மத்திய, மாநில அரசுகளின் சேமிப்பு கோடவுன்களில் ‘டன்’ கணக்கில் அரிசி, தானியங்கள் மூடைகளாக அடுக்கி வைத்து சேமிக்கின்றனர். உணவு தானியங்களில் இருந்து உற்பத்தியாகும் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகள் பல்கி பெருகி கோடவுன்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருமளவு பரவி வருகிறது. கடும் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. வீரியமான பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் இவைகளை கட்டுப்படுத்த இயலவில்லை.
உணவு பொருள் சேமிப்பு கோடவுன்கள் முறையாக பாதுகாக்கப்படாததால் ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கான டன் எடையளவு உணவு பொருட்கள் வீணாகி வருகிறது.
‘மண் பூச்சு’ தொழில்நுட்பம்சரந்தாங்கி கிராம மக்கள் உணவு தானியங்கள் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகளின் தாக்குதல் இன்றியும், பல ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் மண் பூச்சு தொழில்நுட்ப முறையை பாரம்பரியமாக கையாண்டு வருகின்றனர்.
மண் பூச்சு முறையில் பாதுகாக்கப்படும் தானியங்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பின் பயன்படுத்தும்போது தானியங்கள் மீது மதிப்புக்கூட்டு அதிகரித்தும், நுண்ணுாட்ட சத்துக்கள் அபரிமிதமாக இருப்பதாகவும் இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
தானியங்கள் மீது ‘மண் பூச்சு’விவசாயி நல்லம்மாள்:
- ஒரு ஏக்கரில் துவரையை ஆடியில் விதைத்து, தையில் அறுவடை செய்தோம்.
- ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது கிடையாது.
- பழமையான இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
- இந்தாண்டு மழை இல்லாததால் விளைச்சல் குறைவு. எனினும் 5பேருக்கு ஓராண்டுக்கு தேவையான துவரை கிடைத்தது.
- துவரம் பருப்பு கெட்டுப்போகாமல் இருக்க செம்மண்ணை பாத்திரத்தில் வைத்து தண்ணீர் கலந்து, அதில் தானியங்களை நன்கு பிரட்டி எடுத்து வெயிலில் பரப்பி காய வைக்க வேண்டும்.
- நன்றாக காய்ந்த துவரம் பருப்பை பாத்திரத்தில் சேமிக்க வேண்டும்.
- பல ஆண்டு கெட்டுப்போகாது மசால் கடலை போல் துவரம் பருப்பு முழுவதும் படர்ந்திருக்கும் செம்மண் கலவை எளிதாக உதிராது.பருப்புடன் கெட்டியாக ஒட்டிக்கொள்ளும்.
- இவற்றை மாதம் ஒரு முறை வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி செய்யும்போது நான்கு ஆண்டுகள் வரை பருப்பு கெடாது. புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளி அண்டாது.
- தேவைப்படும் போது செம்மண் கலந்த பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பை தண்ணீரில் கழுவி சமைக்க பயன்படுத்தலாம்.
- இயற்கை முறையில் பதப்படுத்தப்படும் துவரம் பருப்பு மதிப்புக்கூடியும், நுண்ணுாட்ட சத்துக்கள் அபரிமிதமாக இருக்கும். மண் பூச்சு முறை அனைத்து தானியங்களுக்கும் பொருந்தும், என்றார்.-கா.சுப்பிரமணியன், மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்