மீண்டும் கிளம்புகிறது மரபணு பூதம்

ரபணு பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் இந்தியா வந்து சென்றாலும், இந்திய பிரதமர் அங்கு சென்று விட்டு திரும்பினாலும் இந்த பூதம் கிளம்பும். அத்தகைய வல்லமை கொண்டவை பன்னாட்டுக் கம்பனிகள். ஆனால் இந்தமுறை நமது கைகளைக் கொண்டே கண்ணை குத்திக்கொள்ளச் சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

ஆம்… வட இந்தியாவின் முக்கிய எண்ணெய்வித்து பயிரான கடுகை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, மரபணுமாற்று கடுகு விதைகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் மூலம் கொண்டு வர இருக்கிறார்கள்.

மரபணு மாற்று பயிர்களை, உலகளவில் ஆறு நாடுகள் மட்டுமே பயிர் செய்துவருகின்றன. இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், ‘இதனை பாதுகாப்பற்றது, சுற்றுச்சூழலையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நுகர்வோரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்’ என்று தடை விதித்திருக்கின்றன.

இந்த வேளையில் நம் நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த அவசரம்?

பிகாரில் இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன், திருட்டுத்தனமாக சமர்ப்பிக்கப்பட்ட மரபணு மாற்று குறித்த விண்ணப்பத்தினை பரிசீலிப்போம் என்று சமிக்ஞைகள் கொடுக்கிறார், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இவர் முன்னரே பல எதிர்ப்புகளையும், தரவுகளையும் மீறி களப்பரிசோதனைக்கு, மரபணு மாற்று பயிர்களுக்கு ரகசியமாக அனுமதி அளித்தவர்.

ஆனால் மீட்டெடுக்க முடியாத, தூய்மைக்கேடு விளைவிக்கக்கூடிய, நாம் எதிர்பார்க்காத பின் விளைவுகளை தரக்கூடிய, அடுத்த தலைமுறை எப்படி வெளிப்படும், எந்த குணம் பிரதானமாக விளங்கும் என்று எதுவுமே நிர்ணயிக்க முடியாத ஒரு கறுப்புப் பெட்டியை விவசாயிகளுக்கு விற்கின்றனர்.

இது ஒரு தொடக்கம்தான்.

கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் முதல் நெல், மூலிகைகள் என்று எல்லாம் அடுத்தடுத்து தயாராக உள்ளது. மேலும் அவை நமது உடலையும், நமது உணவுச் சக்கரத்தையும், பாரம்பரிய விதைகளையும் பாதிக்கும். தேனீக்களின் எண்ணிக்கையை குறைத்து பல இன்னல்களை கொடுக்கும். கடுகு எண்ணெய் (பாரம்பரிய) மருத்துவத்தில் பெரிதும் உபயோகிக்கப்படுகிறது. இப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய விதைகள் எல்லாம் பாதிக்கப்படும்.

2002-ல் பேயர் கம்பெனியின் மரபணு கடுகு விதைகள் பல காரணங்களினால் நிராகரிக்கப்பட்டது. அதே விதைதான் இப்பொழுது மீண்டும் வருகிறது. இதனை ஏன் அனுமதிக்க வேண்டும். அன்று எழுப்பிய கேள்விகளும், சந்தேகங்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. அப்படியிருக்கும்போது இந்த கடுகு விதைகளை சூசகமாக இந்திய விவசாயத்தில் நுழைப்பதன் காரணம் என்ன?

70% கடுகினை பயன்படுத்தும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மூன்றுமே களப்பரிசோதனை கூடாது என்று கூறுகின்றன. இவ்வளவுக்கும் பி.ஜே.பி கட்சியின் அரசுகள்தான் ஆளும் அரசுகளாக இருந்து வருகின்றன. மரபணு மாற்று விதைகள் வந்தால் களைகள் கட்டுப்படும் என்று சொன்னார்கள். இதையும் மீறி அமெரிக்காவில் ‘ராட்ஷச களைகள் Giant weeds’ வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை கட்டுப்படுத்தவே முடியாமல் பரிதவித்து வருகிறோம். இவ்வளவு இருந்தும் இந்த மரபணு மாற்று விதைகளை மீண்டும் மீண்டும் கொண்டுவர துடிப்பது ஏன்?

இந்த மரபணு மாற்று விதைகளுக்கு அவர்கள் கூறும் காரணம் 15 முதல் 25% வரை மகசூலை பெருக்கலாம் என்கிறார்கள். செம்மை நெல் சாகுபடியில் நெல் பயிர் செய்யும்போது 15-25% மகசூல் பெருகிறது என்று விவசாயிகள் நிரூபித்து உள்ளார்கள். இப்படியிருக்கும் மரபணு மாற்று விதைகளின் தேவை என்ன இங்கு இருக்கப் போகிறது.

ஏற்கெனவே கொண்டு வரப்பட்டு திணிக்கப்பட்ட பி.டி. பருத்தி நம் விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இன்று நடந்து வரும் விவசாயிகள் தற்கொலையில் 70% வரை பருத்தி விவசாயிகளே. பி.டி. பருத்தி பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தை குறைக்கும், அதனால் விவசாயிகளின் செலவுகள் குறையும் என கூறி விற்பனை செய்தனர். ஆனால் பூச்சிக்கொல்லிகள் விற்பனை குறைந்ததா? இல்லை! எப்படி குறையும்? மரபணு விதைகளை விற்கும் அதே 5 கம்பனிகள் தாம் பூச்சிக்கொல்லிகளையும் விற்கின்றன.

இன்னொன்று பி.டி. பருத்தியில் புதிய வகையான பூச்சிக்களின் வரத்து அதிகமாகிவிட்டன. சமீபத்தில் பஞ்சாபில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களில் வெள்ளை பூச்சித்தாக்குதல் வந்து எல்ல இடங்களிலும் பயிரோடு மடக்கி உழுதுவிட்டனர். இதனால் பல ஆயிரம் கோடிகள் நட்டம். மேலும், எந்த காய்ப்புழுவிற்காக கொண்டு வரப்பட்டதோ, இந்த பி.டி பருத்தி, அதனையும் இந்த புழுக்கள் வென்றுவிட்டன.

சமீப காலங்களில் களப்பரிசோதனை களங்களிலும் பல்வேறு தூய்மைக்கேடு மற்றும் சுகாதார கேடுகள் நடந்தேறியுள்ளன.  மேலும் இன்றளவும் அவை உயிரி-பாதுகாப்பானவை (Bio safe) என்று நிரூபிக்கப்படவில்லை.

அந்த கம்பெனிக்களுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே பயனளிக்கக்கூடிய இந்த தொழில்நுட்பம், தேவையற்றது. உச்ச நீதிமன்றத்தின் (TEC-Technical Expert Committee)யின் அறிக்கை மற்றும் நாடாளுமன்ற உயர்மட்டக்குழுவின் அறிக்கையிலும் திட்டவட்டமாக ‘இந்த மரபணு மாற்றுப் பயிர்களும் உணவும் நமது நாட்டிற்கு தேவை இல்லை, களப்பரிசோதனை கூட அறவே தேவை இல்லை’ என்றே குறிப்பிட்டுள்ளன.

விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், சூழலியலாளர்கள், வேளாண் நிபுணர்கள் என பல தரப்பினரும் சொல்கிறார்கள். இது நம் நாட்டுக்கு தேவையில்லை என்று. ஆனால் மத்திய அரசுதான் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறது. அது என்ன காரணத்துக்கு என்று அனைவருக்கும் தெரியும். வலிமையான எதிர்ப்புக் குரல்கள் மூலமாகத்தான் இதை தடுத்து நிறுத்த முடியும். அதற்கு விவசாயிகள், நுகர்வோர் என அனைவரின் ஒத்துழைப்பும் கண்டிப்பாகத் தேவை.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *