மரவள்ளிக் கிழங்கு சாகுபடி

குறைந்த தண்ணீர் தேவையைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. மற்றொருபுறம் மரவள்ளிக் கிழங்கு மாவில் கலப்படத்தைத் தவிர்ப்பதும் அவசியமாகிறது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ. நல்லசாமி இது தொடர்பாகக் கூறியதாவது:

தமிழ்நாடு மழை மறைவு மாநிலம். சராசரியாக 920 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையே கிடைக்கிறது. நீர்வளத்துக்கு அண்டை மாநில ஆறுகளையே பெரிதும் நம்பியிருக்கிறோம். நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் பயிர் முறையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நல்லதொரு வாய்ப்பு. ஒரு ஏக்கர் கரும்புப் பயிருக்குத் தேவையான நீரைக்கொண்டு நான்கு ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய முடியும். மேலும், இது சொட்டு நீருக்கு உகந்த பயிர்.

16-வது நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியர்களால் மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஓராண்டுப் பயிர். தமிழகத்திலும் கேரளத்திலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொழிற்சாலை மூலப்பொருளாகவும் உணவாகவும் மரவள்ளி பயன்படுகிறது. வறட்சியைத் தாங்கி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவைத் தரும் பயிராக உள்ளது. அதனால், மரவள்ளிக் கிழங்கை மண்ணுக்குள் இருக்கும் வைரம் என்கிறார்கள்.

மானாவாரி சாகுபடி

மரவள்ளிக் கிழங்கை மூலப்பொருளாகக்கொண்டு இயங்கும் ஜவ்வரிசி ஆலைகளும் ஸ்டார்ச் தொழிற்சாலைகளும் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ளன. கடந்த காலங்களில் 400 ஆலைகள் இயங்கிய நிலையில், தற்போது 200 மட்டுமே இயங்கி வருகின்றன. வாகன எரிபொருளான எத்தனால் தயாரிப்பதற்கு இது ஏற்றது. இந்தோனேசியா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக்குடன் மரவள்ளி ஸ்டார்ச்சை கலந்து எளிதில் மட்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை (Bio Degredible Plastic) தயாரிப்பது நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில், கொல்லிமலை, கல்வராயன் மலை, தாளவாடி போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மலைவாழ் மக்கள் இதை மானாவாரியில் சாகுபடி செய்கின்றனர். மரவள்ளிக் கிழங்கின் விலை சீராக இருப்பதில்லை. ஒரு டன் கிழங்கு விலை ரூ.3000 முதல் சில நேரம் ரூ. 10,000 வரை விற்கும். இதில் ஆதாயம் பெறுவோர் பெரும்பாலும் இடைத்தரகர்களே. மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 32 சதவீதம்வரை ஸ்டார்ச் இருக்கும். இன்று பாயின்ட் ஒன்றுக்கு ரூ. 300 முதல் ரூ. 350 வரை விலை கிடைக்கிறது. அதாவது டன் ஒன்று ரூ. 10,000 வரை விற்கப்படுகிறது.

தேவையற்ற கலப்படம்

மரவள்ளிக் கிழங்குக்கு நல்ல விலை கிடைக்காமல் இருப்பதற்கான முதன்மைக் காரணம் கலப்படம். கண்ணைப் பறிக்கும் விதத்தில் ஜவ்வரிசியும் ஸ்டார்ச்சும் இருந்தால் மட்டுமே நல்ல விலைக்குப் போகும். பழுப்பு நிறத்தில் இருந்தால் குறைந்த விலையே கிடைக்கும். வெள்ளை நிறம் வரவேண்டும் என்பதற்காகச் சலவை ஆலைகளில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைபோ குளோரைடு, கால்சியம் ஹைபோ குளோரைடு போன்ற ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போகக் கந்தக அமிலமும் சேர்க்கப்படுகிறது. கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறம் கிடைக்கும் என்பதற்காக ஈவு இரக்கமில்லாமல் கலப்படம் செய்யப்படுகிறது.

மரவள்ளி மாவுக்குக் கூடுதலான விலை கிடைக்கும் என்பதால் அதனுடன் மக்காச்சோள மாவையும் சேர்த்துக் கலப்படம் செய்வதும் உண்டு. மக்காச்சோள மாவில் இருக்கும் மஞ்சள் நிறத்தை நீக்கவும், மேலே கூறப்பட்ட ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். இயற்கையாகத் தயாரிப்பவர்களும் நிலைப்புத்தன்மை காரணமாக, காலப்போக்கில் கலப்படம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தேவை மரவள்ளிக்கு ஊக்கம்

மரவள்ளிக்கிழங்கின் பட்டையில் ஹைட்ரோ சைனிக் அமிலம் Hydrocyanic Acid இயற்கையாகவே உள்ளது. இது சற்று விஷத்தன்மை கொண்டது. மற்றச் சையனைடுகளை போலக் கொடிய விஷம் அல்ல. அந்தக் காலத்தில் இந்த மேல் பட்டையைச் சீவி எடுத்துவிட்டுக் கிழங்கை அரைத்துவந்தார்கள். ஆள் பற்றாக்குறையின் காரணமாகக் கிழங்கை அப்படியே அரைத்து, பழுப்பு நிறத்தைப் போக்குவதற்காகப் பல்வேறு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது தற்போது நடைமுறையில் உள்ளது. இன்று பெரும்பாலான ஜவ்வரிசி ஆலைகளில் ரசாயனம் பயன்படுத்தப்படுவதால் அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள், சுற்றுப்புற மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

இந்தக் கலப்படம் அதிகமானதன் காரணமாகத் தேசிய அளவில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் நுகர்வு வெகுவாகக் குறைந்து போனது. காகிதத் தொழிற்சாலைகளும் ஜவுளி ஆலைகளும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தரமான ஸ்டார்ச்சை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இறக்குமதியாகும் ஸ்டார்ச்சுக்கு குறைந்த அளவிலான இறக்குமதித் தீர்வையே விதிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கலப்படத்தைப் பற்றி அரசினுடைய பார்வைக்குப் பலமுறை விவசாயச் சங்கங்கள் கொண்டு போயுள்ளன. ஆனால், கலப்படம் தடுத்து நிறுத்தப்படவில்லை. பொதுவாக ஜவ்வரிசி, ஸ்டார்ச்சினுடைய இயற்கையான நிறம் வெளிர் மஞ்சள். தரத்தை நிர்ணயம் செய்வது ஒளிரும் வெண்மையல்ல என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பயிற்றுவிக்கும் கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு. கலப்படம் செய்யாமல் தரமான ஜவ்வரிசியையும் மாவையும் தயாரிப்போர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர். பலரால் இந்தத் தொழிலில் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.

எனவே, தென்னை வளர்ச்சி வாரியம், கயிறு வாரியம், காபி வாரியத்தைப்போல மரவள்ளிக் கிழங்குக்கும் தனியான வாரியம் அமைத்து மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

– செ. நல்லசாமி தொடர்புக்கு 09894099955

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *