BT பருத்தியை பற்றிய தினமணி கட்டுரை

பருத்தியை பற்றி தினமணியில்   வந்துள்ள நல்ல கட்டுரை :

பி.ட்டி பருத்தியின் ஆதிக்கம்

தொழில் – வணிக நாளிதழ்களில் இன்றைய விஷயம், பி.ட்டி பருத்தி விளைந்து விவசாயிகள் சிலர் குபேரர்களாகிவிட்டதாகச் சற்று மிகைப்படுத்தப்பட்ட நிஜக்கதைகள், உண்மைதான். வசதியான சில விவசாயிகளுக்கு மட்டும் கூடுதல் செலவில் நல்ல பலன்கள் கிடைத்தன. பருத்தி விளைச்சல் அதிகரித்ததும் பொய்யல்ல. ஏற்றுமதி தடையுற்றுப் பருத்தி விலை சரிந்துவிட்டதும் உண்மைதான்.

எனினும், உற்பத்தி உயர்வுக்கு வழங்கப்பட்ட விலை என்ன?நிஜமாகப் பருத்தி – பி.ட்டி பருத்தி சாகுபடியில் பூச்சி – பூசணம் இல்லாமல் விளைந்ததா? உற்பத்தி உயர்ந்தாலும் உற்பத்தித்திறன் உயர்ந்ததா? பருத்தி விதைகளில் பாரம்பரியமான நல்ல ரகங்கள் அழிந்தது எப்படி? பருத்தியில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு அடிப்படையான பல்வேறு பாரம்பரிய ரகங்கள் ஒழிக்கப்பட்டு ஒரே ரகம் அதுவே பி.ட்டி ரகம் என்ற ஒரே ரக சாகுபடி – மோனோக்ராப்பிங் என்ற அபாயம் சூழ்ந்தது எப்படி?பொருளியல் அடிப்படையில் பருத்தி ஏற்றுமதிக் கொள்கையில் குழப்பம் ஏன்?

உண்மை நிலவரத்தை இனி கவனிப்போம்.

இந்த நாட்டின் இயற்கை வளம், பல்லுயிர்ப்பெருக்கப் பண்பாடு பற்றி நிபுணர்களும், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், சூழலியல் வல்லுநர்களும் என்னதான் கரடியாகக் கத்தினாலும்கூட பி.ட்டி பருத்தியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

2004-05-ம் ஆண்டில் மொத்த பருத்தி சாகுபடி நிலப்பரப்பில் 5.6 சதவீதம் பி.ட்டி பருத்தி வகித்த நிலை, 2010-11-ல் ஏறத்தாழ 90 சதமாகிவிட்டது. மொத்த பருத்தி நிலப்பரப்பு 111.61 லட்சம் ஹெக்டேரில் பி.ட்டி பருத்தி மட்டும் 98.54 லட்சம் ஹெக்டேரில் சாகுபடியாகிறது.

இது எப்படி நிகழ்ந்தது?

சொல்லப்போனால், பி.ட்டி பருத்தி விதை காரணமாக பருத்தி சாகுபடி நிலப்பரப்பு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பருத்தி சாகுபடி நிலப்பரப்பு 25 லட்சம் ஹெக்டேர் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி அதிகபட்சமாக 312 லட்சம் பேல்கள் (லிண்ட் வடிவில்) என்றாலும் உற்பத்தித்திறன் 478 கிலோவிலிருந்து 475 கிலோவாகச் சரிந்துள்ளது ஏன்?

காட்டன் அட்வைசரி போர்டு வழங்கியுள்ள சாகுபடிப் புள்ளிவிவரம் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டும் உண்மை பி.ட்டி பருத்தி அறிமுகமானாலும் உற்பத்தித்திறனில் உயர்வு இல்லை.

காலம் செல்லச் செல்ல உற்பத்தி குறையும்.பி.ட்டி என்ற பெயர் ஏனெனில் பி.ட்டி விதையில் “பாசில்லஸ் துருஞ்சியன்சிஸ்’ என்ற விஷக்கிருமிகள் கிரையோஜீன்ஸ் உள்ளது. பருத்தியைத் தாக்கும் காய்ப்புழுவைக் கொல்லக்கூடிய இந்த விஷக்கிருமி உள்ளடக்கிய இந்த பி.ட்டி தொழில்நுட்பத்தை 1986-ல் அமெரிக்காவில் மான்சாண்டோ உருவாக்கியது.2002-ல் மான்சாண்டோவுடன் கூட்டு ஒப்பந்தம் வைத்து ள்ள மஹைக்கோ (மகாராஷ்டிரா ஹைபிரிட் சீட் கம்பெனி) இந்தியாவில் பி.ட்டி பருத்தி விதை உற்பத்தி செய்து மரபணுப் பொறியியல் ஒப்புதல் கமிட்டி அனுமதியைச் சுலபமாகவும் பெற்றுள்ளனர்.

பி.ட்டி ரகப் பருத்தி விதை மான்சாண்டோவால் காப்புரிமை செய்யப்பட்டிருப்பதால் அதற்கான ராயல்டி தொகையும் பருத்தி விதையில் அடக்கம்.

ஒரு கிலோ பி.ட்டி பருத்தி விதைக்கு ரூ. 1,000, 2,000 என்று விலைகொடுத்து விவசாயிகள் வாங்கினாலும் விளைச்சலில் பாதிப்பு குறைவு என்பதால் ஆண்டுக்கு ஆண்டு பி.ட்டி பருத்தி விதைகளின் தேவை உயரவே மஹைக்கோ மான்சாண்டோவுக்குக் கொள்ளை லாபம்.

கடந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பி.ட்டி ரகங்களை உற்பத்தி செய்து விற்கின்றனர்.

உண்மையில் பல பி.ட்டி ரகங்கள் என்று சொல்வதெல்லாம் பச்சைப்பொய்.

நாக்பூர் மைய பருத்தி ஆய்வு நிறுவன விஞ்ஞானி, எல்லாம் ஒரே பி.ட்டி ரகம்தான் என்று கூறுவதுடன் எல்லாவற்றிலும் பி.ட்டி கிரையோஜீன்ஸ் மட்டுமே உண்டு என்கிறார்.சில புவியியல் தட்பவெப்ப சூழ்நிலைக்கு மட்டுமே நல்ல பலன் தரும் என்கிறார்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால், பருத்தி விளையுமிடம் 3 மாநிலங்களில் மட்டுமே கணிசமாயுள்ளது. முதலாவது மகாராஷ்டிரம் (35%) குஜராத் (25%) ஆந்திரம் (15%).பருத்தி விளையக்கூடிய கரிசல் நிலம் அடங்கிய தக்காண பீடபூமியே பன்னெடுங்காலமாகப் பருத்தி விளைச்சலுக்குப் புகழ்பெற்ற இடம். நான்காவதாக மத்தியப் பிரதேசம் (5%) பஞ்சாப் (4%) ஹரியாணா (4%) ராஜஸ்தான் (2%) தமிழ்நாடு (1%) ஒரிசா (1%).

மகாராஷ்டிர மாநிலத்தில்தான் பாரம்பரியமான பருத்தி விதை ஆராய்ச்சிகள் நடந்தன. சரத் பவாரின் கைங்கர்யத்தினால் பல்வேறு மாநில அரசுகள் பருத்தி விதை ஆராய்ச்சியைக் கைவிட்டன.

பொதுத்துறையில் பருத்தி விதை வினியோகத்தை பூஜ்ஜியமாக்கி விற்பனை உரிமையை ஏகபோகமாக மஹைக்கோ – மான்சாண்டோவுக்கு சரத் பவார் வழங்கி வசதியாகிவிட்ட சூழ்நிலையில், பி.ட்டியைத் தவிர்த்து வேறு எந்தப் பருத்தி விதைகளையுமே சந்தைக்குள் வராதபடி கவனிக்கப்படுகிறது.

விவசாயிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பி.ட்டி பருத்தியை மட்டுமேதான் சாகுபடி செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது.இன்று மொத்த பருத்தி நிலப்பரப்பில் 90 சதவீதத்துக்கு மேல் பி.ட்டி பருத்தி, மீதி 10 சதவீதம் மட்டுமே சில விவசாயிகள் விடாப்பிடியாகச் சில நல்ல தேர்வு ரகங்களைக் காப்பாற்றுவதால் எஞ்சியுள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக எல்லா பாரம்பரியத் தேர்வு ரகங்களும் காணாமல் போய்விடும்.பி.ட்டி பருத்தி ரக ஏகபோக சாகுபடியால் ஏற்படக்கூடிய சூழல்கேடுகள் – மனித நலவாழ்வுக் கேடுகள் ஒருபுறம் இருக்கட்டும். பி.ட்டி பருத்தி சாகுபடியால் பூச்சி – பூசண மருந்துகளின் தெளிப்புகள் நின்றனவா?

பி.ட்டி பருத்தி மூலம் நல்ல விளைச்சலைப் பெற வேண்டுமானால் முன்பைவிட அதிகமாக பூச்சிமருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.பி.ட்டி பருத்தி விதையில் சாதகமான விஷயம் காய்ப்புழுக் கட்டுப்பாடு மட்டுமே.

தத்துப்பூச்சி, இலைப்பூச்சி, தண்டு உறிஞ்சி மாவுப்பூச்சி – வெள்ளை அசுவினி என்று பல முன்பைவிட அதிகமாகத் தாக்குவதுடன் புதிய புதிய பூச்சி ரகங்களும் பயிர்களைத் தாக்கி வருகின்றன.

பருத்தி சாகுபடியில் மையப் பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ள தகவல் அடிப்படையில், பருத்தி சாகுபடியில் 2005-ம் ஆண்டு பூச்சி பூசண உயிர்க்கொல்லி – களைக்கொல்லிகளுக்குச் செலவான தொகை ரூ. 2,439 கோடி. 2010-ல் இதுவே 7,684 கோடி ரூபாய்களாக உயர்ந்துவிட்டது.

மிக மிக மோசமான பூச்சி நிர்வாகக் கட்டுப்பாடு காரணமாக பி.ட்டி பருத்தி ரகத்தில் புதிய புதிய நோய்க்குறிகள் அரும்பிவிட்டன.பி.ட்டி பருத்தியைப் பற்றிச் சில வியப்பான தகவல்களும் உண்டு.

பாகிஸ்தானில் பி.ட்டி பருத்தி சாகுபடி இல்லை. பாகிஸ்தானில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவுமில்லை. ஆனால், பி.ட்டி பருத்தி சாகுபடி இல்லாமலேயே பாகிஸ்தானில் உற்பத்தித் திறன் இந்தியாவைவிட அதிகமாயுள்ளது.இந்தியாவில் 2010-11-ல் தலா ஹெக்டேர் விளைச்சல் 475 கிலோ. இதே ஆண்டில் பாகிஸ்தான் விளைச்சல் 700 கிலோ. பாகிஸ்தான் தவிர, பருத்தி விளையும் பல்வேறு மேற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலும் பி.ட்டி தொழில் நுட்பம் கடைப்பிடிக்காமல் தலா ஹெக்டேர் விளைச்சல் கூடுதலாக உள்ளது.

இதற்கு வழங்கப்படும் ஒரே விளக்கம் இந்தியாவில் மட்டுமே காய்ப்புழுவின் தாக்குதல். எவ்வளவு பூச்சிகள் புழுக்கள் இருந்தாலும், காய்ப்புழுத் தாக்குதல் ஏற்படுமானால் பஞ்சின் தரம், இழைகளின் நீளம் எல்லாம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.உலக விவசாய வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால், குறிப்பாக முதல் உலகப் போர்க் காலகட்டத்தில் அமெரிக்காவே பருத்தி சாகுபடியில் முதல்நிலை வகித்து வந்தது. அப்போது வாழ்ந்த ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற கறுப்பு விவசாயம் மற்றும் விவசாயப் பொருளியல் விஞ்ஞானி, பருத்தி சாகுபடியால் மண்வேகமாக வளம் இழப்பதைக் கண்டுபிடித்து பருத்திக்கு மாற்றாக வேர்க்கடலை சாகுபடியை அறிமுகப்படுத்தினார்.

வேர்க்கடலை லெகுமினஸ் பயிர் – அதாவது மண்ணில் வேர்மூலம் காற்றில் உள்ள நைட்ரஜனை உட்கொண்டு மண்ணை வளப்படுத்தும் பருப்புவகைப் பயிர் என்பதால் பருத்தி சாகுபடியால் இழக்கப்பட்ட மண்வளம் வேர்க்கடலை சாகுபடியால் மீட்கப்பட்டதுடன் பீநட் பட்டர் – கடலை வெண்ணெயால் விவசாயிகளுக்கு லாபம் கிட்டியது.

அப்போது பசுவெண்ணெய்க்கு நெருக்கடி இருந்தது. அமெரிக்க சமையலில் கடலெண்ணெய்க்கு இடம் இல்லை. கடலை வெண்ணெய்க்குத் தேவை உண்டு.அன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவில் சுமார் 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் – அதாவது பருத்தி சாகுபடியான நிலத்தில் வேர்க்கடலை விதை ஊன்றப்பட்டது.

எனினும், அமெரிக்காவில் பருத்தி சாகுபடி நிலப்பரப்பு சற்று குறைந்தது என்றாலும் இன்னமும் சுமார் 5 லட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி நிகழ்கிறது. அமெரிக்காவைவிட இந்தியாவில்தான் பி.ட்டி பருத்தி சாகுபடி முழுமையாக அதிக அளவில் நிகழ்கிறது.

பி.ட்டி பருத்தியின் ஆதிக்கம் நீடிக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஆண்டுக்கு ஆண்டு பி.ட்டி பருத்தி சாகுபடிச் செலவு உயர்கிறது. பூச்சி – பூசண மருந்துச் செலவு, களைக்கொல்லிச் செலவு, விதைவிலை, ரசாயன மருந்தின் கூடுதல் உபயோகம் இழக்கப்படும் மண்வளம் ஆகியவற்றை அனுசரித்து எஞ்சிப்போனால் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் பி.ட்டி வீரியம் இழக்கும். ஏனெனில், அந்த அளவில் பருத்தி பயிரிடப்பட்ட நிலம் வளத்தை இழக்கும்.

இவ்வாறு மண்வளமிழந்த காரணத்தால் பி.ட்டி பருத்தியின் தலா ஹெக்டேர் விளைச்சல் குறைவதும் நிரூபணம் ஆகிவிட்டது. இதற்குச் சரியான மாற்றுவழி பருத்தியைக் கலப்புப் பயிர் சாகுபடியாக மாற்றுவதுதான்.

பாரம்பரியமாகப் பருத்தி இந்தியாவில் மண்வளம் இழக்காமல் சாகுபடி செய்யும் உத்திகளில் பருத்தியுடன் துவரை, சோளம், உளுந்து போன்ற லெகுமினஸ் – மண்ணில் நைட்ரஜன் சத்தை இழுக்கும் தன்மையுள்ள பயிர்களையும் சாகுபடி செய்துவந்த முறை அழிந்து விட்டதும் ஒருகாரணம்.

மண்ணில் கரிமச்சத்தை இயற்கை வழியில் உருவாக்கும்போது எந்த நோயும் தாக்காமல் விளைந்தது அந்தக்காலமாகிவிட்டது. அப்போது எகிப்திய நீண்ட இழைப்பருத்தி, கம்போடியா ரகம், கதராடைக்குரிய கருங்கண்ணி போன்ற பாரம்பரியப் பருத்தி ரகங்களை மீட்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் மாநில அரசுகளின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும்.

பி.ட்டி பருத்தி சாகுபடியைத் தமிழ்நாட்டில் புகுத்த வேண்டாம். இங்குதான் சிறிது பாரம்பரியம் எஞ்சியுள்ளது.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *