித்திருந்தனர். விவசாயிகளும், அரசு அளவில் பி.டி. ரக பருத்தி பயிரிடுவதை ஊக்குவிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரபணு பொறியியல் ஏற்பிசைவுக் குழு மூலம் (Genetic Engineering Approval Committee – GAEC) பி.டி. ரகப் பருத்திக்கு 2002-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி இப்போது பல மாநிலங்களில் அது பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பி.டி. பருத்தியின் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்பதால், லாப நோக்கோடு தனியாரிடம் பி.டி. ரக விதைகளை வாங்கி தமிழக விவசாயிகளும் பயிரிட்டு வருகிறார்கள்.  எனவே தான், நிதிநிலை அறிக்கையில் பி.டி. ரகப் பருத்தி சாகுபடி பரவலாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி என்பதாலும், விவசாயிகளுக்கு நிச்சயமான பலன் அளிக்கும் என்ற உறுதி இல்லாததாலும், இதனை அரசளவில் பரவலாக்கக் கூடாது என்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கருத்தை ஏற்று, பி.டி. பருத்தி சாகுபடியை பரவலாக்கும் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை முதல்வர் வெளியிட்ட திட்டவட்டமான அறிவிப்பு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெறுவதாக அமைந்துள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *