வாழைக்கு வருகிறது ஆபத்து?

எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய பழம். நல்ல காரியம் எதுவானாலும் தட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் கனி அது. உண்பதற்கு இனிப்பான பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும்; இட்டு உண்ண இலை; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழு மரம்; பித்தம் போக்கிட வேர் – என அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களையும் நமது பயன்பாட்டுக்குத் தருவது வாழை.

முக்கனிகளில் ஒன்றான இதில் பூவன், நாடன், பேயன், செவ்வாழை, கதலி – எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் சுவை மட்டுமல்லாமல், ஏதாவது ஒரு மருத்துவக் குணமும் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

 ‘வாழையடி வாழையாக’ எனும் வாழ்த்து வரிகள் இறப்பிலா வாழ்க்கையின் தொடர் இயக்கத்தைக் குறிக்கின்றன.

ஏழைகளுக்குப் பசியை ஆற்றும் இந்த எளிய உணவு, இப்போது பணக்கார மேன்மக்களுக்கு அஜீரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பில் கேட்ஸ் – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்.

இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக நம்பப்படுபவர். உலகின் மிகப் பெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தின் தலைவருக்கும் வாழைப்பழத்துக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது.

மரபணு மாற்றப் பயிர்கள்

இது மரபணு மாற்றப் பயிர்களின் காலம்.’துள்ளும் தக்காளி’, ‘துவளாத கத்தரிக்காய்’ எனக் குரலெழுப்பி வந்து கொண்டிருக்கின்றன மரபணு மாற்ற உணவுப் பயிர்கள்.

மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள், தங்கள் காப்புரிமை விதைகளை ஏழை நாடுகளில் விற்றுப் பெருத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் உணவுப் பயிர்களின் மீது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருவதால், கிட்டத்தட்டத் தங்களைக் கடவுளாகவே கருத ஆரம்பித்துவிட்டன போலும்

உயிர்களை உருவாக்குகிறோம்..உணவை உருவாக்குகிறோம்..ஊட்டத்தை உருவாக்குகிறோம். – என்ற முழக்கத்தை அவை முன்வைக்கின்றன.

திருடப்படும் சொத்து

வானம் பார்த்த பூமியில் விளைந்து நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஊட்டம் கொடுத்துக்கொண்டிருந்த புன்செய் பயிர்களை, இப்போது தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இயற்கை வழி விளைவித்த உணவுப் பொருட்கள் விற்கப்படும் கடைகளை ஒரு நகரத்தில் ஒன்றிரண்டு மட்டுமே காண முடிகிறது.

கம்பங்கூழ் அருந்திப் பழக்கப்படாத வீடுகளில் எல்லாம் தவறாமல் ஹார்லிக்ஸ் புட்டிகள் இருக்கின்றன. சோளம், ராகி, வரகு, சாமையை மறந்துவிட்டுக் காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள் தமிழ்மக்கள்.

விதைத் தானியமே எடுத்துவைக்க முடியாத விதைகளை மட்டுமே விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள். ஒரு விவசாயி தனது அடுத்த விதைப்புக்கு அவர்களை மட்டுமே நாடி கையேந்தி நிற்க வேண்டிய நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

மரபணு மாற்ற வாழை

இந்நிலையில், பில்கேட்ஸ் எடுத்துள்ள சமீபத்திய முயற்சி நமது விவசாயிகளைத் திடுக்கிட வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியப் பயிர் விஞ்ஞானி ஜேம்ஸ் டேல் என்பவருடன் சேர்ந்து புதிய ஆராய்ச்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்திருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

‘வாழைப்பழம் ஒரு முக்கிய உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட-’ என்பதே அந்த அரிய கண்டுபிடிப்பு. இந்த ’கண்டுபிடிப்பின்’ பயனாக இந்தியா, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் குழந்தை பிறப்பு மரணங்களைத் தடுக்க முடியுமாம்.

மேலும், பிள்ளை பெறும் தாய்மார்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் ரத்தச் சோகை நோயைத் தவிர்க்கவும் முடியுமாம். தான் கண்டுபிடித்த புதிய வாழையில் இதற்கான மருத்துவக் குணங்களைப் பொதிந்து வைத்திருப்பதாக மார்தட்டுகிறார் பில் கேட்ஸ்.

மான்சாண்டோவின் மறுவடிவம்

‘மான்சாண்டோ நிறுவனம் எவ்வாறு நமது பருத்தி விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்ததோ, அதே திட்டத்தின் மறுவடிவம்தான் இது. நமது வாழைச் செல்வத்தை முழுமையாக அபகரிப்பது மட்டுமே பில்கேட்ஸின் நோக்கம்’-என எச்சரிக்கை விடுக்கிறார் புகழ்பெற்ற பயிர் விஞ்ஞானியும் சூழலியல் போராளியுமான டாக்டர் வந்தனா சிவா.

மான்சாண்டோவின் உணவுப் பயிர் இருப்பில் 5 லட்சம் பங்குகளின் மீது பில்கேட்ஸ் முதலீடு செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நமது வளமார்ந்த பல்லுயிர் சூழலைச் சூறையாடுவதும் உணவு உற்பத்தி, நுகர்வின் மீது தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும் பல பன்னாட்டு நிறுவனங்களின் ரகசியத் திட்டமாக இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏற்கெனவே ஆந்திர, மராட்டிய மாநிலங்களின் பருத்தி விவசாயிகளுக்கு மலட்டு விதைகளையும், மரணத்தையும் பரிசாய்த் தந்தவை இந்த நிறுவனங்கள்தான். எனவே, பணம் படைத்தவர்கள் விடுத்துள்ள இந்த உணவு ஆதிக்கப் போரை தீரத்துடன் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

– தொடர்புக்கு: avainayagan.osai@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *