இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். பயிரைத் தாக்கும் எதிரிகளில் நுட்பமான அறிவும், தந்திரமும் கொண்டது எலி.
இவை வயல்கள், வீடுகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 140 முதல் 180 லட்சம் எலிகள் உள்ளன. ஒரு மனிதனுக்குத் தேவையான ஒரு நாள் உணவு தானியத்தை மூன்று ஜோடி எலிகள் ஒரு நாளில் தின்று அழிக்கும் திறனுடையவை.
வயல் எலிகள் ஒவ்வொன்றும் தங்கள் வளைகளில் உள்ள உணவு அறைகளில் 3 முதல் 5 கிலோ நெல்மணிகள், ஒரு கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை சேமித்து வைப்பது கண்டறியப்பட்டுள்ளது. எலிகளால் நேரடியாகத் தின்னப்படும் தானிய அளவைவிட 10 மடங்கு அளவுள்ள உணவுப் பொருட்கள் அவற்றின் கழிவுகளால் உண்பதற்குத் தகுதியற்ற முறையில் சேதப்படுத்தப்படுகிறது.
ஒரு ஜோடி எலிகள் ஆண்டுக்கு 2 முதல் 5 தடவையாக ஒவ்வொரு முறையும் 6 – 8 குட்டிகள் ஈனுகின்றன. பிறந்த 45 நாளில் இவையும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இவற்றின் சராசரி வயது 2 ஆண்டுகள். இதனால் ஒரு ஜோடி எலிகள் ஒரே ஆண்டில் 500 எலிகளாக பெருகுகின்றன. குறுவை, சம்பா, தாளடி அறுவடை காலங்களில் உணவு எளிதில் கிடைப்பதற்கேற்ப செப்டம்பர், அக்டோபர், ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன.
நுட்பமான அறிவும், தந்திரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த இவற்றுக்கு வாசனை, ருசி, கேட்டல் மற்றும் தொடுதல் திறன் அதிகம். வயல் எலிகள் நீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக நீந்தும். 20 முதல் 25 மீட்டர் நீளமும், ஒன்றிற்கு மேற்பட்ட புறவழிகளும் கொண்ட வளைகளைத் தோண்டுகின்றன. உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் சமாளிக்கும்.
எலிகள் நெல், பயறு, உளுந்து, பருத்தி, சோயாமொச்சை பயிர்களையும் தாக்கி சேதப்படுத்துவதால் உழவியல் , கைவினை, ரசாயன மற்றும் உயிரியல் முறைகளைக் கையாள வேண்டும்.
பயிர் பருவத்திற்குத் துவக்கத்தில் வரப்புகளை வெட்டி எலிகளைப் பிடித்து அழிக்க வேண்டும். எலிகள் வளைகளை அமைக்க முடியாதபடி குறுகிய வரப்புகளை அமைக்க வேண்டும். வயலுக்கு அருகில் வைக்கோல் போர் அமைக்கக்கூடாது.
வயல், வரப்புகளில் சிறு செடிகளோ, களைகளோ இல்லாமல் அழிக்க வேண்டும். பயிர் சாகுபடி காலத்தில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 26 தஞ்சாவூர் எலிக்கிட்டிகளை வரப்பிலிருந்து உள்புறமாக 3 மீட்டர் விட்டு வைக்க வேண்டும். எலிகளின் இயற்கை எதிரிகளான பாம்புகளைக் கொல்லக்கூடாது. ஆந்தை போன்ற இரவுப் பறவைகள் அமர்வதற்கு டி வடிவக் குச்சிகளையோ அல்லது தென்னை அடிமட்டைகளையோ தலைகீழாக வயல், வரப்புகளில் வைக்கவேண்டும்.
ஒரு பங்கு சிங்க் பாஸ்பைடு மருந்துடன் 49 பங்கு நெல்பொரி கலந்து சிறிது தேங்காய் எண்ணெயும் கலந்து வைக்கலாம். விஷ உணவு வைப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு விஷம் கலக்காத உணவை வைத்து பழக்க வேண்டும். அலுமினியம் பாஸ்பைடு மாத்திரையை வளை ஒன்றுக்கு ஒரு மாத்திரை வீதம் இட்டு, வளையை ஈர களிமண் கொண்டு மூட வேண்டும். ரத்தக்கசிவை ஏற்படுத்தும் புரோமடையலோன் 0.005 சதவீத “ரோபோன்” கேக்குளை வரப்புகளில் 3 மீட்டர் இடைவெளிக்கு ஒரு கட்டி வீதம் வைத்து எலிகளை ஒழிக்கலாம்.
கல்யாணசுந்தரம்
உதவி பேராசிரியர்
பயிர் பாதுகாப்பு துறை
வேலாயுதம்
முதல்வர், வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி நிலையம்
ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்
04372 – 291 720
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்