காய்கறி, பழ சாகுபடி போலவே ஆண்டுமுழுவதும் சீரான வருவாய் கொடுப்பது மலர் சாகுபடி. இதனால் பல விவசாயிகள் தற்போது மலர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தினசரி மலர்களை பறித்து விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்பதால் மலர் சாகுபடிக்கு எப்போது மவுசு இருந்து வருகிறது. தினசரி வருவாய் ஈட்ட விரும்பும் விவசாயிகளுக்கு மலர் சாகுபடி வரப்பிரசாதமாக உள்ளது.
இந்த வரிசையில் மல்லிகை, சம்பங்கி போல ரோஜா மலர் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிகஅளவு ரோஜா பயிரிடப்பட்டு வருகிறது. அங்கு நிலவும் குளிர்ந்த சீதோஷண நிலை ரோஜா சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தற்போது விவசாயிகள் ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தச்சூர் பகுதியில் ரோஜா சாகுபடி செய்து வரும் இளைஞர் சரவணன். இதுபற்றி அவர் கூறியதாவது
‘‘எங்கள் குடும்பம் பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. அதனால் பட்டதாரியான நான், ஆர்வம் காரணமாக விவசாயத்திற்கு வந்தேன். எங்கள் நிலத்திலும் வழக்கம் போல் நெல் பயிரிட்டு வந்தோம். எங்கள் பகுதியில் நெல் சாகுபடி பிரபலம் என்பதால் அதை தொடக்கத்தில் செய்து வந்தோம். பின்னர் வாழை, காய்கறிகள் என வேறு சில பயிர்களை சாகுபடி செய்தோம். புதிய சிந்தனைகளையும், நவீன சாகுபடி முறைகளையும் விவசாயத்தில் புகுத்தினேன்.
அரசு அதிகாரிகள், மற்ற விவசாயிகள் என பல தரப்பினரையும் சந்தித்துப் பேசினேன். விவசாயத்தில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதால் அதில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் புதிய புதிய தகவல்கள் கிடைத்தன. இதற்கு ஏற்றபடி, எனது விவசாய திட்டங்களை வடிவமைத்தேன்.
புதிய தொழில்நுட்பமும், நவீன சிந்தனைகளும் எனக்கு கைகொடுத்தன. வாழை, பப்பாளி போன்ற பழங்களை சில ஆண்டுகளுக்கு முன் சாகுபடி செய்தேன். பின்னர், கத்திரிக்காய், மிளகாய், தக்காளி போன்ற காய்கறி சாகுபடியும் நல்ல வருவாய் கொடுத்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளேன். குறிப்பாக ரோஜா மலர் ஆண்டு முழுவதும் சராசரி வருவாய் தருவதாக, அதை சாகுபடி செய்த விவசாயிகள் சொன்ன தகவலின்பேரில் இதை சாகுபடி செய்தேன்.
மலர் சாகுபடி ஏன்?
பல்வேறு வகையான மலர்களுக்கும் பொதுவாகவே தேவை உள்ளது. குறிப்பாக ரோஜா மலருக்கு ஆண்டு முழுவதும் நமது பகுதிகளிலேயே தேவை இருக்கிறது. நடவு செய்து பல ஆண்டுகளுக்கு பயன் தரும் என்பதால் ரோஜா சாகுபடியை தேர்வு செய்தேன். அத்துடன் தினசரி வருமானம் ஈட்ட முடியும் என்பதால் இது, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனது நிலத்தில் வேறு சில பயிர்களும் பயிர் செய்துள்ளேன். ஒரு ஏக்கரில் ரோஜா பயிரிட்டுள்ளேன். பட்டன் ரோஸ் எனப்படும் சிகப்பு ரோஜா சாகுபடி செய்துள்ளேன். தொடக்க நிலையிலேயே ரோஜா சாகுபடி லாபகரமாக உள்ளது.
வெப்பமான பகுதியில் சாகுபடி செய்ய முடியுமா?
ரோஜாவை பொறுத்தவரை குளிர் பிரதேசதங்களில் நன்கு வளரும். அதேசமயம் மற்ற பகுதிகளிலும் வளரும் தன்மை உண்டு. அதிகமான வெப்பம் இருக்கும் கோடை காலத்தில் அதன் வளர்ச்சியும், மகசூலும் குறைவாக இருக்கும். மற்றபடி வெப்பம் உள்ள பகுதியிலும் ரோஜாவை பயிரிட முடியும்.
கடுமையான கோடை வெயில் காலத்தில் ரோஜா மலர்களின் மகசூல் சற்று குறைவாக இருக்கும். அதேசமயம் குளிர்காலங்களில் மகசூல் அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் வருவாய் ஈட்ட முடியும் என்பதால் சராசரி லாபம் கிடைக்கும். திருமண சீசன், விழாக்காலங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதால் ரோஜாவை பொறுத்தவரை நல்ல விலை கிடைக்கும். உள்ளூரிலேயே தேவை இருப்பதால் இங்கேயே விற்பனை செய்து விடுகிறேன்.
சாகுபடி செய்யும் முறை
ஒரு ஏக்கர் நிலத்தில் 10 டன் தொழு உரமிட்டு, உழ வேண்டும். பின்னர் ஒரு ஆழம் வீதம், 5க்கு 5 என்ற இடைவெளி விட்டு ரோஜா செடியை வாங்கி நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு, 2,000 செடிகள் வரை நடவு செய்யலாம். பட்டன் ரோஸ், முக்குத்தி ரோஸ் என அழைக்கப்படும் இந்த சிகப்பு ரோஜா செடிகள், தோட்டக்கலைத்துறை அல்லது தனியார் நர்ஸரிகளில் கிடைக்கிறது. ஒரு செடி 10 முதல் 12 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.
செடிகளை நடவு செய்த மூன்றாம் நாளில் இருந்து தண்ணீர் விட வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட வேண்டும். குளிர்ந்த சூழல் நிலவினால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடலாம். ஒரு மாதத்திற்கு பிறகு கலப்பு உரங்கள் இட வேண்டும். ஒரு செடிக்கு 50 கிராம் முதல் 75 கிராம் வரை கலப்பு உரங்களை கணக்கிட்டு தர வேண்டும். பொதுவாக மாதம் ஒருமுறை கலப்பு உரமும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொழு உரமும் இட்டால் செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
நோய், பூச்சித் தாக்குதல்
ரோஜா செடிகள் வளர்ந்து பலன் தர ஆறு மாதங்கள் வரை ஆகும். செடிகள் குறிப்பிட்ட அளவு வளர்ந்தவுடன் பூச்சித் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அஸ்வினி பூச்சியின் பாதிப்பு இருக்கும். அதுபோலவே, சாம்பல் நோய் அல்லது இலைக்கருகல் நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதுபோன்ற சமயங்களில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து தேவையான பூச்சி மருந்து அல்லது நோய்க்கான மருந்து தெளிக்க வேண்டும்.
ஆறு மாதத்திற்கு பிறகு மகசூல் கிடைக்கத் தொடங்கும். தொடக்கத்தில் நாள்தோறும் ஏக்கருக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பின்னர், இது அதிகரிக்கும். செடி நட்டு பராமரித்து வந்த ஒராண்டுக்கு பின் ஏக்கருக்கு நாள்தோறும் 30 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகமான வெயில் இருக்கும், 3 மாதங்கள் மகசூல் சற்று குறையும். மற்ற சமயங்களில் சராசரியான மகசூல் இருக்கும். செடி நடவு செய்து 7 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.
சிகப்பு ரோஜாவுக்கு சராசரியாக கிலோ ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்ய முடியும். தேவை அதிகமாக இருக்கும் காலங்களில், கிலோ 200 – 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் மாதந்தோறும் ஏக்கருக்கு சராசரியாக ரூ.30,000 வரை லாபம் ஈட்டலாம். அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. செலவை பொறுத்தவரை ரோஜா பறிப்பதற்கு கூலி, மருந்து செலவு என ரூ. 7,000 வரை செலவு ஆகிறது.
தக்க பராமரிப்பும், கவனத்துடன் கண்காணித்தால் ரோஜா சாகுபடி சிறந்த முறையில் வருவாய் கொடுக்கும். 7 ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது.
இவ்வாறு விவசாயி சரவணன் கூறினார்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்