மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கிற்கு அனுமதி கொடுத்ததை சாடுகிறார் அன்புமணி. அரசியல் எப்படியோ,அவரின் திடமான மரபணு மாற்றப்பட்ட பயிர் எதிர்ப்பை பாராட்ட தான் வேண்டும்…
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எதுவும் இனி இந்தியாவில் அனுமதிக்கப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுடன், இதற்காக அமைக்கப்பட்ட மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவையும் கலைப்பதாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை பயிரிடுவதற்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் அளித்தால் மரபணு மாற்றப்பட்ட கடுகு வணிகப் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு வந்து விடும். இது மிகவும் ஆபத்தானது.
உலகின் பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்தியாவில் மட்டும் இத்தகைய நச்சுப் பயிர்களை அனுமதிக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை இந்தியாவில் அனுமதிக்க எந்தத் தேவையும் இல்லை.
இந்தியாவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையை சமாளிப்பதற்காகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தேவைப்படுவதாகவும், அந்த வகையில் தான் மரபணு மாற்றப்பட்ட கடுகு களஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பயிரிடுவதற்காக அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த வாதம் தவறானது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் உற்பத்தியை பெருக்குவதற்கான எந்த சிறப்பு மரபணுவும் இல்லை. கலப்பின பயிர்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திறன் எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவு தான் மரபணு மாற்றப்பட்ட கடுகிலும் விளைச்சல் திறன் அதிகமாக இருக்கும்.
இதனால் பெரிதாக எந்த விளைச்சல் புரட்சியும் நடந்து விடாது. மாறாக, கடுகின் மரபணுவை மாற்றாமலேயே இந்திய வேளாண்மை விஞ்ஞானிகள் கடந்த 60 ஆண்டுகளில் 500% அளவுக்கு கடுகு விளைச்சலை அதிகரித்துள்ளனர்.
60 ஆண்டுகளுக்கு முன் 1950-51 ஆம் ஆண்டில் இந்தியாவில் கடுகு சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 12 கோடி ஹெக்டேராகவும், விளைச்சல் 5.08 கோடி டன்களாகவும் இருந்தது. 2015-16 ஆம் ஆண்டில் சாகுபடி பரப்பு வெறும் 17% மட்டுமே அதிகரித்து 14 கோடி ஹெக்டேராக அதிகரித்த நிலையில் கடுகு உற்பத்தி 25.22 கோடி டன்னாக அதிகரித்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாகும்.
இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கடுகு சாகுபடி செய்யப்படும் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிட அனுமதிப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிவதை விட ஆபத்தான செயலாக அமையும்.
கடந்த காலங்களில் மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட பருத்தி அனுமதிக்கப்பட்டது. பூச்சிகளால் பாதிக்கப்படாத பருத்தி விதை என்று கூறித் தான் அது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், போதிய விளைச்சல் இல்லாமல் ஏராளமான உழவர்களின் தற்கொலைக்கு மான்சாண்டோ பருத்தி தான் காரணமாக அமைந்தது.
இந்தியாவில் பல மாநிலங்களில் விவசாயிகள் வேறு வழியின்றி மான்சாண்டோ பருத்தியை மட்டுமே பயிரிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில், அந்த பருத்தியை வழக்கத்தை விட அதிகமாக பூச்சிகள் தாக்குவதாகவும், இதனால் பூச்சிக்கொல்லிக்காக வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக உழவர்கள் செலவிட வேண்டியிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கப்பட்டால் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்றி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உடல்நலக் கேட்டையும் உருவாக்கும். அதனால் தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிட அனுமதிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை வணிகப்பயன்பாட்டிற்காக அனுமதிக்க அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முயன்ற போது, அதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் போர்க்கோலம் பூண்டதால் தான் அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் இப்போதும் மரபணு மாற்ற கடுகை எதிர்க்க வேண்டும்.
2012-ஆம் ஆண்டில் மரபணு மாற்றப்பட்ட கத்தரியை எதிர்த்த கட்சிகளில் பாரதிய ஜனதாவும் ஒன்று. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதற்கு மாறாக அரிசி, சோளம், கம்பு உள்ளிட்ட 21 வகையான மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வு செய்ய அனுமதித்துள்ளது. இது மன்னிக்க முடியாத பெருந்துரோகமாகும்.
இதற்காக வழங்கப்பட்ட அனுமதியையும், மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அளித்துள்ள அனுமதியையும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எதுவும் இனி இந்தியாவில் அனுமதிக்கப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுடன், இதற்காக அமைக்கப்பட்ட மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவையும் கலைப்பதாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்”
இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்