நாம் வாழும் பூவுலகைக் காப்பாற்ற வேண்டும், சுற்றுச்சூழலை, அது சார்ந்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள். ஆனால், அந்தப் புரிதலை எப்படிப் பெறுவது என்று யோசனையாக இருக்கிறதா? தமிழில் வெளியான கீழ்க்கண்ட 10 புத்தகங்கள் அந்த அடிப்படை புரிதலைத் தரும்.
1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு.தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்
சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன், புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார். அவருடைய சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் பரவலாக, இந்தக் கட்டுரைகளும் ஒரு காரணம்.
2.அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி
மூன்றாம் உலக நாடுகளை மிரட்ட வல்லரசு நாடுகள் எடுத்துள்ள புதிய ஆயுதம் விதைகள் என்பது போன்ற அதிர்ச்சியளிக்கும் தகவலின் பின்புலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல். சூழலியல் சொல்லாடலில் தமிழ் மொழியின் வளத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகப் பாமயனின் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
3. ஏழாவது ஊழி, பொ.ஐங்கரநேசன், சாளரம்
தற்காலச் சூழலியல் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகளின் அடிப்படையில் எழுதும் பொ. ஐங்கரநேசன், தற்போது இலங்கை வடக்கு மாகாணத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர். அடிப்படை சூழலியல் பிரச்சினைகள் பற்றி விரிவான பல கட்டுரைகள் அடங்கிய அவருடைய முதல் தொகுப்பு இது.
4. மழைக்காலமும் குயிலோசையும், மா.கிருஷ்ணன், பதிப்பாசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம்
புகழ்பெற்ற இயற்கை யியலாளர் மா. கிருஷ்ணன், தமிழில் எழுதிய இயற்கையியல் கட்டுரைகளின் தொகுப்பு. அறிவியல் நோக்கில் காட்டுயிர்கள் பற்றிப் பேசிய முதல் தமிழ் எழுத்து கிருஷ்ணனுடையது. எளிய நடையில் காட்டுயிர்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இவை.
5. இயற்கை: செய்திகள் சிந்தனைகள், ச. முகமது அலி, இயற்கை வரலாற்று அறக்கட்டளை
இயற்கை, காட்டுயிர்கள், பறவைகள், தாவரங் கள் எனச் சூழலியல் சார்ந்த அனைத்தைப் பற்றியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் தகவல் களைக்கொண்ட களஞ்சிய நூல் இது. துறைசார்ந்த எண்ணற்ற சொற்கள், அறிவியல் பார்வை, சுவாரசியத் தகவல்கள் அடங்கிய அற்புத நூல்.
6. பறவைகள்: அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆசை, க்ரியா
ஒரு வித்தி யாசமான பறவையைப் பார்க்கிறீர்கள். அது என்ன வகை, அதன் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் இந்த நூல் கைகொடுக்கும். பறவைகளின் அடையாளம், பறவைகளின் பெயர்கள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும் வகையில் படங்களும், பெயர்களும் தரப்பட்டுள்ளன.
7.தமிழரும் தாவரமும், கு.வி.கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
தமிழர் பண்பாட்டில் பண்டைக்காலம் தொட்டுத் தாவரங்கள் பெற்றுவந்த முக்கியத்துவம், பண்பாட்டுத் தொடர்புகள், பெற்ற பொருளாதார நலன்களை விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துரைக் கும் நூல். தாவரங்களுக்கான சரியான தமிழ்ப் பெயர்களைத் தந்திருப்பதன் மூலம், அறிவியல் தமிழ் செல்ல வேண்டிய திசையைக் காட்டிய நூல்களுள் ஒன்று.
8. மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், எதிர் வெளியீடு
பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, நம் உடல்நலனுக்குக் கேடு தரும் பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்கிய முதல் நூல். அறிவியல் முறைப்படி சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அடிப்படைகளைக் கற்றுத் தந்த நூல்.
9. ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள்
இயற்கை வேளாண்மை குறித்த உலகப் புகழ்பெற்ற அடிப்படை நூல் இது. இயற்கை வேளாண் இயக்கம் தமிழகத்தில் பெரிய உந்துதலைப் பெறுவதற்கு முன்பே வெளியாகிவிட்டது. இன்றைக்கும் இயற்கை வேளாண்மையின் பாடப் புத்தகமாகக் கருதப்படுகிறது.
10. உழவுக்கும் உண்டு வரலாறு, நம்மாழ்வார், விகடன் வெளியீடு
கடந்த 50 ஆண்டுக் காலத்தில் நமது விவசாயம் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்றும், பசுமைப் புரட்சி நிகழ்த்திய வன்முறை பற்றியும் பேசுகிறது இந்த நூல். நாம் இழந்தவை என்ன, மீட்டெடுக்க வேண்டியவை என்ன, இயற்கை வேளாண்மையின் நன்மைகள் பற்றி நம்மாழ்வார் விரிவாகக் கூறியிருக்கிறார்.
நன்றி: ஹிந்து
இந்த புத்தகங்களின் பதிப்பாளர் பெயர்களை கூகிளில் தேடினால் அவர்களின் தொடர்பு எண் கிடைக்கும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்