‘கூர்க்கன்’ மூலிகை செடி சாகுபடி

இந்திய மருத்துவத்தின் முதன்மை வடிவமாக எப்போதும் இருந்துள்ள மூலிகைச் செடிகள், தற்போது வளர்ந்த நாடுகள் முழுவதும் பிரபலமாகி வருகின்றன. இந்தியாவில் பராம்பரிய மருத்துவத்தில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பயிர்கள் பயன்படுகின்றன. இவற்றில் கூர்க்கன் என்பது மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நறுமண மூலிகை.

இந்த மூலிகை வெப்ப மண்டலமான இந்தியா, நேபாளம், பர்மா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளில் வளர்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1,500 டன் கூர்க்கன் கிழங்குகள் உற்பத்தியாகின்றன.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையப் பயிர்ப் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் சு. திவ்யா கூறியது:


கூர்க்கன் என்பது ஹெர்பேசியஸ் வகையைச் சேர்ந்தது. 45 முதல் 60 செ.மீ உயரம் வரை வளரக்கூடிய இச்செடியின் தண்டுகள் மெல்லியதாகவும், இளம் பச்சை நிறத்திலும் இருக்கும். இலைகள் கற்பூரவல்லிச் செடிகளின் இலைகளைப் போல, ஆனால் வாசனையின்றி இருக்கும். இதன் வேர்க்கிழங்குகள் மருந்துப் பொருள்களில் அதிகம் பயன்படுகின்றன.

வேர்கள் கேரட்டைப் போல பருமனாகவும், 30 செ.மீ வரை நீளமானதாகவும் இருக்கும். வேர்கள் இளமஞ்சள் நிறத்துடன் வாசனைத் தன்மையுடன் இருக்கும். இவற்றில் போர்ஸ்கோலின் மூலப்பொருள் உள்ளது.

 பயன்கள்:

இதன் வேர்க்கிழங்கு ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்தவும், “கிளக்கோமா’ என்னும் கண் கோளாறுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் அதிகளவில் பயிரிடப்படும் ரகம் மங்காளிபெரு.
மண் மற்றும் தட்ப வெப்பநிலை:செம்மண் அல்லது மணல் மற்றும் சரளை வகை மண் உள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம். வேரின் வளர்ச்சிக்கு மண்ணின் தன்மை கடினமாக இருக்கக் கூடாது.
வடிகால் வசதியுடைய மணற்பாங்கான மண் வகைகள் மிகவும் ஏற்றவை.

நீர்த் தேங்கும் மண் வகைகள் தமிழ்நாட்டில் நீர்ப்பாசன வசதியுடன் இதை சாகுபடி செய்யலாம்.
விதையும், விதைப்பும்: நுனித் தண்டுகள் மூலம் கூர்க்கன் கிழங்குகளைப் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். மூன்று அல்லது நான்கு கணுக்களுடைய 10 செ.மீ நீளமுள்ள நுனித் தண்டுகளை மட்டுமே நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

 நிலம் தயாரித்தல்:

நிலத்தை உழுது ஹெக்டேருக்கு 15 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்த வேண்டும். பிறகு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் பிடிக்க வேண்டும். பயிர்களின் பக்கவாட்டில் தண்டுகளை ஜுன், ஜுலை அல்லது செப்-அக். மாதங்களில் நட வேண்டும்.

இடைவெளி: 60 செ.மீ இடைவெளியில் அமைக்கப்பட்ட பார்களில் 45 செ.மீ இடைவெளியில் நாற்று நட வேண்டும். ஒரு ஹெக்டேரில் நட 37,030 செடிகள் தேவைப்படும். சற்றே வளம் குறைந்த நிலங்களில் செடிகளை 30 செ.மீ இடைவெளியில் நடலாம். இந்த முறையில் ஹெக்டேருக்கு 55,000 செடிகள் தேவைப்படும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை செடிகள் நட்ட 30-வது நாளிலும், பிறகு 45-வது நாளிலும் சமமாகப் பிரித்து இட வேண்டும். நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை உள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டச்சத்து உரத்தை அடியுரமாக இடுவது அவசியம்.

 நீர் நிர்வாகம்:

செடிகள் நட்ட முதல் மாதத்தில் வாரம் ஒரு முறையும், பிறகு 10 நாள்கள் இடைவெளியிலும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். கிழங்குகளை அறுவடை செய்வதற்கு 10 நாள்கள் இருக்கும்போது கடைசி பாசனத்தை அளித்து நிறுத்திவிட வேண்டும்.

 ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு:

சாறு உறிஞ்சும் பூச்சியான இலைப்பேன், செதில் பூச்சி, மண்ணுக்கடியில் இருந்து தாக்கும் வெண்புழு மற்றும் வேர் முடிச்சு நூற்புழு, இலை உண்ணும் பூச்சிகள், கிழங்கை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவக் குணம் உள்ள செடி என்பதால் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கக்கூடாது.

சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நன்மை செய்யும் இரை விழுங்கியான கிரைசோ பெர்லாகார்னியாவை ஹெக்டேருக்கு 50 ஆயிரம் முட்டைகளை 3 முறை நடவு செய்த 15, 30 மற்றும் 105-வது நாள்களில் வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். மேலும், மீன் எண்ணெய் ரோசின் சோப்பு என்று சொல்லக்கூடியதை லிட்டருக்கு 25 கிராம் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

பாக்டீரியா வாடல் நோய்:இது, ஒரு சில பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நோய் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் என்னும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்நோய் தாக்கப்பட்ட வேர்களின் உள்புறத்தில் பழுப்பு அல்லது வெள்ளை நிறக்கோடுகளும், இலைகள் பழுப்பு நிறத்துடனும் காணப்படும். அதிக அளவு நோய் தாக்குதல் இருந்தால் வளர்ந்த செடிகளும் காய்ந்துவிடும்.

 கட்டுப்படுத்தும் முறை:

சூடோமோனாஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா உயிர்கொல்லி மருந்தை ஹெக்டேருக்கு 5 கிலோ அளவில் 250 கிலோ தொழு எருவுடன் கலந்து, ஒவ்வொரு செடிகளுக்கும் இடுவதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

 அறுவடை:

செடிகளை நட்ட 6 முதல் 7 மாதங்களில் கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிறது. இந்த தருணத்தில் செடிகளை தாள் அறுத்து மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்குமாறு மண்ணைத் தோண்டி கிழங்குகளை சேதமின்றி எடுக்க வேண்டும். இதற்கு, உழவுக் கலப்பை கொண்டு மேலாக உழுதால் கிழங்குகளை சேதமின்றி எடுக்க இயலும்.

மகசூல்: ஹெக்டேருக்கு 15- 20 டன் பச்சை வேர்கள் அல்லது 2,000- 2,200 கிலோ உலர்ந்த வேர்கள் மகசூலாகக் கிடைக்கும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *