சத்துள்ள அரிசியை நாமே அரைக்க ‘மினி’ ரைஸ் மில்!

நாளுக்கு நாள் விவசாயத்தில் புதிய புதிய கருவிகள் சந்தைகளில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட மினி செக்கு இயந்திரம் ஒன்றும் வெளியானது. மினி எண்ணெய்ச் செக்கு இயந்திரம் மூலமாக நமது வீட்டிலேயே நம் எண்ணெய்களை தயாரித்துக் கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் அரிசி தயாரிக்கும் மினி ரைஸ் மில் என்ற இயந்திரம் சந்தையில் அறிமுகமாகியுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இந்தக் கருவியை விற்பனை செய்து வரும் நல்ல சந்தை புரொடியூசர் கம்பெனி அதிகாரி ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். மினி ரைஸ் மில் என்ற கருவியைப் பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஆச்சர்யம் தருவதாகவே இருந்தன.

மினி ரைஸ் மில்

“இக்கருவிக்கு நாங்கள் வைத்த பெயர் ‘மினி ரைஸ் மில்’. ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் ஓர் இயற்கை விவசாயி தான் விளைவித்த நெல்லைப் பெரிய ரைஸ்மில்லில் கொண்டு போய் அரைக்க முடியாது. பெரியப் பெரிய ரைஸ் மில்களில் 150 முதல் 200 மூட்டைகளை ஒரே நேரத்தில் அரைத்தால்தான் ரைஸ் மில்லுக்கு லாபம் கிடைக்கும். இதனால் வெறும் 40,50 மூட்டைகளை மட்டும் போட்டு அரைக்க மாட்டார்கள்.

இதுதவிர சிறிய ரைஸ் மில்களையே அந்த விவசாயிகள் நாட வேண்டியிருந்தது. சில பகுதிகளில் அந்த வசதியும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. அதனால் இயற்கையில் நெல் விதைத்தவர்களுக்கும், பாரம்பர்ய நெல்லை விதைத்தவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதுதவிர, விவசாயிகள் அறுவடை செய்து இருப்பு வைக்க முடியாமல் ரைஸ் மில்லுக்கு அனுப்பி விடுகின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல் 12 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அந்த நெல்லை இருப்பு வைத்து விற்பனை செய்யும் ரைஸ் மில் உரிமையாளர்கள் நேரடியாக அரிசியை 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

இது பைகளில் சந்தைக்கு 70 முதல் 80 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாகவும், விவசாயிகளுக்கு நேரடியாக லாபம் கொடுக்கும் விதமாகவும் இக்கருவி சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இக்கருவி நிச்சயமாகச் சிறு, குறு விவசாயிகளுக்கு லாபத்தைக் கொடுக்கும். அவர்கள் விளைவிக்கும் பாரம்பர்ய ரக நெல்லாக இருந்தால் எளிதில் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மினி ரைஸ் மில்

3 பி.எச்.பி மோட்டார் கொண்டு இயங்குவதால் இயந்திரம் இயக்க ஒரு பேஸ் மின்சார வசதி இருந்தாலே போதும். சாதாரணமாக வீடுகளில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதன் எடை 120 கிலோ மட்டுமே. இதனை வைக்க கிரைண்டர் வைக்கும் அளவு இடம் இருந்தாலே போதும். இதில் ஒரு மணிநேரத்தில் 100 கிலோ நெல்லை அரிசியாக்க முடியும். இதன் மூலம் 65 கிலோ அரிசி கிடைக்கும்.

அதில் அந்தந்த நெல்லின் பதத்தைப் பொறுத்து அரிசியாவதில் தாமதமாகலாம். வேக வைத்த நெல், பச்சை நெல் என இரண்டையும் போட்டு அரைக்கலாம். இதன் விலை 40,000 ரூபாய். இது தனியாக வாங்க வேண்டும் என்பதைத் தவிர்த்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மொத்தமாக நான்கு இயந்திரங்களை வாங்கிக் கொண்டால் அவர்களுக்கு ரைஸ்மில்களை தேடிச்செல்லும் வேலை மிச்சமாகும்.

சாதாரணமாகச் செயல்படும் அரிசி அரைக்கும் இயந்திரத்தைப் போலவேதான் இந்த இயந்திரமும் செயல்படும். மேலே அகன்ற வாய்ப் பகுதியில் நெல்லைக் கொட்ட வேண்டும். அதிலிருந்து மாவு அரைக்கப்பட்டுத் தனி வழியில் வெளியேறும். பக்கவாட்டில் உள்ள இரண்டு துளைகள் மூலமாக குருனை தனியாகவும், தவிடு தனியாகவும் வெளியேறும். இதில் அரிசியைப் பாலீஸ் செய்ய முடியாது. இதுவும் ஒருவகையில் நன்மை கொடுக்கக் கூடியதுதான். பாலீஸ் செய்யப்படாத அரிசியில்தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன. நிச்சயமாக இது விவசாயிகளுக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும். இதுபோல இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் வெளிவர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” என்றார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “சத்துள்ள அரிசியை நாமே அரைக்க ‘மினி’ ரைஸ் மில்!

  1. மா.சுப்ரமனி says:

    நெல்அரவைமெஷின்எங்குகிடைக்கும்அதன்விபரம்தேவை.நாங்கள்ஏற்கனவேமாவுமில்வைத்துள்ளோம்.இடம்சேலம்மாவட்டம்இராமலிங்கபுரம்9952661700 செல்

  2. marimuthu says:

    இந்த பிசினை வாங்க தொடர்பு என் மற்றும் முகவரி உள்ளதா?

Leave a Reply to bharath Cancel reply

Your email address will not be published. Required fields are marked *