சாத்துக்குடி சாகுபடி

சொட்டுநீர்ப் பாசன முறையில் சாத்துக்குடியைப் பயிரிட்டு, சிறந்த சாகுபடியாளராக இருந்து விவசாயிகளுக்கு வழிகாட்டி வருகிறார் சிவலிங்கம். ராணிப்பேட்டையை அடுத்த மருதாலம் அருகேயுள்ள நவம்பரம் கிராமத்தில் 7 ஏக்கர் பரப்பில் கடந்த 4 ஆண்டுகளாக இவர் சாகுபடி செய்துவருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

பயிரிடப்பட்டுள்ள சாத்துக்குடியை பார்வையிடும் விவசாயி சிவலிங்கம்.  Courtesy: Dinamani
பயிரிடப்பட்டுள்ள சாத்துக்குடியை பார்வையிடும் விவசாயி சிவலிங்கம். Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

  • விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் சிறு வயதில் பெங்களூருவுக்குச் சென்றேன். மொத்த விலை பழங்கள் மண்டியில் பணிபுரிந்து, வியாபார நுணுக்கங்களை கற்றேன். பழங்களை கொள்முதல் செய்ய ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வேன். அப்போது நாம் ஏன் பழ வகைகளை பயிரிடக் கூடாது என்று எண்ணம் ஏற்பட்டது.
  • இதைத் தொடர்ந்து, நவம்பரம் கிராமத்தில் எனக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் சாத்துக்குடி பயிரிடத் தொடங்கினேன். இதற்கு ஏற்றவாறு செம்மண் கலந்த வடிகால் வசதி மிக்க நிலமாக இருந்தது.
  • ஆந்திரத்தில் உள்ள ஹைதராபாத், வாரங்கல், கம்பம், நலகொண்டா ஆகிய மாவட்டங்களிலும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூருக்கும் சென்று சாகுபடி குறித்த நுணுக்கங்களை அறிந்தேன்.
  • பின்னர் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூரில் சாத்துக்குடி நாற்றுகளான ரங்காபுரி ரக கன்றுகளை வாங்கி வந்தேன்.
  • பின்னர் செடிக்கு செடி 16 அடி இடைவெளிவிட்டு நட்டு, முழுவதும் சொட்டுநீர்ப் பாசன முறையில் தண்ணீரைப் பாய்ச்சி பராமரித்தேன்.
  • இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக சாகுபடி செய்துவருகிறேன்.

பராமரிப்பு, செலவு விபரம்:

  • சாத்துக்குடி பயிருக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை தமிழகத்தில் உள்ளது.
  • பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாத பயிர் சாத்துகுடி. இருந்தாலும் ஒரு ஏக்கருக்கு உரம், களை எடுப்பது, காய்ந்த மரக் கிளைகளை அவ்வப்போது வெட்டி விடுவது பழங்கள் பறிக்க, என ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகும்.
  • அவ்வாறு பராமரித்தால் சாத்துக்குடி கன்றுகளை நட்ட 3 ஆண்டுகள் கழித்து மரங்களில் பூவிட்ட 7 மாதத்தில் பழங்கள் அறுவடைக்கு வரும்.
  • இந்த வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 15 டன் முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.
  • அவ்வாறு விளைந்த பழங்களை பாதுகாப்பாகப் பறித்து பழங்களை சூப்பர் கோலா, மீடியம் கோலா, கோலா என தரம் பிரித்து பெங்களூரூவில் உள்ள மொத்த விலை பழங்கள் மண்டிக்கு அனுப்புவேன்.
  • அப்போது சந்தை நிலவரத்தைப் பொருத்து விலை கிடைக்கும். இதற்கு ஏற்றவாறு லாபம் இருக்கும்.
  • மற்ற பயிர்களைவிட தண்ணீர், பராமரிப்பு, பாதுகாப்பு குறைவாக உள்ள சிறந்த பயிராகவும், மற்ற பயிர்களைவிட அதிக வருமானம் உள்ள பயிராகவும் சாத்துக்குடி பயிர் உள்ளது.
  • எனவே, சாத்துக்குடி சாகுபடியை தமிழக விவசாயிகள் பயிரிட்டு, அதிக லாபம் ஈட்டலாம். இதற்காக என்னை 09448373051 என்ற செல்லிடப்பேசியில் அழைத்தால், ஆலோசனை வழங்கவும் தயாராக உள்ளேன் என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *