தமிழ்நாட்டிலும் விளையும் பேரீச்சை!

பாலைவன நாடுகளில்தான் பேரீச்சை விளையும் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கும் சூழலில், கோவை மாவட்டம் அவினாசி அருகே உலகத் தரம் வாய்ந்த பேரீச்சையைச் சாகுபடி செய்துள்ளார் கே.ஜி.முருகவேல்.

அவினாசி வஞ்சிப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள முருகம்பாளையத்தில் ஏறத்தாழ இரண்டரை ஏக்கர் தோப்பில் இருந்த 180 மரங்களிலும் கொத்துத் கொத்தாய்க் காய்த்துக் குலுங்குகின்றன பேரீச்சம் பழங்கள்.

வழக்கமாகக் கறுப்பு, சிவப்பு நிறத்திலேயே பேரீச்சம் பழங்களைப் பார்த்த நமக்கு, மஞ்சள் நிறத்தில் இருந்த பேரீச்சம் பழத்தைப் பார்த்தவுடன், கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. உடனே மரத்திலிருந்து சில பழங்களைப் பறித்துக் கொடுத்து `சாப்பிட்டுப் பாருங்க` என்றார் முருகவேல். தேனைப் போல இனிப்பாய் இருந்தது அந்தப் பழம்.

பர்ரி பேரீச்சை தந்த பலன்

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தியுள்ளார் முருகவேல். அப்போது பல பிரச்சினைகளால் பனியன் உற்பத்தித் துறை பெரிய சரிவைச் சந்தித்தது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். பனியன் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, வெளிநாட்டுப் பயணத்தில் பேரீச்சம் பழச் சாகுபடி பற்றிக் கேள்விப்பட்டுள்ளார்.

அது தொடர்பாகப் பல புத்தகங்களையும் தேடிப் படித்துள்ளார். அதிகாலை நேர குளிர்பனியும் அதிகத் தண்ணீரும் தேவையெனத் தெரியவந்துள்ளது. அரபு நாடுகளில் தண்ணீரைச் சேமித்து, பேரீச்சையை விளைவிக்கிறார்கள்.

2008-ல் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட ‘பர்ரி’ ரக பேரீச்சம்பழம்தான், உலகில் உள்ள உயர்ந்த பேரீச்சம் பழ வகைகளில் 3-வது இடத்தை வகிக்கிறது. அதன் தாயகம் இஸ்ரேல் என்றாலும், எகிப்து, வளைகுடா நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. குஜராத்திலும் சில பகுதிகளில் விளைவிக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார் முருகவேல்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக இரண்டரை ஏக்கர் தோட்டத்தில் 2009 பிப்ரவரி மாதம் 180 மரக்கன்றுகளை இவர் நட்டுள்ளார். ‘நம்ம ஊர்ல பேரீச்சம் பழமா?’ என்ற கேலியைக் கண்டுகொள்ளாமல், அதன் வளர்ச்சியில் முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு காய்க்கத் தொடங்கியது.

சந்தைப்படுத்துதலில் வெற்றி

சாகுபடியைவிடச் சந்தைப்படுத்துதல் சிரமமாக இருந்தது. முருகவேலும் அவரது மனைவியும் பைகளில் பேரீச்சம் பழத்தைப் போட்டுக்கொண்டு, வீடு வீடாகச் சென்று விற்றுள்ளனர். பேரீச்சம் பழத்தின் நன்மைகளைக் கூறுகிறார். நோட்டீஸாக அச்சடித்து, பள்ளி, கல்லூரிகளில் விநியோகம் செய்துள்ளனர்.

கொஞ்ச காலத்துக்குப் பின்னர் இதைப் பற்றி அறிந்த கடைக்காரர்கள் இவர்களைத் தொடர்புகொண்டு, பேரீச்சம் பழத்தை வாங்கி விற்கத் தொடங்கினர். இப்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வங்கதேசம், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ‘கே.ஜி. ஃப்ரெஷ் டேட்ஸ்’ என்ற பெயரில் பேரீச்சம் பழங்களை விற்றுவருகிறார் முருகவேல்.

பேரீச்சம் பழத்தைப் பொறுத்தவரை, ஜூலை முதல் செப்டம்பர்வரை அறுவடைக் காலம். ஆரம்பத்தில் ஒரு மரத்தில் 30 கிலோ கிடைத்த நிலையில், தற்போது 200 முதல் 300 கிலோ வரை பேரீச்சம் மகசூல் கிடைக்கிறது. உயர் தரம் கிலோ ரூ.300-க்கு விற்கிறார். தோட்டத்தில் எவ்வித ரசாயன உரத்தையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகிறார். வழக்கமாகத் தென்னையைத் தாக்கும் வண்டுத் தாக்குதல் இதற்கும் உண்டு. இயற்கை முறையாலும் உரிய பராமரிப்பாலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

பணப் பயிருக்கு மாற்றான சாகுபடி

தென்னை மரத்துக்குத் தேவைப்படுவதைப் போல மூன்று மடங்குக்கு மேல் தண்ணீர் தேவை. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பூக்கத் தொடங்கும். 120 நாட்களில் காயை அறுவடை செய்யலாம். ஏறத்தாழ 60 நாட்களுக்கு மகசூல் கிடைக்கும்.

சுமார் இரண்டு மீட்டர் ஆழத்துக்குப் பாறைகள், மணற்பாங்கான நிலத்தில் இதைச் சாகுபடி செய்யலாம். வறட்சியைத் தாங்கி வளரும் என்றாலும், அதிகத் தண்ணீர் தேவை. 2014-ல் ஏற்பட்ட வறட்சியின்போது, லாரி தண்ணீரைத் வாங்கிச் சமாளித்திருக்கிறார்கள். இந்தப் பயிருக்கான மகரந்தச் சேர்க்கை செயற்கை முறையில் இருக்கும்.

தனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூ வரும்போது மகரந்தத்தைச் சேகரித்து, பெண் மரங்களின் பூக்களில் தெளிக்கிறார்கள். மழை, பறவைகளிலிருந்து பாதுகாக்கவும், தூசு படாமல் இருப்பதற்காகவும் மரத்தில் குலைதள்ளியுள்ள காய்களை பிளாஸ்டிக் கவர்களால் போர்த்துகிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதைச் சாகுபடி செய்யலாம். கவனமாகப் பராமரிக்க வேண்டியிருப்பதால், மிகுந்த அக்கறை, அர்ப்பணிப்புடன் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, அவர்கள் சாகுபடிசெய்ய முருகவேல் உதவுகிறார். திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகள் இறக்குமதி செய்து இந்தியாவில் வளர்க்க முடியும்.

ஆரம்பத்தில் முதலீடு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், திட்டமிட்டு விற்பனை செய்தால் சில வருடங்களிலேயே அதிக லாபம் ஈட்ட முடியும் என்கிறார் அவர். ஒருமுறை நடவு செய்யப்பட்ட பேரீச்சம் மரம், சுமார் 80 ஆண்டுகளுக்கு பலன் தரும். தற்போது குஜராஜ், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு பயிரிடப்படுகிறது. தமிழக விவசாயிகளும் பணப் பயிர்களுக்கு மாற்றாக, இந்தப் பழப் பயிரைச் சாகுபடி செய்து பார்க்கலாம்.

முருகவேலைத் தொடர்புகொள்ள: 9865150060

அவரது நிறுவனத்தின் இணைய தள முகவரி: www.kgfreshdates.com


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *