ஊசி போட்டு பயிர் வளர்க்கலாம்!

நோய் பாதித்தவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாய் வழியாகக் கொடுப்பதற்கும், ஊசி வழியாக அளிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.ஊசி வழியாக மருந்து கொடுத்தால் விரைவாக நரம்பு மண்டலத்தை அடைந்து நிவாரணம் உடனடியாகக் கிடைக்கும்.

இப்படி உரத்தைத் தாவரங்களுக்கு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான கருவியை உருவாக்கியுள்ளார் புதுச்சேரி செல்லஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி ஆர்.வெங்கடகிருஷ்ணன் (49).

  • டிஏபி உள்ளிட்ட உரங்களை மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு ஸ்பிரே செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் அப்படி செய்யாமல் அந்த உரங்களைக் கையால் தூவுகின்றனர்.இதனால் அதிகமாக உரம் செலவாகிறது.
  • இதைத் தவிர பயிர்களுடன் புல், பூண்டு உள்ளிட்ட களைகளும் செழித்து வளருகின்றன.
  • இது போன்ற உரங்கள் நேரடியாக தாவரங்களுக்குக் கிடைக்கும் வகையில் செய்தால் என்ன என்ற உந்துதல் காரணமாக புதிய கருவியை வடிவமைத்துள்ளார் இந்த விவசாயி.

கருவியின் வடிவமைப்பும் செயல்பாடும்

  • இந்தக் கருவியில் ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள ஸ்பிரேயரில் உள்ள டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த டேங்கில் நீரில் கரையும் உரம் வடிகட்டி ஊற்றப்படுகிறது.
  • அந்த டேங்கில் இருந்து உரம் வெளியேற சிறிய டியூப் இருக்கிறது.இந்த டேங்கில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
  • சிறிய டியூப் மற்றும் பேட்டரியில் இருந்து ஆன், ஆப் சுவிட்சுக்கான வயர் இரண்டும் சேர்ந்து சிறிய அளவிலான பைப்பில் உள்புறமாக இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்த பைப் முனையில் கூர்மையான ஊசி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஊசியின் இரண்டு பக்கங்களில் சிறிய துளை இருக்கிறது.
  • இந்தச் சிறிய பைப்பை பிடித்துக் கொள்ள சைக்கிளில் பயன்படுத்தப்படும் ஹேண்டல்பார் போன்ற பொருள் இருக்கிறது.
  • உரத்தை கரைத்து காபி வடிகட்டுவது போன்று வடிகட்டி டேங்கில் ஊற்றியப் பிறகு தோளில் மாட்டிக் கொண்டு தேவையான இடங்களில் ஊசி போன்ற வடிவத்தை தாவரத்துக்கு அருகில் வேர் மண்டலம் இருக்கும் பகுதியில் அழுத்தி ஆன் செய்யும் சுவிட்டை அழுத்தினால் சிறிய பைப் வழியாக ஊசி முனையில் திரவ வடிவில் உரம் வந்து மண்ணில் பீச்சி அடிக்கிறது.
  • இது போன்று உரத்தை திரவ வடிவில் வேர் மண்டலத்துக்கு நேரடியாகப் பாய்ச்சுவதால் தாவரத்தின் வளர்ச்சி விரைவாக இருக்கும்.

தோட்டக்கலை பயிர்களுக்கும், தோப்புப் பயிர்களுக்கும் இது உகந்த கருவி என்கிறார் புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியல் நிபுணர் விஜயகுமார்.மேலும் புல், பூண்டு உள்ளிட்ட களைகளுக்கு உரம் சென்று சேராமல் அதைக் குறைக்க முடியும் என்றும் அவர் சொல்கிறார்.

இந்த நிலையத்தின் வாழையியல் நிபுணர் நரசிம்மன் கூறுகையில், “இந்தக் கருவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மேலும் பயிர் மேலாண்மைக்கு உகந்தது. தாவரத்தின் வேர் பகுதியில் உரம் செல்வதால் விரைவான வளர்ச்சி இருக்கும் ” என்கிறார்.

“”என்னுடைய வயலில் 12 ஏக்கரில் சவுக்குப் பயிரிட்டுள்ளேன். இந்தக் கருவியை உருவாக்கியப் பிறகு சவுக்குப் பயிருக்கு நீர் உரமாக பாய்ச்சினேன். அதன் விளைவு 6 நாளில் நல்ல மாற்றத்தை சவுக்குப் பயிரில் காண முடிந்தது. இது போன்று என்னுடைய உறவினர் ஒருவரின் வாழை பயிருக்கும் இந்தக் கருவியைப் பயன்படுத்தி நீர் உரம் பாய்ச்சினேன். அந்த வாழை பயிரும் நன்றாக செழிப்பாக இருக்கிறது” என்கிறார் இந்தக் கருவியை வடிவமைத்துள்ள விவசாயி.

நன்மைகள்

  • பயிர்களுக்குக் கையால் உரத்தைத் தூவும்போது ஓர் ஏக்கருக்கு 90 கிலோ உரம் தேவைப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி உரம் நீரில் கலந்து பாய்ச்சும்போது 3-ல் ஒரு பங்கு உரம் இருந்தால் போதும்.
  • மேலும் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் களை கொத்தவும் தேவையில்லை.
  • இந்தக் கருவியைப் பயன்படுத்தி உரம் பாய்ச்சும்போதும் குறிப்பிட்ட வயல் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கருவில் உள்ள ஊசி போன்ற பாகம் மண்ணில் எளிதில் இறங்கும் என்கிறார் இந்தக் கருவியை வடிவமைத்துள்ள வெங்கடகிருஷ்ணன்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *