ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் ரோஜா சாகுபடி

ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திறந்தவெளி ரோஜா சாகுபடியில் இரட்டிப்பு வருவாய் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மண்வளம் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை நிலவி வருவதால் ரோஜா சாகுபடி பிரதானமாக உள்ளது. சுமார் 350 ஹெக்டேர் பரப்பளவில் திறந்தவெளி மற்றும் பசுமை குடில்கள் மூலம் விவசாயிகள் ரோஜா சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு, உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர்தினம் ஆகிய பண்டிகைகளுக்காக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், உள்ளூர் தேவைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தில் மட்டும் பல லட்சம் ரோஜா மலர்கள் இங்கிருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது ஓசூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திறந்தவெளி ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பசுமை குடில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் ரோஜா சாகுபடியை விட திறந்த வெளி சாகுபடியில் செலவு குறைவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஓசூர் அருகே பூனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், 5 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளியில் ரோஜா மலர் சாகுபடியை மேற்கொண்டு வருகிறேன். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ₹20 ஆயிரம் வரையிலும் செலவாகிறது.

பசுமை குடில்களில் இதைவிட பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளது. திறந்த வெளியில் சிகப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் ரோஸ் உள்ளிட்ட கலர்களில் ரோஜா மலர்கள் கிடைக்கிறது. தற்போது, திறந்தவெளி சாகுபடியில் அறுவடை செய்யப்படும் ரோஜா மலர்கள் சந்தைகளில் ஒரு கிலோ ₹50க்கு விற்பனையாகிறது. ₹70 முதல் ₹100க்கு விற்பனையானால் நல்ல லாபம் கிடைக்கும்.

விழா காலங்களில் அதிக வருவாயை ஈட்டலாம் என்கிறார்.ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் திறந்தவெளி ரோஜா மலர்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த முறை சாகுபடியில் இரட்டிப்பு வருவாய் கிடைப்பதால் ஓசூர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *