கல் செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து வரும் சீனிவாசன் சொல்கிறார்:
Image courtesy: Pasumai Vikatan
- நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார் நகரைச் சேர்ந்தவன் நான். என் தாத்தா, பெரியப்பா எல்லாரும் மாடுகள் ஓட்டி, கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து, விற்று தொழில் நடத்தி வந்தவர்கள் தான்.
- காலப்போக்கில் எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள் மற்றும் பாக்கெட் எண்ணெய் வருகையால், 1980க்குப் பின், கல் செக்கில் மாடு பூட்டி எண்ணெய் பிழிந்து எடுப்பது வழக்கொழிந்து விட்டது. சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என, அவதிப்படும் மக்கள், தற்போது இயற்கை உணவு முறைக்கு மாறி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, மீண்டும் மாடுகள் பூட்டி கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி பண்ண முடிவெடுத்தேன்.
- இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும்போது, அதன் வேகத்தால் எண்ணெய் அதிகம் சூடாகிறது. அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்துகள் குறைந்துவிடும். அதனால் தான், ‘ஒரு தடவை பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது’ என்கின்றனர்.
- கல் செக்கை மாடுகள் மூலம் மெதுவாக இயக்குவதால், எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் எள்ளுடன் சேர்த்து அரைக்கப்படும் கருப்பட்டி, சமன் செய்துவிடும்.
- கல் செக்கிலிருந்து பிழித்தெடுக்கப்படும் எண்ணெயை வடிகட்ட மாட்டோம். பித்தளை பாத்திரத்தில் ஊற்றி, வெயிலில் காய வைத்தால் தானாகவே தெளிந்துவிடும். இதனால், அந்த எண்ணெய்களில் உள்ள சத்துகள் அப்படியே இருக்கும்.
- இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால், பாக்கெட் எண்ணெய், பார்க்க பளிச்சென இருக்கும். கம்பெனிகள், தங்களுக்கு என நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கின்றனர். அதனால் தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கிறது.
- ஆனால், கல் செக்கு எண்ணெய் நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடனும் ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
- கல் செக்கில் ஒரு நாளுக்கு, 28 லிட்டர் வரை மட்டுமே உற்பத்தி பண்ண முடியும். நல்லெண்ணெய் மட்டுமின்றி கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகின்றன. இது ஒரு குடிசை தொழில் என்பதால், அரசு மானியம் வழங்கினால், கல் செக்கு தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். நம் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை, அரசு முன் வந்து ஊக்குவிக்க வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்