தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் இந்த செங்காந்தள் சாகுபடி பரவலாகி வருகிறது.
செங்காந்தள் சாகுபடி குறித்து திருப்பூர் மாவட்டம், மூலனூர் வட்டார வேளாண் பொறியாளர் தி. யுவராஜ் கூறியதாவது:
கண்வலிக் கிழங்கு என்றும், கலப்பைக் கிழங்கு என்றும் அழைக்கப்படும் செங்காந்தள், பொதுவாக அதிக தண்ணீர் தேவையில்லாத நிலத்தில் சாகுபடி செய்யப்படும் தோட்டப் பயிராகும். ஓரளவு மழை பெய்யக் கூடிய பகுதிகளில், வடிகால் வசதியுள்ள செம்மண், மணல் கலந்த செம்மண், ஒட்டக்கல் அல்லது வெங்கக்கல் கலந்த செம்மண் ஆகிய நிலங்கள் செங்காந்தள் சாகுபடிக்கு ஏற்ற இடமாகும். நிலக்கடலை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் நிலங்களில் செங்காந்தள் சாகுபடி செய்ய முடியும்.
விதைக் கிழங்குகளை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். அடுத்த 160 முதல் 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்களை 10 முதல் 15 நாட்கள் வரை நிழலில் உலர்த்தி, காய்களில் உள்ள விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். ஏக்கருக்கு சுமார் 100 கிலோ விதை மகசூலாகக் கிடைக்கும். மேலும் அதே அளவுக்கு கிழங்குகளும் கிடைக்கும்.
தற்போது ஒரு கிலோ விதை ரூ.800 வரை விற்பனை ஆகிறது. செங்காந்தள் மலர் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன முறை சிறந்தது ஆகும். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசன அமைப்பை ஏற்படுத்திட விவசாயிகளுக்கு அரசு உதவிகளை அளித்து வருகிறது.
முதல் ஆண்டில் லாபம் குறைவாக இருந்த போதிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் விவசாயிகளுக்கு அதிக லாபம் தருவதாக செங்காந்தள் சாகுபடி உள்ளது என்கிறார் யுவராஜ். மேலும் விவரங்களை அறிய 96591 08780 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்.
அரசு ஊக்கப்படுத்த வேண்டும்
செங்காந்தள் மலர் சாகுபடி மூலம் உற்பத்தி ஆகும் விதை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது கிலோ ரூ.700 முதல் ரூ.1,700 வரை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இத்தகைய ஏற்ற, இறக்கத்துக்கு இடைத்தரகர்கள்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆகவே, தமிழ்நாட்டின் அரசு மலர் சாகுபடியை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் விவசாயிகளின் லாபத்தைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்