சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பனை மரங்கள் கருகி அழிந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக மழை இன்றி வறட்சியாலும், கடும் வெப்பத்தினாலும் கற்பகவிருட்சமான பனை மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.
கற்பக விருட்சம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பதநீர், கருப்பட்டி தான்.
கற்பக விருட்சமான பனை மரம் மூலம் நமக்கு கருப்பட்டி, பதநீர், நுங்கு, பனங்கற்கண்டு, கிழங்கு ஆகிய உணவு பொருள்களும் விசிறி, ஓலை, பாய், ஓலைப்பெட்டி, நார்பெட்டி, கருக்கு, கட்டில், உத்திரம், கட்டை முதலான பொருள்களும் கிடைக்கிறது.
கடந்த காலங்களில் பனை ஓலையால் வேய்ந்த வீட்டில் சுகாதாரத்துடன், குளிர்ச்சியான அமைப்புடன் வாழ்ந்து வந்தனர். சாத்தான்குளம்,பேய்க்குளம், உடன்குடி பகுதிகளில் கடந்த 3ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பனைத் தொழில் வேகமாக நலிவடைந்து வருகிறது.
கடும் வெப்பத்தால் பனை மரங்கள் கருகி அழிந்து வருகின்றன.
பனைத்தொழிலில் முன்னேற்றம் இல்லாததால் இப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களை நோக்கி மாற்றுத் தொழில் செய்ய சென்றுவிட்டனர்.
இனிவரும் காலங்களில் பனைத்தொழில் நசிவடைந்து பதநீர், கருப்பட்டி எல்லாம் கண்காட்சிப் பொருளாகும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஒரு பனை மரத்தின் மூலம் ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர், 25 கிலோ கருப்பட்டி, 16 கிலோ பனங்கற்கண்டு, 12 கிலோ தும்பு, 2 கிலோ கருக்கு, 10 கிலோ விறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் போன்ற பொருள்கள் கிடைப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
ஆனால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 9 கோடி பனைமரங்கள் இருந்துள்ளது.
இதில் 5 கோடி தமிழகத்தில் இருந்துள்ளது. ஆனால் தற்போது கடந்த 2 ஆண்டுகளில் பனை மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.
கடும் வறட்சியாலும், பனைத்தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதாலும் கருகி வரும் பனை மரங்கள் செங்கல் சூளை விறகுக்கும் வெட்டப்படுகிறது.
தற்போது பனை சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையாததாலும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கை குறைவதாலும் பனைத் தொழிலும் மிகவும் நலிவடைந்து வருகிறது.
இனிவரும் காலங்களிலாவது வருண பகவானின் கருணையும், தமிழக அரசின் கருணையும் கிடைத்தால் மட்டுமே கற்பக விருட்சமான பனை மரங்களும், பனைத் தொழிலாளர்களும் வளர்ச்சியடைவார்கள்.
மேலும் நஷ்டமடைந்து வரும் பனைத் தொழிலாளர்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்