கொள்ளு சாகுபடி தொழில்நுட்பங்கள்

கொள்ளு பயிரானது செப்டம்பர் – நவம்பர் – மாத காலங்களில் சாகுபடி செய்வது மிகச் சிறந்தது. இது தமிழகத்தில் சுமார் 60,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

ரகங்கள்:

கோ-1, பையூர் -1, பையூர் – 2.

சாகுபடி முறைகள்:

நிலத்தை ஐந்து கலப்பை அல்லது ஒன்பது கலப்பை கொண்டு புழுதி படிய நன்கு உழவு செய்ய வேண்டும்.

விதையளவு:

ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

ரைசோபியம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா (1 பாக்கெட்) 200 உயிர் உரத்தை 400 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, 1 ஏக்கருக்குத் தேவையான விதைகளைக் கலந்து, பின் நிழலில் உலர்த்தி பின் 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பதற்கு முன் இட வேண்டும்.

ஊட்டச்சத்து மேலாண்மை:

விதைப்பதற்கு முன்பாக அடி உரமாக ஹெக்டேருக்கு 12.5 டன் நன்கு மக்கிய தொழு உரம் இடவும். மண் பரிசோதனை ஆய்வுப்படி உரம் இட வேண்டும்.

இல்லையெனில், பொது பரிந்துரைக்காக ஏக்கருக்கு 5:10:5 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் தரவல்ல 11 கிலோ யூரியா, 63 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷே அடியுரமாக இட வேண்டும்.

களை கட்டுப்பாடு:

20 முதல் 25 நாள்களுக்குள் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.

அறுவடை:

அனைத்து காய்களும் முதிர்ச்சி அடைந்தவுடன், அறுவடை செய்ய வேண்டும். பின்னர், காய்களைக் காயவைத்து கதிரடித்து பருப்புகளை தனியே பிரித்து எடுக்க வேண்டும்.

மகசூல்:

ஏக்கருக்கு 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மிகக் குறைந்த சாகுபடி செலவுகளைக் கொண்டுள்ள கொள்ளு பருப்பானது மருத்துவ பலன்களைக் கொண்டது.

பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கொள்ளுப் பயிரை சாகுபடி செய்து விவசாயிகள் தங்களது வருவாயை அதிகரித்துக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் – வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தோ. சுந்தராஜ் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 04343290639 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *