பல்வேறு வகையான பயிர்களைச் சாகுபடி செய்வதால் அதிக லாபத்தையும் பெற முடியும். இந்த முறையில் விவசாயி சொக்கலிங்கம் கோழிக்கொண்டை பூ பயிர் சாகுபடி செய்து, அதில் அதிகப்படியான லாபத்தையும் பெற்று வருகிறார்.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அருகேயுள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சொக்கலிங்கம். இவர், தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் வாழை, முருங்கை, கத்தரி, சம்பங்கி உள்ளிட்ட பயிர்களை சாகுபடிசெய்து வரும் நிலையில், சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள கோழிக்கொண்டை பூ அவருக்கு அதிக மகசூலைத் தந்துள்ளது.
அரியலூர் மாவட்டப் பகுதியில் விவசாயிகள் பலரும் மலர் சாகுபடிசெய்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இதை அறிந்த சொக்கலிங்கமும் மலர் சாகுபடியில் இறங்கியுள்ளார்.
மலர் சாகுபடிசெய்ய ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும் தனது குடும்பத்தினரைக் கொண்டே பூக்களைப் பறித்துத் தினமும் சந்தைக்கு அனுப்பிவைக்கிறார்.
இந்தப் பூவின் விதைகள் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை நிலத்துக்கு ஏற்ற அளவு கடையில் வாங்கி வந்து, நாற்றங்கால் மூலம் வளர்த்து, அதைப் போதுமான இடைவெளி விட்டு நட்டு முறையாகப் பராமரித்து வரும் நிலையில், 40-வது நாளில் பூக்கும் நிலையை அடைந்து விடுகிறது.
தொடர்ந்து, 90 நாட்கள்வரை பூ கிடைக்கிறது. குறைந்தபட்சமாக ஒரு கிலோ பூ ரூ.20லிருந்து விலை போகிறது. வியாபாரிகளே வந்து எடுத்துச் செல்வதாக சொக்கலிங்கம் சொல்கிறார். பண்டிகை நாட்களில் அதிகபட்சமாக கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20 கிலோவும் அதிகபட்சம் 60 கிலோவரையும் பூக்கள் கிடைப்பதாக அவர் சொல்கிறார்.
குறைந்தபட்சமாக ரூ.600 முதல் அதிகட்சமாக ரூ.2,000 வரை நாள் ஒன்றுக்கு வருமானம் கிடைக்கிறது. மேலும், ஒருநாள் விட்டு ஒரு நாள் பூ பறிக்கும்போது அதிக பூக்கள் கிடைக்கும். பூக்கள் அதிகமான விளைச்சல் இருக்கும்போது பாதிப் பூக்களை கும்பகோணம் பகுதிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கிறார்.
“தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தண்ணீர் குறைவாக எடுத்துக்கொள்ளும் பயிர்களைக் கண்டறிந்து அவற்றைச் சாகுபடிசெய்வது முதல் உத்தி. அதிலும் குறுகிய காலத்தில் விளைச்சல் கொடுக்கும் பயிர்களைச் சாகுபடி செய்வதால் குடும்பத்துக்குத் தேவையான வருவாயை உடனடியாக பெற முடியும்.
கரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகம்தான். ஆனால், அதற்கு வருடம் முழுவதும் உழைப்பைத் தரவேண்டும். தண்ணீரும் அதிகம் வேண்டும். குறுகிய காலப் பயிர்களை நாம் பயிரிடும்போது குறைந்த நாட்களில் வருவாயை ஈட்டுவதோடு செலவும் குறைவாகவே ஆகும்” என்கிறார் சொக்கலிங்கம்
பொதுவாக மலர் சாகுபடியில் இறங்கும் விவசாயிகள் பண்டிகை நாட்களைக் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம் என சொல்லிங்கம் வலியுறுத்துகிறார். கோயில் திருவிழாக் காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் கொண்ட மாதங்களில் பூக்கள் அறுவடைக்கு வரும் நிலையில் பயிர்சாகுபடி செய்யும் பட்சத்தில், அதிக லாபம்பெற வாய்ப்பிருப்பதாகவும் அவர் சொல்கிறார்.
இந்த மலர்ச் சாகுபடி குறைந்த அளவு நிலம் கொண்டவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். சாகுபடியில் சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். சொட்டு நீர்ப் பாசனத்தில் பயிரிடும்போது குறைவான அளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. இதேபோல், சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்களும் பயிரிட ஏற்புடையவை. குறைந்த நாட்களில் அதிக மகசூல் கிடைப்பதோடு, பணப் புழக்கத்துக்கு இந்தக் கோழிக்கொண்டை பூ சாகுபடி சிறப்பானது.
சொக்கலிங்கம் தொடர்புக்கு: 7502606005 .
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்