தேனீ வளர்ப்பில் சாதிக்கும் பொறியாளர்!

பல ஆயிரம் சம்பளம், பதவி உயர்வு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஆகியவற்றை அளித்த மென்பொருள் துறையைக் கைவிட்டுவிட்டு, தேனீ வளர்ப்பில் பல புதுமைகளைச் செய்துவருகிறார் கிருஷ்ணமூர்த்தி.

கரூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பொறியியல் பட்டதாரி. படித்து முடித்ததும், பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களில் மென்பொருள் துறையில் பல ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றிவந்தார். பெருநகர வாழ்க்கை, மென்பொருள் துறையின் அழுத்தம் காரணமாக வேலையைத் தொடர அவருக்கு விருப்பமில்லை. குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி வேலையைத் துறந்தார். மனம் தளராமல், தனது தேடுதலைத் தொடர்ந்தார்.

Courtesy: Hindu

தேடல் நிறைவு

ஓராண்டு காலத் தேடலில் அவருக்குக் கிடைத்ததுதான் தேனீ வளர்ப்பு. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அவருடைய நண்பர்கள் மூலம், இது தொடர்பான பல்வேறு தகவல்களைத் திரட்டினார். எந்த முன்அனுபவமும் இல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு முன் தேனீ வளர்ப்பில் இறங்கினார். அதில் அவர் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளுக்கு யாரும் தீர்வு தரவில்லை. தனக்குக் கிடைத்த அனுபவத்தில் இருந்து, அவரே ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வைக் கண்டறிந்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் தேன் உற்பத்தி மேற்கொண்டுவருகிறார். இதற்காக இத்தாலியத் தேனீக்களை வாங்கியிருக்கிறார்.

பல வகை தேன்

தேனீ வளர்ப்பில் தனித்தன்மையை விரும்பிய அவர், ஒரே வகையான மலர்களில் இருந்து பெறப்படும் தனித்தன்மை வாய்ந்த தேனை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார். ஒரே வகை மலர் தேனைப் பெறுவதற்காகக் கொத்தமல்லி, செங்காந்தாள், மா, முருங்கை, சூரியகாந்தி, வேம்பு உள்ளிட்ட பல வகையான தேனைத் தற்போது உற்பத்தி செய்துவருகிறார்.

ஒவ்வொரு வகை மலரில் இருந்து பெறப்படும் தேனுக்கும் வித்தியாசமான மணம், நிறம், சுவை இருக்கும். எந்த வகை மலர்களில் இருந்து தேனைச் சேகரிக்க விரும்புகிறாரோ, அந்தத் தாவரம் அதிகமுள்ள தோட்டங்களில் தேனீ வளர்க்கும் பெட்டிகளை வைத்துத் தேனைச் சேகரிக்கிறார்.

இதன் மூலம் பயிர் உற்பத்தி 30 சதவீதம்வரை அதிகரிக்கிறது. தேனீக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பதால், தங்கள் தோட்டத்தில் தேனீ பெட்டியை வைக்க விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். தேனீ வளர்ப்பு குறித்துப் பயிற்சியும் வழங்கி வருகிறார்.

நல்ல விலை

பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட தேன், பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான சிறப்புத் தேனையும் கிருஷ்ணமூர்த்தி உற்பத்தி செய்துவருகிறார். தரமான தேன் என்றால் நல்ல விலை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயங்குவதில்லை.

மக்களுக்கு நியாயமான விலையில் தேனை வழங்கவும், உற்பத்திச் செலவு கட்டுப்படியாகவும் தானே நேரடியாகத் தேன் விற்பனையை மேற்கொண்டுள்ளார். தேன் கிலோ விலை ரூ. 716. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்குப் பார்சல் மூலம் தேனை வீட்டுக்கு அனுப்புகிறார்.

இணையதளம்: www.honeykart.com

கிருஷ்ணமூர்த்தி தொடர்புக்கு: 09150370525

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “தேனீ வளர்ப்பில் சாதிக்கும் பொறியாளர்!

  1. pandi selvan says:

    இன்றைய இளைஞர்களுக்கு நல்ல விழிப்புணர்வு.
    விவசாயம்,சொந்தமான சுய தொழில் வளர என் வாழ்த்துக்கள்.

  2. pandi selvan says:

    மூர்த்தி சார் முதலில் உங்கள் முயற்சிக்கு அடியேனின் நனறிகள் கோடி.
    உங்களை பார்த்து மற்ற இளைய உள்ளங்களும் மனம் திருந்தி விவசாயத்தை இறை சேவையாக எண்ணி, செயல்படுத்தி வெளிநாட்டு வேலை என்னும் அடிமை நிலையை மறந்து குடும்பத்துடன் என்றும் மகிழ்வுடன் வாழ இன்னும் இதுபோன்ற தொழில் முறைகளை பகிருங்கள் சார்.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *