மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்பட்டு வரும் துரியன் பழ சாகுபடியை, உடுமலை போன்ற சமவெளி பகுதிகளிலும், தென்னைக்கிடையே ஊடுபயிராக பயிரிடலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவு சத்துக்கள் கொண்ட துரியன்பழம், குன்னுார் பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மலைப்பிரதேசங்களில் உள்ள குளிர்ச்சியான காலநிலை அதன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மிதமான வெப்பநிலையும், குளிரும் நிலவுவதால் துரியன் செடிகள் வளர்வதற்கான சூழல் காணப்படுகிறது.
ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது செடிகளுக்கு தேவையான நிழல், குளிர்ச்சியும் தானாகவே கிடைக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பருவம் என்பதாலும், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால், சீசன் சமயங்களில், மக்களிடத்தில் வரவேற்பு அதிகமுள்ளது.
இதனை சமவெளி பகுதியிலும் சாகுபடி செய்தால் விவசாயிகள் நிச்சயமான வருமானம் பெறலாம். உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:
- ஈரப்பதம் மிகுந்த மிதமான தட்பவெப்ப நிலை காணப்படும் பகுதியில், நல்ல வடிகால் வசதியுடைய வண்டல் மண் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.
- இதில், சானே, கன்யோ, பிராக், கோல்டன், போஜால் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.
- ஒவ்வொரு செடிக்கும், 10 முதல், 12 அடி இடைவெளி இருக்கும் வரையில் நடவு செய்ய வேண்டும்.
- குழியில் மண்புழு இட்டு நடவு செய்தால் செடிகளின் வளர்ச்சியும் துரிதமாகவும் இருக்கும்.
- ஆண்டுதோறும் மரங்களுக்கு, 20 கிலோ தழைச்சத்து, 5 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து, 20 கிலோவும் வைக்க வேண்டும்.
- விதைகள் மூலம் நடவு செய்யப்படும் மரங்கள் பத்தாண்டுகளிலும், ஒட்டுக்கட்டப்பட்ட செடிகள், 4 முதல், 5 ஆண்டுகளிலும் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கிறது.
- மே – செப்., மாதமே இதன் முக்கிய பருவமாகும். மரத்துக்கு, 100 முதல், 120 பழங்கள் வரைக்கும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
- துரியன் பழங்கள் ஐஸ்கிரீம், காபினோ தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
- பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்காக அதிகளவில் எடுத்துக்கொள்கின்றனர். உடலில் துாக்கத்தினை துாண்டவும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. அதிகளவு நார்ச்சத்து உள்ள இப்பழம் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
- நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், ஏ மற்றும் பி, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, தாது உப்புகள், முக்கிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளதுடன், சிறந்த வருமானத்துக்கான வழியாகவும் உள்ளதால், தென்னை விவசாயிகள் ஊடுபயிராக சாகுபடி செய்து பலன் பெறலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்