பெத்த பிள்ளை கைவிட்டாலும், வைச்ச பிள்ளை கைவிடாது, ‘’ என வழக்குச் சொல்லாக சொல்வார்கள் நம் முன்னோர்கள். ஒருவர் மரம் வளர்த்தால், அந்த மரம் அவரது வாழ்வின் இறுதிக் காலம் வரை உயிர் மூச்சாக, வாழ்வதாரமாக இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் திண்டுக்கல் விவசாயி இரண்டலப்பாறை ஏ.அமலதாஸ் வளர்க்கும் மரங்கள்தான்.
அமலதாஸுக்குச் சொந்தமான 6½ ஏக்கர் விவசாயத் தோட்டம், இரண்டலப்பாறையில் உள்ளது. இவரது தோட்டத்தில் மற்ற விவசாயிகளைப் போல் காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட குறுகியகால பயிர்களைப் பயிரிடவில்லை. தோட்டம் முழுவதும் வெறும் தென்னை, கொய்யா, தேக்கு, சப்போட்டா, பலா, மா, எலுமிச்சை மரங்களை நட்டு வைத்துள்ளார். காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட மற்ற விவசாயப் பயிர்களுக்கு நீர்ப் பாசனம் அதிகம் தேவை. இந்த பயிர்களிடையே ஊடு பயிராக எதை நட்டாலும் பிரதான பயிருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இவர் தன்னுடைய தோட்டத்தில் அனைத்து மரங்களையுமே ஊடு பயிராக நட்டுள்ளார்.
அதனால், ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு சீசனில் இவர் லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார். இதற்காக இவர் பராமரிப்பு செலவு பெரிதாக எதுவும் செய்யவில்லை. தண்ணீரை மட்டும் பாய்ச்சுகிறார். அவ்வப்போது செடி, கொடிகளை கூலியாட்களை வைத்து வெட்டி அப்புறப்படுத்துகிறார். தனக்கு கிடைத்த இந்த மரத் தோட்ட விவசாய அனுபவங்களை மற்ற விவசாயிகளிடம் கூறி மரங்களை நடுமாறு விழிப்புணர்வு செய்து வருகிறார்.
இது குறித்து அமலதாஸ் “இந்து’விடம் கூறுகையில், “ஆரம்பத்தில் மற்ற விவசாயிகளைப் போல் நானும் காய்கறிகள் சாகுபடி செய்தேன். தண்ணீர் பிரச்சினை, கூலியாட்கள் சம்பளம், பராமரிப்புச்செலவு என பல பிரச்சினைகளால் லாபம் என எதுவும் கையில் மிஞ்சவில்லை. வெறுத்துபோய், கொய்யா சாகுபடி செய்தேன். தண்ணீர் குறைவாக தேவைப்படும் `லக்னோ 47′ ரக கொய்யா செடிகளை குடிமியான்மலையில் வாங்கி வந்து நட்டேன். ஒரு ஏக்கருக்கு 60 மரங்கள் மட்டுமே நட்டேன். இந்த 60 மரங்களுக்கு இடையே ஊடு மரமாக எலுமிச்சை, மா, தென்னை, சப்போட்டா, பலா ஆகிய மரங்களை நட்டேன்.
ஒரு ஏக்கரில் 60 கொய்யா, 20 தென்னை, 60 எலுமிச்சை மற்றும் தேக்கு, பலா, வேம்பு, சப்போட்டா என மரங்கள் உள்ளன. கொய்யா ஆண்டுக்கு இரண்டு சீசன் என்பதால் 9 மாதங்கள் பழம் பறிக்கலாம். ஒரு கிலோ கொய்யாவுக்கு 25 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கிறது. ஒரு மரத்தில் சாதாரணமாக 300 கிலோ கொய்யா கிடைக்கிறது.
தென்னையில் 40 நாட்களுக்கு ஒரு முறை காய் வெட்டலாம். பலாமரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பாலாப்பழம் கிடைக்கும். எலுமிச்சையில் ஆண்டு முழுவதும் எலுமிச்சை பழங்களைப் பறிக்கலாம். சந்தையில் எலுமிச்சைக்கு எப்போதுமே மவுசுதான்.
எங்களுடைய நத்தம் “மா’வுக்கு சொல்லவே வேண்டாம். சந்தையில் கிராக்கிதான். சப்டோட்டா, ஆண்டுக்கு ஒரு சீசனிலும், மா மரத்தில் ஆண்டுக்கு இரண்டு சீசனிலும் மகசூல் கிடைக்கிறது.
இவை தவிர, இந்த மரங்களைச் சுற்றி வடக்கு தெற்காக இந்த மரங்களைப் பாதுகாக்கும் வகையில் வேலி மரமாக ஒரு ஏக்கருக்கு 20 மரம் வீதம் 400 தேக்கு மரங்களை நட்டேன். இதனால், தோட்டத்துக்கு சூரிய வெளிச்சம் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. தேக்கு மரத்தை தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.
தோட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த மரங்களுக்கும் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். மாதந்தோறும் கைநிறைய வருமானம் கிடைக்கிறது.
இதற்காக தினசரி காலை ஒரு மணி நேரம்தான் செலவிடுகிறேன். மற்ற நேரங்களில் கடை வியாபாரத்தைப் பார்க்கிறேன். எனக்கு நேரமும் அதிகம் கிடைக்கிறது, இரட்டை வருமானமும் கிடைக்கிறது ” என்றார்.
மேலும் விபரங்களுக்கு 09894241621
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
This life is very lucky for you
Super good job