மரபணு மாற்றுக் கடுகுக்கு எதிர்ப்பு ஏன் ?

டெல்லிப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘டி.எச்.எம். 11’ என்ற ரகத்தோடு மூன்று மரபணு மாற்று கடுகு ரகங்களை  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது. நாடெங்கிலும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு ரகம், இயல்பிலேயே பல சிக்கல்கள், பாதகங்களை தனக்குள் கொண்டுள்ள போதிலும் அவை, திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனுமதித்தால், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் சவாலாக இருக்கும். இதே வகையான கடுகை ஏற்கெனவே ‘பேயர்’ (Bayer) என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்க அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது.

50-க்கும் மேற்பட்ட பயிர்கள் ஊடுருவ வாய்ப்பு:

அனுமதி மறுக்கப்பட்டப் பிறகு பன்னாட்டு நிறுவனங்கள், டெல்லி பல்கலைக்கழகத்தை முன்னிறுத்தி காய் நகர்த்தி வருகின்றன. இப்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியைக் காட்டியே, இன்னமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ வைப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். இதற்கு ஆதாரமும் உள்ளது.

தற்போது டெல்லிப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார் மற்றும் பார் என்ற மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரபணுக்களுக்கு பேயர் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமைப் பெற்றுள்ளன. இந்த மரபணுக்களைப் பயன்படுத்துவதற்கு அந்த பன்னாட்டு நிறுவனங்களுடன் டெல்லிப் பல்கலைக்கழகம் செய்துள்ள ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் இன்னும் மறைத்தே வைக்கப்பட்டுள்ளன.

விளைச்சல் என்னும் மாயை:

அதிக விளைச்சலுக்காகத்தான் பி.டி. கடுகுகள் கொண்டுவரப்படுவதாக சொல்லப்படுவது, அப்பட்டமான பொய். இவர்கள் சொல்லும் மகசூலை விட அதிக மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன. அதோடு இந்தப் புதிய ரகத்தை, தற்போது புழக்கத்தில் உள்ள கடுகு ரகங்களோடு ஒப்பிடாமல் 40 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ரகங்களோடு ஒப்பீடு செய்துள்ளனர்.

கடுகு எண்ணெயின் மூலம் இந்திய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து விட முடியும் என்பது, தவறான கருத்து. இதை மத்திய அரசு எப்படி நம்புகிறதென்று தெரியவில்லை. விளைச்சல் குறித்த ஆய்வு மற்றும் உயிரிப் பாதுகாப்பு ஆய்வுகளில் (மனிதர், விலங்கு, சூழல்களுக்கு பாதுகாப்பானதா என்ற ஆய்வு) சாதகமான முடிவுகள் வர வேண்டும் என்பதற்கேற்ற வகையில் ஆய்வுகளை வடிவமைத்துள்ளனர்.

தடை செய்த உலக வேளாண் அமைப்பு:

இந்த ரகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர், மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் உறுப்பினர். மற்றொரு விஞ்ஞானி அக்குழுவின் முன்னாள் உறுப்பினர். இந்த மரபணு மாற்றுக் கடுகை உருவாக்கிய முக்கிய விஞ்ஞானி மீது மற்றொரு விஞ்ஞானியிடம் இருந்து மரபணு மாற்றுக் கடுகு தொழில்நுட்பத்தை திருடியதாக வழக்கு உள்ளது. தவிர, இன்னொரு விஞ்ஞானியின் ஆய்வைத் திருடி வெளியிட்ட வழக்கும் இவர் மீது உள்ளது.

பார்னேஸ் மரபணு, செடிகளில் உள்ள ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்கும். அதனால், உலக வேளாண் அமைப்பு இந்த மரபணுவைத் தடை செய்துள்ளது. கடுகில் செலுத்தப்பட்டுள்ள பார்னேஸ் மற்றும் பார் ஸ்டார் ஆகிய மரபணுக்களுக்கு மட்டும்தான் உயிரிப்பாதுகாப்பு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் களைக்கொல்லி தாங்கு திறன் தரும் பார் மரபணு சோதனைக்குட்படுத்தப்படவில்லை.இந்த மரபணு மாற்றுக் கடுகினால், தேனீக்கள் அதிகம் பாதிக்கப்படும். ஏற்கெனவே ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததற்கு பேயர் நிறுவனத்தின் களைக்கொல்லி, பூச்சிக் கொல்லிகள்தான் காரணம் என்று அறியப்படுள்ளது.

பாரம்பர்ய ரகங்கள் பாதிக்கப்படும்:

மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது உயிருள்ள தொழில் நுட்பம் என்பதால், இவை தன்னைத் தானாகவே மறுபதிப்பு செய்து கொள்ளக் கூடும். ஒருமுறை உயிரில் கலந்து விட்டால் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. காற்று, தேனீக்கள், பிற பூச்சிகள் மூலம் மரபணு கலப்படம் ஏற்படுவதைத் தடுக்க எந்த வழியும் இல்லை. இந்த மரபணு மாற்றுக் கடுகில் இருந்து மரபணுக்கள் இந்தியப் பாரம்பர்ய ரகங்களுடன் கலந்தால், அந்தப் பாரம்பர்ய ரகங்கள் நிரந்தரமாக மரபணு மாற்றுக் கடுகு ரகங்களாக மாறிவிடும். அதனால், இயற்கை விவசாய சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

விவசாயத்துக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு:

தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் மரபணு மாற்றுப் பயிர்களுக்குத் இடமளிக்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவித்துள்ளனர். தமிழகம், மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கும் விதை நிறுவனங்களின் வேட்டைக் காடாகி, விவசாயிகளும் விவசாயமும் அழிவதோடு, பொது மக்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற தமிழ்நாட்டின் நிலைப்பாடு தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, வேளாண்மை மாநிலப் பட்டியலில் உள்ள பிரிவு.  ஆனால், மத்திய அரசு அனுமதிக்கும் பயிரை, மாநிலங்களுக்குள் ஊடுருவாமல் தடுக்க சட்டங்கள் இல்லை. அதனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை மத்திய அரசு அனுமதிப்பதால், அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள மாநிலங்களுக்கான உரிமை அழிக்கப்பட வாய்ப்புள்ளது.

இக்காரணங்களைக் காட்டி,  மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு தமிழ்நாட்டுக்கு வருவதைத் தடுக்க தமிழக அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். தமிழகத்தின் நிலைப்பாட்டை உறுதிப்பட மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசின் செயல்பாட்டை தடுக்க முடியாத சூழ்நிலையில், குறைந்தபட்சம் தமிழ்நாட்டிலாவது மரபணு மாற்றுக் கடுகை அனுமதிக்காத வகையில் தமிழக கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *