ஓமலூர் உள்பட மாவட்டம் முழுக்க மூன்று பட்டங்களுக்கும் ஏற்ற கொள்ளுப் பயிறு சாகுபடி செய்ய வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.
தமிழகம் முழுக்கவே பயறு வகைகளை பயிரிடுவதில் ஆர்வமுள்ள விவசாயிகள் 90 நாள்களில் பலன் தரக்கூடிய கொள்ளுப் பயிறு சாகுபடியில் ஈடுபடுவதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
- ஆடிப் பட்டமான ஜூன், ஜூலை மற்றும் புரட்டாசி பட்டம் செப்டம்பர், அக்டோபர், மாசிப் பட்டம் பிப்ரவரி, மார்ச்ஆகிய பட்டங்களில் கொள்ளு மொச்சை சாகுபடி செய்வது உகந்தது. இதில், கோ-1 இறவை, கோ-2, கோ-3 ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.
- கொள்ளுபப் பயிரானது 90 நாள்களில் வளர்ந்து பயனளிக்கக் கூடியது. மேலும், 40 நாள்களில் 50 சதவீதம் பூக்கும் திறன் கொண்டது.
- கொள்ளுப் பயிரை விதைக்கும் முன் முன்செய் நேர்த்தி முறையில் நிலத்தை நன்கு உழுத பின் பாத்தியாகவும், வாய்க்காலாகவும் பிரிக்க வேண்டும்.
- கோ-1, கோ-3 ஆகிய ரகங்களை ஹெக்டேருக்கு 80 கிலோ எனவும், கோ-3 மானாவாரி தனிப்பயிர் ரகத்துக்கு ஹெக்டேருக்கு 60 முதல் 70 கிலோ வரையும் விதைக்கலாம். ஊடுபயிராக பயிரிட ஹெக்டேருக்கு 25 கிலோ விதை போதுமானது.
- விதையிலிருந்து பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், நுனிகருகல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் 3 பாக்கெட் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 3 பாக்கெட் உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி. தொழு உரம் மற்றும் 25 கி. உயிர் உரம் மற்றும் 25 கி. மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.
- விதைத்த 30 நாள்களுக்கு பின்னர் களைகளை ஒருமுறை எடுத்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாள்களுக்கு பின்னர் களை எடுக்க வேண்டும்.
- முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாள்களில் தெளிக்க வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து 30-ஆவது நாளில் ஒரு முறை கைக் களை எடுக்க வேண்டும்.
- இலைகள் பழுத்து உதிர்ந்தவுடன் நிலமட்டத்தில் அறுத்து செடிகளை காயவைத்து பின் தாம்பு கட்டி மணிகளைப் பிரித்து, தூற்றிச் சுத்தம் செய்ய வேண்டும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்