தென்மாவட்டங்களில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் சூசையப்பர்பட்டினம் விவசாயி எஸ்.ஜோசப் ஆரோக்கியசாமி கவனம் செலுத்தி வருகிறார்.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் குறித்து ஜோசப் ஆரோக்கியசாமி கூறியதாவது:
- வறட்சியான மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்று. ஏற்கனவே குடிநீர் கூட கிடைக்காமல் பஞ்சம் நிலவுகிறது. சொட்டு நீர் பாசன முறையில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்கிறேன்.
- நல்ல லாபம் கிடைப்பதால் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மரவள்ளிக் கிழங்கையே பயிரிட்டு வருகிறேன். இந்த ஆண்டு 60 சென்டில் பயிரிட்டுள்ளேன்.
- நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறைவான பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் வறட்சி நிலவுவதால் கிணறுகள் வறண்டு வருகின்றன. அதிக நீர் தேவையுள்ள நெல், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய முடியவில்லை.
- இதனால் வறட்சியை தாங்கி வளரும் மரவள்ளிக் கிழங்கை சாகுபடி செய்கிறோம். குங்குமரோஸ், முள்ளிவாடி, வெள்ளைக்கிழங்கு போன்ற ரகங்கள் உள்ளன. இந்த கிழங்கு மூலம் ஜவ்வரிசி, பசை, சிப்ஸ், ஸ்டார்ச் போன்ற பல வகையான பொருட்கள் தயாரிக்கின்றனர்.
- தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அரை அடி நீளமுள்ள மரவள்ளி குச்சியை ஒரு இஞ்ச் ஆழத்தில் நட வேண்டும். ஏக்கருக்கு 5 ஆயிரம் குச்சிகள் நடலாம். மாதத்திற்கு இரண்டு முறை நீர் பாய்ச்சினால் போதும். பராமரிப்பு செலவும் குறைவு. கடலை, வெங்காயம், உளுந்து போன்றவற்றை ஊடு பயிராகவும் பயிரிடலாம்.
- எட்டு முதல் பத்து மாதங்களில் மரவள்ளிகிழங்கை பறிக்கலாம். ஒரு செடியை பறித்தால் 4 முதல் 7 கிலோ வரை கிழங்கு கிடைக்கும். பறித்த குச்சியை மீண்டும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.
- ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை கிடைக்கும். தற்போது வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
- நாங்கள் ஈரோடு தொழிற்சாலைக்கு அனுப்புகிறோம். கிலோ 8 முதல் 10 ரூபாய்க்கு எடுத்து கொள்கின்றனர்.
- ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும், என்றார்.
தொடர்புக்கு, 8489785434 .
– இ.ஜெகநாதன்
சிவகங்கை.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்