மரவள்ளியில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி

ராசிபுரம் பகுதியில் மரவள்ளியைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சியை ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்தலாம் என ராசிபுரம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வி.மோகன் விஜயகுமார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 • நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி பயிர் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. ராசிபுரம் வட்டாரத்தில் சுமார் 750 ஏக்கர் பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மரவள்ளியில் பப்பாளி மாவுப் பூச்சிகள் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது.
 • இந்தப் பூச்சிகள் தாக்குதலுக்குள்ளான இலைகள் உருமாறி சிறுத்துக் காணப்படும்.
 • இந்தப் பூச்சிகள் பயிரின் தண்டு, இலைகளின் அடிப்பாகம், இலைக் காம்பின் இடுக்குகளில் வெள்ளை நிற உறையால் சூழ்ந்து காணப்படும்.
 • இந்தப் பூச்சிகள் வெளியேற்றும் தேனை அருந்த எறும்புகள் ஊர்ந்து செல்வதைக் காணமுடியும்.
 • இலையின் மேல்பரப்பில் கரும்பூஞ்சாணம் படர்ந்து காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

 • மாவுப் பூச்சிகள் களைச் செடிகளில் அடைக்கலமாவதால் வயல்களைக் களையின்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
 • பாதிப்பு மிகக் குறைவாக இருந்தால் பாதிக்கப்பட்ட இலை, தண்டுகளைப் பாலித்தீன் பைகளில் சேகரித்து எரிக்க வேண்டும்.
 • அடிவெட்டு செய்தவுடன் 0.2 சதம் புரடோமோனாபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் மருந்து கரைசல் தயார் செய்து செடியின் அடித் தண்டு, செடியைச் சுற்றி மண் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
 • மருந்துடன் ஒட்டும் திரவத்தைக் கலக்க வேண்டும். முதல் தெளிப்பிலிருந்து பத்து நாள் கழித்து ரோகர் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மி.லி. என்ற விகிதத்தில் வேப்பெண்ணையுடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
 • விவசாயிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பப்பாளி மாவுப்பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.
 • மாவுப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, ஏத்தாப்பூர் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகிய ஆராய்ச்சி நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் பதிவு செய்து ஒட்டுண்ணிகளைப் பெற்று வயலில் விடலாம்.
 • ஒட்டுண்ணிகளை விட்ட பிறகு ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *