உரம், விதை விதைக்கும் கருவி

தமிழகத்தில் உள்ள சாகுபடி நிலப் பரப்பில் 70 சதவீதம் மானாவாரி நிலப் பரப்பாகும். இதில் 25 சதவீதம் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு மானாவாரியில் பயிரிடப்படும் நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம் மற்றும் பிற பயறு வகைககளைக் குறித்த காலத்திற்குள், அதாவது மண்ணில் ஈரப்பதம் குறைவதற்கு முன்பாகவே விதைக்க வேண்டும்.

குறிப்பாக நிலக்கடலையைப் பொருத்த வரையில் மண்ணில் ஈரப்பதம் குறைவதற்குள் கலப்பையின் பின்னால் சால்விட்டு விதைக்கப்படுகிறது. தற்சமயம் விதை விதைக்கும் பட்டத்தில் போதிய ஏர், ஆள்கள் பற்றாக்குறை காரணமாக மண் ஈரம் இருக்கும் போதே விதைக்க முடிவதில்லை.

இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், நிலத்தை உழும்போது விதை விதைப்பதற்கு ஏற்றவாறு டிராக்டரால் இழுக்கப்படும் உரம், விதை விதைக்கும் கருவி பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கருவியின் சிறம்பம்சம், இயல்புகள் குறித்து கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் மையம் கூறியது:

இந்தக் கருவி விதைப் பெட்டி, விதைகளைத் தள்ளி விடுவதற்கு பல் சக்கரம் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.

மேலும், உரப் பெட்டி, விதையும், உரமும் தேவையான அளவில் விதைப்பதற்கு உண்டான மீட்டரிங் உபகரணங்கள், மண்ணில் தேவையான ஆழத்தில் விதைப்பதற்கு 11 வரிசை கொத்துக் கலப்பைகள், மேலும் சால்களில் வேண்டிய ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண்ணால் மூடுவதற்கு ஏற்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.

வரிசைகளின் இடைவெளியையும், விதைக்கு-விதை உள்ள இடைவெளியையும் வேண்டியவாறு மாற்றிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் சுமார் 1 முதல் 1.25 ஏக்கர் வரை விதைகளை விதைக்கலாம்.

ஒரு ஹெக்டர் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு ரூ.1,000 செலவாகும்.

இதனால், நிலத்தின் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. தற்போதுள்ள முறைகளின்படி, கலப்பைக்குப் பின் சால்விட்டு விதைப்பதற்கு மட்டுமே ஒரு ஹெக்டேருக்கு சுமார் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது.

இந்தக் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 80 முதல் 90 சதவீத மனித நேரம் மீதமாகிறது.

ஒரே சீரான ஆழத்தில் விதைப்பதால் பறவைகள், எறும்புகள் மற்றும் காய்ந்து போதல் போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்பு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வரிசைக்கு வரிசை ஒரே மாதிரியான இடைவெளி பராமரிக்கப்படுவதால் களை எடுத்தல்,உரமிடுதல் ஆகியவை எளிதாகின்றன.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *