வேடிக்கை பார்ப்பதைவிட சிறந்த தியானம் எதுவும் இல்லை. அதுவும் இயற்கையை வேடிக்கை பார்ப்பது என்பது பெரும் பேறு. அருவிகள் மட்டும் அழகானது இல்லை, இயற்கையை ரசிக்க தெரிந்த புலன்களுக்கு, அது எழுப்பும் ஓசையும் அத்தகையதுதான். செடி, கொடி, காடு, பறவைகள் என அத்தனையும் அழகே.
என் அப்பாவிற்கு நிழலை தந்த மரம் இன்றில்லை, அது என் வீட்டின் கதவுகளாக இருக்கிறது. மரத்தை கதவுகளாக மாற்றுவதை விட பெரிய வன்மம் வேறெதுவும் இருக்க முடியாது, ஆம். இயற்கை விசாலமானது, தன் மார்பில் அனைத்தையும் சாய்த்துக் கொள்ளும் பேரன்பு கொண்டது. கதவுகள் சுயநலத்தின் குறியீடு. நமக்கு மட்டுமே எல்லாம் என்று நினைக்கும் மனித மனதின் மோசமான கண்டுபிடிப்பு கதவுகள். நிச்சயம் மரம் கண்ணீர் விடும்.
இயற்கையின் சிருஷ்டி நாம். நாம் சிதைந்து கொண்டிருக்கிறோம். கூடவே, இயற்கையையும் சிதைத்து கொண்டிருக்கிறோம். இப்போதெல்லாம், அங்கொன்றும், இங்கொன்றுமாக அந்த கோஷத்தை கேட்க முடிகிறது. “வாருங்கள் இயற்கையை காப்போம்… வாருங்கள் நீர் நிலைகளை காப்போம்…” இதை விட முரண்பாடான கோஷம் வேறொன்றும் இருக்க முடியாது. ஆம், இயற்கையை யாராலும் காக்க முடியாது. அதனுடன் இயைந்து வாழ்வது மூலம், நம்மை வேண்டுமானால் நாம் காத்துக் கொள்ள முடியும்.
ச்சும்மா இருப்பது என்ன சுகம் தெரியுமா…?
பெர்ட்ராண்ட் ரஸல், பிரிட்டனை சேர்ந்த சென்ற நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர், எழுத்தாளர். பேரழிவுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ள அவர் முன் வைக்கும் யோசனை ‘ச்சும்மா இருங்கள்’ என்பது .
அவர் ஏதோ விட்டேத்தியாக இதை சொல்லவில்லை. முறையான ஆய்வுகளை முன் வைக்கிறார். ‘ச்சும்மா இருக்காமல் நம்மை நாம் காத்து கொள்ள முடியாது’ என்கிறார். உழைத்தால்தான் வாழ முடியும் என்று பழக்கப்படுத்தப்பட்ட நமக்கு, இது முரண்பாடாக இருக்கிறதெல்லவா? ஆம். அவருக்கும் அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டது. அவரது மொழியில் சொல்லவேண்டுமானால், “எல்லா குழந்தைகளையும் போல எனக்கும் சும்மா இருப்பவனின் மூளை சாத்தானின் தொழிற்சாலை” என்றுதான் சொல்லித் தரப்பட்டது. எல்லாவற்றையும் நம்பினேன். இப்போது வளர்ந்ததும் என் கருத்து மாறிவிட்டது.
இந்த உலகில் தேவைக்கு அதிகமாகவே வேலை செய்யப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது.வேலை அதிகமாக செய்வது ஒழுக்கம் என்றுதான் போதிக்கப்படுகிறது. அதனாலேயே பல தீமைகள் விளைகின்றன. இப்படி போதிப்பதை நிறுத்த வேண்டும்” என்கிறார்.
ரஸஸ் தேவைக்காக உழைப்பதை எதிர்க்கவில்லை. தேவைக்கு அதிகமாக சேமித்து வைக்க உழைப்பதை தான் எதிர்க்கிறார். அவர் சொல்கிறார், “முதன்முதலில் மனிதன் உற்பத்தியைத் துவக்கியபோது “தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வது” என்பதே இருக்கவில்லை. “உழைப்பே உயர்வு” என்ற போதனை துவங்கப் பட்ட பிறகு சமூகத்தில் ஒரு பிரிவினர் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வது, அதை மற்றொரு பிரிவினர் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் சும்மா இருப்பது என்று எல்லா தீமைகளும் வந்துவிட்டன. தனக்காக இல்லாமல் தன் முதலாளிக்காக உழைப்பது என்ற கண்ணோட்டம் பெருகிவிட்டது. இதற்குக் காரணம் இந்த போதனைதான்” என்கிறார்.
இதையேதான் காந்தி அவரது மொழியில் சொன்னார், “நமக்கு தேவையானது அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கிறது. ஆனால், நம் பேராசைக்கானது எதுவுமில்லை” என்கிறார்.
சரி, விஷயத்திற்கு வருவோம்.
குண்டூசியும், உலக பொருளாதாரமும், பின் இயற்கையும் :
“ஒரு தொழிற்சாலை குண்டூசிகளை உற்பத்தி செய்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தாலே தேவையான அளவு குண்டூசிகளை உற்பத்தி செய்துவிடலாம். ஒரு வேளை தொழில்நுட்பம் இதே அளவு குண்டூசிகள் உற்பத்திக்கான நேரத்தை 4 மணி நேரமாகக் குறைத்தால், அப்போது கூட இதே 8 மணி நேர வேலைதான் நடக்கும். தேவைக்கு அதிகமான குண்டூசிகள் உற்பத்தி செய்யப்படும். விலை சரியும். குண்டூசி தொழிற்சாலைகள் பாதிக்கப்படும். தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார் ரசல்.
அதாவது, மிகை உற்பத்தி இருக்கும் போது, அதை விற்பனை செய்ய சந்தை தேவைப்படுகிறது. அந்த சந்தையைப் பிடிக்க சில தகிடுதத்தங்கள் செய்ய நேரிடுகிறது. அது பெரும்பாலும் போரில் முடிகிறது.
அதே நேரம், அந்த மிக உற்பத்திக்காக அதிகம் மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் சுரண்டுகிறோம். இது அனைத்து பரிமாணங்களிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நாம் அதிகம் உழைத்து, அதிகம் பொருள் சேர்க்கிறோம் என்றால் அதிக இயற்கையை சுரண்டி இருக்கிறோம் என்று அர்த்தம். பணம் இருக்கும், ஆனால் நாம் ஆரோக்கியமாக வாழத்தக்கதாக இந்த இயற்கை இருக்காது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வாழத் தேவையான பொருட்களைப் பெற உழைப்பையோ பணத்தையோ தருவது அவசியம். உழைப்பு அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.
ஒரு வேளை எல்லோரும் தேவைக்காக மட்டும், அதாவது ஒரு நாளில் 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் அவரவருக்குத் தேவையானது கிடைக்கும். இந்த பிரபஞ்சமும் வாழதக்கதாக வெகு நாட்களுக்கு இருக்கும்.
உழைப்பை கொண்டாட வேண்டாம்:
உழைப்பை கொண்டாடுங்கள் என்பது பெரு நிறுவனங்களின் இன்னொரு கவர்ச்சியான வாசகம். அதிகம் உழைப்பது நிச்சயம் மகிழ்வானதாக இருக்க முடியாது. எந்த பறவையும் தம் தேவைக்கு அதிகமாக உழைப்பதில்லை. நாம் பறவைகள் போல் வாழ முடியாது, ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அனைத்து உயிரினங்களிடமிருந்தும் கற்கலாம் அல்லவா?. பெருநகரத்தில் வசித்து, பெருநிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள், தாம் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை மருத்துவமனைக்குதான் தருகிறார்கள். மருத்துவமனைக்கு அடுத்ததாக, தங்கள் பொழுதுப்போக்கிற்காக செலவு செய்கிறார்கள். அதாவது தாம் சம்பாரிப்பதே பிறர் சம்பாதிக்க என்பதாக இருக்கிறது. இதுவே தேவைக்காக மட்டும் உழைத்து, தேவைக்கான பொருளை மட்டும் வாங்கும்போது, இங்கு சுரண்டல் இல்லாமல் இருக்கிறது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும்போது, வெளியே மகிழ்ச்சியை தேட வேண்டியதில்லை, வாழ்வு மகிழ்ச்சிகரமாகிறது.
இங்கு யாரும் ” எனக்கு சும்மா இருப்பதை விட வேலை செய்வதில்தான் அதிக மகிழ்ச்சி” என்று சொல்லப் போவதில்லை. வாழ்வதற்கு உழைப்பு ஒரு வழி. அவ்வளவுதான்.
இதை புரிந்து கொண்டு வாழும் போது அகமும், புறமும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் !!
நன்றி: ஆனந்த விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்