தேக்கு மரம் வளர்ப்பு மூலம் 20 ஆண்டுகளில் அதிக லாபம் பெறலாம் என தோட்டக்கலை துறை வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன் கூறியது:
தச்சர்களுக்கு உகந்த இந்த மரம் ஓங்கி வளருவதுடன் மிகவும் உறுதியானதாகும்.சாதாரண நிலையில் மலைப்பகுதிகளில் 25 மீட்டர் உயரமும், சமவெளிப் பகுதியில் 15 மீட்டர் உயரமும் வளரக் கூடியது.
தேக்கு பயிரிட ஏற்ற நிலம்: பல சூழ்நிலைகளிலும் தேக்கு வளருகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 750 மி.மீ அளவுக்கு குறைவாக மழை பெய்யும் பகுதிகளிலும், தொடர்ந்து மழையில்லாத மானாவாரி பகுதிகளிலும் நன்றாக வளருவதில்லை.
இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல் மற்றும் மணல் கலந்த நிலங்கள் மணல் கலந்த களி நிலங்களில் நன்கு வளரும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால்தான் நல்ல முறையில் வளரும்.
பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம்:
தேக்கு நட்ட 6 ஆண்டுகளில் பூக்கத் தொடங்கினாலும், நன்கு பூக்க 15 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஜுன்- செப்டம்பர் மாதங்களில் பூத்து, நவம்பர்- ஜனவரி மாதங்களில் காய்ப்பு முடிவுறும். தேக்கில் காய் பிடிப்பு மிகவும் குறைவு.
சராசரியாக 40 வயதுடைய மரத்திலிருந்து சுமார் 3 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு 1,150- 2,800 காய்கள் இருக்கும். பறித்த காய்களை தூய்மைப்படுத்தி 2- 3 நால்கள் வெயிலில் காயவைத்து பைகளில் சேகரித்து வைக்கலாம். காற்றுப்புகாத கொள்கலன்களில் 12 சதவீத ஈரப்பதம் இருக்கும்படி சுமார் 2 அல்லது 3 ஆண்டுகள் சேமித்து வைக்கலாம்.
விதைநேர்த்தி:
தேக்குமர விதைகளை விதைநேர்த்தி செய்வது முக்கியமானதாகும். குறிப்பாக தேக்கு விதைகளை கோணி சாக்கு பையில் வைத்து கட்டி 12 மணி நேரம் சாணிப்பாலில் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் 12 மணி நேரம் வெளியில் உலர வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்வதன் மூலம் விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.
நாற்றங்கால்:
தேக்கு தோட்டம் அமைக்க தேக்கு நாற்றுக் குச்சிகள் தயாரிக்க வேண்டும். தயாரிக்க தேவையான நாற்றங்கால் 10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 அடி உயரம் அளவுள்ள மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும்.
இதற்கு 50 சதவீதம் மணலும், 50 சதவீதம் வண்டல் மண்ணும் நன்றாக கலந்து அமைக்க வேண்டும். இந்த மண்ணில் தொழு எருவோ, சாணமோ கலக்கக் கூடாது. அவ்வாறு கலந்தால், வேர்ப்புழுக்கள் தோன்றி நாற்றுகள் சேதமாகும்.
பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி பாத்திகளில் பூச்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
10 மீட்டர் நீளம், 1மீட்டர் அகலமுள்ள பாத்திக்கு 6 கிலோ என்ற அளவில் தேக்கு விதை விதைக்க வேண்டும்.
விதைத்த பின் சிறிது மணலை மேலாக பரப்பி அதன் மேல் வைக்கோலை பரப்பி மூடிவிட வேண்டும். தினமும் இருமுறை நீர் தெளிக்க வேண்டும். தேக்கு நாற்றுகள் முளைத்து வரும்போது வைக்கோலை எடுத்துவிட வேண்டும்.
நாற்றாங்காலில் உள்ள நாற்றுகள் 10 மாதம் முதல் ஒரு வருடம் வளர்ந்த நிலையில் தண்டின் வளர்ச்சி சுமார் பென்சில் பருமன் அல்லது பெருவிரல் கனத்திற்கு இருக்கும்.
மேற்படி பென்சில் பருமனுள்ள நாற்றுக் குச்சிகளை 16 – 30 செ.மீ அளவுள்ள பாலீதீன் பைகளில் வளர்த்து நடவு செய்யும்முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
இதுமட்டுமல்லாமல் கட்டை விரல் கனத்திற்கு தண்டு வளர்ந்தும் நாற்றுகளை எடுத்து வேர்ப்பகுதியில் உள்ள சிறு வேர்களை எல்லாம் அகற்றிவிட வேண்டும்.
கழுத்து பகுதிக்கு மேல் 2 செ.மீ அளவிற்கும் வேர்ப்பகுதி சுமார் அரை அடி உடைய நாற்றுக் குச்சிகளாக வெட்டித் தயாரிக்க வேண்டும். வளர்ச்சியடையாத நாற்றுகளை நாற்றங்காலிலேயே விட்டு வைத்து பின்னர் நன்கு வளர்ச்சியடைந்த பின் நாற்றுக்குச்சி தயாரிக்கலாம். நாற்றுக்குச்சிகளை அப்படியே தோட்டங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டிய இடத்தில் நடவு செய்யலாம்.
நடவு செய்யும் முறை:
மழைக் காலத்திற்கு முன் வரிசைக்கு வரிசை 2 மீட்டர் மற்றும் செடிக்கு செடி 2 மீட்டர் இடைவெளியில் 45 கன செ.மீ அளவுள்ள குழி எடுத்து நன்கு காய்ந்த பின் மட்கிய தொழு எருவுடன் வண்டல் மண் கலந்து, குழியை முக்கால் பாகம் நிரப்ப வேண்டும்.
மழைக்காலம் ஆரம்பித்ததும் குழிகள் நன்கு ஈரமானதும், குழிகளில் கடப்பாறையால் துவாரம் அமைத்து அவைகளில் தேக்கு நாற்றுக் குச்சிகளை நட்டு குச்சி சேதமடையாமல் மண் அணைத்து, துவாரத்தில் காற்றுபோகாமல் இறுக்கமாக கெட்டிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நடப்பட்ட நாற்றுக் குச்சிகள் ஒருவாரம் முதல் 15 நாள்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும். இந்த செடிகளில் அதிக துளிர்கள் வந்தால் நல்ல வளர்ச்சியடைந்த ஒரு துளிரை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை அகற்றிவிட வேண்டும்.
16 க்கு 30 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் வளர்த்த தேக்கு நாற்றுகளை 60 செ.மீ கன அளவுள்ள குழிகளில் நட்டு இம்மரத்தை வளர்க்கலாம்.
செடிகளைச் சுற்றி களையெடுப்பதும், மண் கொத்தி கொடுப்பதும் ஒரு மாதத்திற்கு பிறகு செய்யவேண்டும். இந்த செடிகள் நன்கு வளர குறைந்தது மாதம் இருமுறை நீர் விடுவது அவசியம். இவ்வாறு 5 ஆண்டு வரை செய்து வந்தால் தேக்கு நன்றாக வளரும்.
தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும், பக்க கிளைகள் இல்லாததாகவும் வளர்த்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே பக்க கிளைகளை தரை மட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும்.
மேலும், மரங்கள் அடர்ந்து வரும் நிலையில் 5 ஆம் ஆண்டில் இடை வரிசைகளை நீக்கி மரம் நல்ல பருமன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
அதாவது, முதல் 5-வது ஆண்டில் கலைத்தல் செய்யும்போது மூலைவிட்ட வரிசையில் ஒருவரிசை விட்டு நடுவரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். உதாரணமாக 2- 2 மீட்டர் இடைவெளியில் நட்டால் ஏக்கருக்கு 1,000 மரங்கள் இருக்கும். இதில், 500 மரங்களை வெட்டி எடுக்கவேண்டும். அப்பொழுது மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவு மரங்களுக்கிடையே இடைவெளி இருக்கவேண்டும்.
அடுத்து 10-வது ஆண்டில் நடவு வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். இப்பொழுது ஏக்கருக்கு 250 மரங்கள் இருக்கும். மேற்படி மரங்களை நன்கு பராமரித்து வளர்த்தால் சுமார் 20 முதல் 25 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்கும்.
வேளாண் காடு வளர்ப்பு:
தேக்கை வேளாண் பயிர்களான சோளம், பருத்தி, மஞ்சள், தக்காளி, மிளகாய் போன்றவற்றுடன் சேர்த்து சாகுபடி செய்யலாம். மேலும், தேக்குடன் தென்னை, வாழை, மஞ்சள், சோளம், பருத்தி மற்றும் காய்கறிகள் போன்றவற்றை இணைத்தும் பயிரிடலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்