தர்மபுரியில் 32 வகை பேரீட்சை சாகுபடி செய்து விவசாயி அசத்தல்!

தர்மபுரி அருகே 32 வகையான பேரீட்சை 11 ஏக்கரில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்துள்ளார். அவற்றின் நாற்றுகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் அரேபிய பேரீட்சை அமோக விளைச்சலை கண்டுள்ளது.

வறட்சியால் விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்துவிட்டது.

இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நிஜாமுதீன் (52) என்ற விவசாயி, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் இருந்து, பேரீட்சை நாற்றுகளை வாங்கி வந்து, இங்கு சாகுபடி செய்தார். தற்போது பேரீட்சை மரங்களில், பழங்கள் குலை, குலையாக பழுத்து தொங்குகின்றன. இதன் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.

உள்ளூர் சிறு வியாபாரிகள், சில்லறை விற்பனைக்கு அவற்றை வாங்கி சென்றனர். இது குறித்து நிஜாமுதீன் கூறியதாவது:

அரேபிய நாட்டில் வேலை செய்த போது, விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பேரீட்சை நர்சரி பண்ணைக்கு சென்று வந்தேன்.

அங்கு சாகுபடி, வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி எடுத்து கொண்டேன். அங்கிருந்து 250 பேரீச்சை கன்றுகள் வாங்கி வந்து நட்டேன்.

தர்மபுரியின் தட்பவெட்ப நிலை பேரீச்சை கன்று வளர்ப்பதற்கு ஏற்றதாக அமைந்தது. பின்னர் இதனை, 11 ஏக்கரில் பேரீட்சை பண்ணையாக மாற்றினேன்.

கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள், வேளாண்மையியல் மாணவர்கள் வந்து பார்த்து வளர்ப்பு, பராமரிப்பு குறித்து கேட்டு தெரிந்து செல்கின்றனர்.

மேலும் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்தும் பேரீட்சை கன்றுகள் வாங்கி செல்கின்றனர்.

தற்போது வெளிநாட்டிற்கு நாற்றுகள் ஏற்றுமதியாகிறது. நேற்று தாய்லாந்திற்கு 2,500 பேரீட்சை நாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 32 வகையான பேரீட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் அறுவடை தொடங்கி உள்ளது. ஜூலை மாதம் வரை இந்த சீசன் இருக்கும் ஒரு கிலோ பேரீட்சை 100 முதல் 300 வரைக்கும் தோட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பாலைவனங்களில் மட்டுமே விளையும் பணம் கொழிக்கும் பயிரான பேரீட்சை, தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வறட்சியால் விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, பேரீட்சை ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தர்மபுரியில் 32 வகை பேரீட்சை சாகுபடி செய்து விவசாயி அசத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *