மரபணு மாற்ற பருத்தி விதையால் வெகுவாக குறைந்துள்ள மகசூல்

மஹாராஷ்டிராவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளின் மீது புழுக்கள் தாக்குதல் பற்றியும் இந்த தொழிற்நுட்பத்தின் பொய்யன்னா வாக்குறுதிகளை பற்றியும் முன்பே படித்து உள்ளோம். இப்போது தமிழ்நாட்டிலும் இந்த சோக கதை. இதை பற்றிய செய்தி தகவல்

கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிரிடப்பட்ட மரபணு மாற்ற பி.டி. ரக பருத்தி விதைகளால், மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி வட்டத்தில் உள்ள நல்லூர், மங்களூர் ஆகிய ஒன்றியங்களில் மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதற்காக தனியார் விதைக் கடைகளில் விற்கப்படும் விதைகளை வாங்கி விதைப்பது வழக்கம்.நிகழாண்டில் நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் 44,460 ஏக்கர் அளவில் மக்காச்சோளப் பயிரும், 16,055 ஏக்கர் அளவில் பருத்திப் பயிரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் மரபணு மாற்ற பி.டி. ரக பருத்தி விதைகளால் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இரண்டரை முதல் மூன்று அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய பருத்திச் செடிகள், தற்போது பத்து அடிக்கு வளர்ந்துள்ளன.

பாரம்பரிய பருத்திச் செடிகளில் காய் பிடிக்கும் பருவத்தில் புழுக்களின் தாக்குதல் அதிகம் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டயம் ஏற்பட்டது.

இதனால், பருத்தியைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.

எனவே, பருத்தியில் காய் புழுக்களைக் கட்டுப்படுத்த இயற்கையாக மண்ணில் வாழும் நுண்ணுயிரியின் உடலில் உள்ள மரபணுவை பருத்திச் செடியின் மரபணுவுடன் இணைத்து மாற்றம் செய்யப்பட்டதே பி.டி. விதைகள். இதை முழுமையாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தாத நிலையில், லாப நோக்கத்துக்காக அமெரிக்க மான்சான்டோ நிறுவனம் மரபணு மாற்றுப் பயிரைத் தயாரித்து, இந்திய விவசாயிகளிடம் திணித்தது.

காய் புழுக்களைக் கட்டுப்படுத்த காய்களில் மட்டுமே சுரக்க வேண்டிய நஞ்சு, செடி முழுவதும் சுரந்ததுதான் ஆபத்தின் உச்சம். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல், பி.டி. க்கு எதிரான சக்தி காய் புழுக்களுக்குக் கிடைத்ததால் பருத்திச் செடிகள் அபரிமிதமாக வளரத் தொடங்கின. செடியில் காய்ப்பு இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் பயிர் பருத்தியாகும். இதைத்தொடர்ந்து பி.டி. கத்தரி விதையை உருவாக்கிய மான்சான்டோ நிறுவனம், தொடர்ந்து வெண்டை, தக்காளி, நிலக்கடலை, சோளம், கடுகு, மக்காச்சோளம், பப்பாளி, உருளைக்கிழங்கு, வாழை ஆகிய பயிர்களிலும் மரபணு மாற்றம் செய்த விதைகளை அறிமுகப்படுத்த முயன்று வருகிறது.

கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பி.டி. பருத்திச் செடிகள் இயற்கைக்கு மாறாக பத்தடி உஹயரத்துக்கு வளர்ந்ததால், பல செடிகளில் காய்களே இல்லாமலும், சில செடிகளில் காய்களின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படுகின்றன. ஏக்கருக்கு அதிகபட்சம் 25 முதல் 30 குவிண்டால் கிடைக்க வேண்டிய பருத்தி 10 குவிண்டால் அளவுக்கே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

கோவையில் செயல்படும் பருத்தி பயிருக்கான வேளாண் விஞ்ஞான ஆராய்ச்சி மையம், விதைகளின் முளைப்பு திறன் குறித்து ஆய்வு செய்து தரமான விதை என சான்று அளிப்பதை மட்டுமே தன் பணியாகக் கொண்டுள்ளது. வயலில் செடியின் அபரிமிதமான வளர்ச்சி குறித்தும், முழுமையாக காய்ப்பு இல்லாதது குறித்தும் வேளாண் விஞ்ஞானிகள் இதுநாள் வரை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைத் தீர்க்க முன்வரவில்லை.

பத்தடிக்கும் மேல் வளர்ந்த பருத்திச் செடிகளில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்தை அடித்தபோது தலைக்கு மேல் வளர்ந்த செடிகளால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் இருவர் உயிரிழந்தனர்.

தற்போது பருத்தி சாகுபடியில் ஏற்பட்டுள்ள மகசூல் இழப்பை முழுமையாகக் கணக்கிட்டு, இழப்பீடு வழங்கி பருத்தி விவசாயிகளைக் காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரவீந்தரன்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *